,

கரோனா கிலோ என்ன விலை?

லாக்டவுன் முடிந்து கடைகள் சைஸ் வாரியாக திறக்க துவங்கியிருக்கிறது. பழையபடி சகஜ நிலை எப்பொழுது திரும்பும் என்பது தெரியாது. பல தொழில்கள் இனி சகஜ நிலைக்கு திரும்புமா என்பதே சந்தேம் தான். வாழ்க்கையை அடக்கி வியாபாரத்தை முடக்கிய கரோனா பிசினஸ் சிலபஸ்ஸை மொத்தமாய் மாற்றியிருக்கிறது. புதிய விதிகளை புரிந்துகொண்டு தொழிலில் மாற்றங்கள் செய்பவர்கள் மட்டுமே செகண்ட் இன்னிங்க்ஸ் ஆட களத்தில் அனுமதிக்கப்படுவார்கள். அதெல்லாம் எதற்கு, பழையபடி ஷட்டரை திறந்து கல்லாவில் அமர்ந்து கரன்சியை எண்ணி ரப்பர் பாண்ட் வைத்து கட்டினால் போதும் என்று நினைப்பவர்களை பார்த்து கரோனாவே பரிதாபப்படும். விற்கும் பொருளை, செய்யும் தொழிலை, புரியும் மார்க்கெட்டிங்கை மாற்றியமைக்க வேண்டியது இனி காலத்தின் கட்டாயம்.

விற்கும் பொருள்களில் மாற்றங்கள்

கொரோனா சாஸ்வதம் அல்ல. மருத்து கண்டுபிடித்துவிடுவார்கள். அதற்காக உங்கள் பொருள்களை மீண்டும் சாஸ்வதமாய் விற்க துவங்கலாம் என்று நினைக்காதீர்கள். கொரோனா மக்களை கொஞ்ச நஞ்சம் பயமுறுத்தவில்லை. உயிரை கையில் பிடித்துகொண்டு வாங்கும் பொருள்களில் கிருமி இருக்கிறதா என்று பூதக்கண்னாடி கொண்டு பயத்தோடு பார்க்கும் அளவிற்கு பூச்சாண்டி காட்டியிருக்கிறது. வாங்கும் பொருள்கள் பாதுகாப்பானதா என்று வாடிக்கையாளர்கள் பார்க்கிறார்கள். அதனால் உங்கள் பொருள்களை கொரோனா ப்ரூஃப் ஆக்கும் வழியைத் தேடுங்கள்.

நான் விற்கும் பொருளுக்கு இதெல்லாம் சாத்தியப்படாது என்று வியாக்கியானம் பேசாதீர்கள். ’பீட்டர் இங்கிலாண்ட்’ தான் விற்கும் சட்டை துணியை துளசி மற்றும் வேப்ப இலையின் குணங்கள் கொண்டு தயாரிக்கமுடியுமா என்று பார்க்கிறது. ’டோனியர்’ தான் விற்கும் கோட் சூட்டை ஆண்டி-வைரலாக்க வழி தேடுகிறது. ‘பாட்டா’ ஆண்டி பாக்டீரியா ஷூ செய்யலாமா என்று யோசிக்கிறது. யார் கண்டது, இந்நேரம் உங்கள் போட்டியாளர்கள் தங்கள் பொருள்களை இது போல் பாதுகாப்பானதாக்கும் வழி தேடிக்கொண்டிருக்கலாம். பழையபடியே பொருளை விற்கலாம் என்றிருந்தால் உங்கள் பொருள் பழைய பேப்பர் கடையில் போடப்படும், உஷார்!

செய்யும் தொழிலில் திருத்தங்கள்

பல காலம் பார்க்காமல் இருந்து பார்க்கும் போது மனிதர்கள் முதல் மரங்கள் வரை மாறியிருப்பதைப் பார்க்கிறோம். செய்யும் தொழில் மட்டும் இதற்கு விதிவிலக்கா. தானாக மாறாவிட்டாலும் நீங்களாக மாற்றவேண்டும். மாற்ற வேண்டியிருக்கும். வந்திருப்பது கரப்பான்பூச்சி அல்ல, கரோனா. வீட்டில் முடங்கிக் கிட, தள்ளி நில், கை அலம்பு என்று ஜபர்தஸ்தாய் ஆர்டர் செய்து மக்களை மாஸ்குடன் மூளையில் மண்டியிட்டு மருந்து வரும் வழி பார்த்து மன்றாட வைத்திருக்கும் அரக்கன்!

தொழிலை பழையபடி செய்துகொண்டிருக்க முடியாது. செய்தால் தொழிலதிபர் மட்டுமல்ல அவர் செய்யும் தொழிலுக்கே மாஸ்க் அணிவிக்கப்படும். தொழிலில் என்னென்ன மாற்றம் தேவை என்பதை சல்லடை போட்டு தேடுங்கள். சேலம் நகரிலுள்ள ‘நாலெட்ஜ் பிசினஸ் ஸ்கூல்’ தங்கள் எம்பிஏ மாணவர்களுக்கு ஆன்லைன் வீடியோ வகுப்புக்கள் நடத்தும் வகையில் தங்கள் பாடம் எடுக்கும் முறைகளை மாற்றியமைத்திருக்கிறது. ஹோம் வர்க் செய்யாத மாணவர்களை ஹோமிலிருந்தே ஒர்க் செய்ய வைத்திருக்கிறது! செய்யும் தொழிலை கரோனா காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றுங்கள். வேவைப்பட்டால் பிசினஸ் மாடலை கொரோனா தாக்கத்திற்கு தகுந்த வகையில் தேற்றுங்கள். உங்கள் தொழிலின் ஆயுள் கூடும்.

புரியும் மார்க்கெட்டிங்கில் புதுமைகள்

மார்க்கெட்டிங் என்றால் விளம்பரம் என்று பலர் நினைக்கிறார்கள். அக்கிரமத்திற்கு தப்பாட்டம் இது என்று கரடியாய் கத்தினாலும் பலர் காதில் விழுவதில்லை. காதை பொத்திக்கொண்டிருந்தால் எப்படி விழும். இனியும் இப்படி இருந்தால் தொழிலை எந்த சானிடைசர் போட்டு கழுவினாலும் காப்பாற்ற முடியாது. மார்க்கெட்டிங் என்பது வாடிக்கையாளரை அறிந்து அவர் தேவையை புரிந்து அதை மற்றவர்களை காட்டிலும் பெட்டராக தீர்த்து அதை கொல்லிக்காட்டிக்கொண்டே இருக்கும் செயல்பாடுகளின் கலவை. இது கரோனா காலம், பாதி கடைகள் திறக்கவில்லை, மீதி கடைகளில் கூட்டமில்லை, இதில் எங்கிருந்து பொருளை விற்பது என்று சால்ஜாப்பு கூறினால் சப்ஜாடாய் தொழிலை மூடவேண்டியது தான். உங்கள் பொருளின் அவசியத்தை வாடிக்கையாளர் உணர என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள். நெருக்கடி காலத்தில் உங்கள் பொருளுக்கு மக்கள் முன்னுரிமை தர என்ன செய்வது என்று யோசியுங்கள்.

கரோனா வந்த பிறகு தான் பல ஆண்களுக்கு தங்கள் வீட்டில் சமையல் அறை எங்கிருக்கிறது, எப்படி இருக்கிறது என்றே தெரிந்திருக்கிறது. இன்று பலர் தாங்களே சமையல் செய்வது முதல் மணைவிக்கு உதவுவது வரை கிச்சனில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள். இதை தங்களுக்கு சாதகமாக்கும் வண்ணம் நாமக்கல் நகரைச் சேர்ந்த ‘அர்பன் ஹோம்ஸ்’ என்ற ஃபர்னிச்சர் கடை வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ஈமெயில் மூலம் வாடிக்கையாளர்களிடம் ‘இப்பொழுது புரிகிறதா உங்கள் மணைவி சாதாரண கிச்சனை கட்டிக்கொண்டு எப்படி கஷ்டப்படுகிறார் என்று. அவளுக்கு நீங்கள் தாஜ் மஹால் கட்டித்தரவேண்டாம், அட்லீஸ்ட் ஒரு அழகான மாடுலர் கிச்சன் ஆர்டர் செய்து தரலாமே. எங்களை அழையுங்கள். உங்கள் வீடு தேடி வந்து செய்து தருகிறோம்’ என்று விளம்பரப்படுத்துகிறது. என்ன அழகான ஐடியா பாருங்கள். சமையல் ரூமில் வேர்க்க விறுவிருக்க மணைவிக்கு உதவிவிட்டு வந்து அமரும் கணவன் வாட்ஸ் அப்பில் இந்த மெசேஜை படித்தால் அர்பன் ஹோம்ஸ் கடையை உடனே அழைப்பாரா மாட்டாரா. இவ்வகை மார்க்கெட்டிங் தான் இனி உங்கள் தொழிலுக்கு ஆக்சிஜன் தரும் வெண்டிலேட்டர் என்பதை உணருங்கள்!

உலகம் அழியப் போவதில்லை. ஆனால் நிறைய மாறப்போகிறது. தொழிலில் முழுமையான மாற்றம் செய்யும் முறைகளை முழு நேரம் சிந்தித்து முனையுங்கள். தொழில் தழைக்க அல்ல, பிழைக்கவே இது அவசியம். புரிந்தவர்கள் தொழிலுக்கு தடுப்பூசி தரப்படும். மாற மறுக்கும் தொழில்கள் சோஷியல் டிஸ்டன்சிங் செய்யப்படும்!