லைட்ஸ். காமிரா. டேஞ்சர்.
இந்தியாவில் தியேட்டர்கள் இப்பொழுது தான் மெல்ல திறக்க துவங்கியிருந்தாலும் தினமும் ந்யூஸ்பேப்பர்கள் முதல் செய்தி சேனல்கள் வரை, பத்திரிக்கைகள் முதல் சோஷியல் மீடியா வரை சினிமாவை மிஞ்சும் ஆக்ஷன், ஃபைட் சீன், அடிதடி, அனல் தெறிக்கும் வசனங்கள் தூள் பறக்கிறது. எல்லாம் சில சினிமாகாரர்களின் போதை மருந்து மேட்டர் தான். இந்தி பட உலகில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாய் உருவான இந்த போதை பொருள் சூறாவளி தென் மேற்கு திசையில் நகர்ந்து கன்னட திரையுலகில் கரையேறி கலக்க துவங்கியிருக்கிறது. இதனால் தமிழக, தெலுங்கு, மலையாள திரையோரங்களில் எச்சரிக்கை எண் ஏழு ஏற்றப்பட்டிருக்கிறது. யார் கண்டது, போதை விவகாரம் இங்கும் விமரிசையாக நடந்திருந்து விரைவிலேயே எச்சரிக்கை எண் ஏற்றும் கொடி கம்பமே காணாமால் போகும் ரேஞ்சிற்கு சுறாவளி, சுனாமி தாக்கினாலும் சொல்வதற்கில்லை. ஏற்கனவே நசநசவென்று வதந்தி மழை பிசுபிசுவென்று பெய்யத் துவங்கியிருக்கிறது. என்ன ஆகப்போகிறதோ. ஈஸ்வரோ ரஷது!
இந்த லட்சணத்தில் இந்தி திரையுலகைச் சேர்ந்த சில பெரும்புள்ளிகள் சில ஆங்கில டீவி செய்தி சேனல்கள் மீது வழக்கு போட்டிருக்கிறார்கள். ஏதோ பத்து பதினைந்து பேர் இழுத்த புகைக்கு மொத்த இந்தி துறைக்கும் நெருப்பு வைக்கலாமா, தகாத வார்த்தைகளில் திட்டலாமா என்று அவர்களுக்கு அசாத்திய கோபம். வாஸ்தவம் தான். பாதி பேர் செய்தாலும் மீதி பேரையும் சேர்த்து சொல்வது தப்புத் தான். இதே சினிமா துறையை சேர்ந்த சிலர் சகட்டு மேனிக்கு போலீஸ்காரர்கள், டாக்டர்கள், வக்கீல்கள், தொழிலதிபர்கள் அனைவரும் அயோக்கியர்கள் என்பது போல் சித்தரித்து படம் எடுக்கும் போது இந்த அறிவு அவர்களுக்கு லவசேசம் எட்டியிருக்கலாம். தனக்கென்று வந்தால் தான் தெரிகிறது வலியும் வேதனையும்.
அவர்கள் போட்ட கேஸ் பூட்டா கேஸ் ஆகுமா என்று எனக்கு தெரியாது, ஆனால் இந்த கூத்தைப் பார்க்கும் போது பழைய பழமொழி ஒன்று நினைவிற்கு வருகிறது: ‘புருஷன் அடிச்சது பரவாயில்லையாம், பக்கத்து வீட்டுக்காரி சிரிச்சது வலிச்சுதாம்’!
சினிமா துறை எப்படியோ போகட்டும். பிரச்சனை அதுவல்ல. அட்லீஸ்ட் இந்த கட்டுரைக்கு. என் கவலை சினிமாகாரர்களின் பிரபலத்துவத்தை மூலதனமாக்கி அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி தங்கள் ப்ராண்டுகளை விளம்பரம் செய்யும் மார்க்கெட்டர்களின் கதியை நினைத்து. அவர்களை பார்த்தால் எனக்கு ஒரு பக்கம் கோபம் வருகிறது, இன்னொரு பக்கம் பாவமாகவும் இருக்கிறது.
விற்கும் பொருளை பிரபலமாக்கவேண்டும் என்று பிசினஸ்மேன் நினைப்பது நியாயமே. அதற்கு வழி பிரபலங்களை கொண்டு விளம்பரம் செய்வது என்று அவர்கள் நினைக்கும் போது தான் வில்லங்கம் வக்கனையாய் வீடேறி வந்து விளக்கேற்றுகிறது. பொருளை பிரபலமாக்கும் ஒரே வழி அதை ப்ராண்டாக்குவது தான் என்று எத்தனை சொன்னாலும் இவர்களுக்கு தெரிவதில்லை. எந்த பொருளின் க்ராண்ட் வெற்றிக்கும் வித்திடுவது அதை ப்ராண்டாய் மாற்றும்போது என்று கரடியாய் கத்தினாலும் கேட்பதில்லை.
ப்ராண்ட் என்றால் என்ன? வாடிக்கையாளர் தேவையை மற்றவைகளை விட பெட்டராய் பூர்த்தி செய்து வாடிக்கையாளர் மனதில் தனித்துவமாய் தெரியும் வித்தை. இதை செய்தால் எதற்கு வாடிக்கையாளரை கெஞ்சிக்கொண்டு. அவரே ப்ராண்ட் இருக்கும் இடம் தேடி வந்து க்யூவில் நின்று வாங்குவாரே. வெற்றிகரமான ப்ராண்டுகள் இதை தான் செய்தன. செய்கின்றன. செய்யவேண்டும்.
மற்றவர்கள் செய்வதையே வித்தியாசம் இல்லாமல் தானும் செய்து தனித்துவமே இல்லாமல் கூட்டத்தோடு கோவிந்தா போடுவதால் தான் பொருட்கள் கஸ்டமர் கண்ணில் படுவதில்லை. அவரை கவர விளம்பரம் செய்து அதுவும் பத்தாமல் சினிமா, விளையாட்டு பிரபலங்களுக்கு கோடி கோடியாய் கொட்ட வேண்டியிருக்கிறது. அப்படி செய்து தொலைத்தாலாவது ப்ராண்ட் பிரபலமாகிறதா என்றால் அதுவும் இல்லை. பிரபலம் தான் இன்னும் பிரபலமாகிறாரே ஒழிய விளம்பரப்படுத்தப்படும் பொருள் போட்ட இடத்திலேயே பெட்டிப் பாம்பாய் படுத்திருக்கிறது.
பல மார்க்கெட்டர்கள் நாட்டிலுள்ள பிரபலங்களை மேலும் பிரபலப்படுத்தியே தீருவேன், அவர்களுக்கு பணத்தை கொண்டு சென்று கொட்டுவேன் என்று கங்கனம் கட்டிக்கொண்டு அதை மகேசன் திருப்பணியாய் செய்துகொண்டிருக்கிறார்கள். செய்துவிட்டு போகட்டும். அதற்கு தங்கள் ப்ராண்டுகளை நேர்ந்து விட்டு அவைகளை நோகடிக்க வேண்டுமா என்பது தான் கேள்வி.
பத்தா குறைக்கு இன்று நடப்பது போல் பல பிரபலங்கள் திருத்தல யாத்திரை போல் போதை மாத்திரை போட்டுக்கொண்டு தேவ நித்திரையில் மூழ்கும்போது அவர்களை வைத்து விளம்பரம் செய்யும் ப்ராண்டுகளின் கதி என்னவாகும்? வேறென்ன, காசி யாத்திரை சென்று கர்மத்தை தொலைக்கவேண்டியது தான்!
ஏதோ ஒரு பிரபலம் போதை மருந்து போட்டால் ப்ராண்ட் என்னய்யா பண்ணும் என்று பரிதாபமாய் கேட்பவர்கள் பணிவான கவனத்திற்கு. பிரபலத்தின் தன்மைகள் மற்றும் குணாதிசயங்கள் ப்ராண்டுக்கும் பரவலாய் பரவி அது பொலிவுடன் புவியாள வேண்டும் என்று தானே அவர்களை வைத்து விளம்பரம் செய்கிறார்கள். அந்த பிரபலம் பலான மேட்டரிலோ போதை மருந்து போட்டு மாட்டிக்கொண்டால் மட்டும் பார்ப்பவர் அதை மறந்து ப்ராண்டை மட்டும் பார்க்கவேண்டுமாக்கும். இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராய் தெரியவில்லை. ப்ராண்டின் பிரபலம் போலீஸ் ஸ்டேஷனுக்கும் கோர்ட்டுக்கும் நடையாய் நடந்தால் அவரோடு சேர்ந்து ப்ராண்டும் அல்லவா நடையாய் நடந்து ஓடாய் தேயும்!
அதெல்லாம் கிடையாது, அப்படியெல்லாம் நடக்காது என்று இன்னும் வெள்ளந்தியாய் நினைத்துக்கொண்டிருந்தால் உங்கள் அறிவு கண்ணைத் திறந்து அதற்கு ஒரு மூக்கு கண்ணாடியும் மாட்டவேண்டியிருக்கிறது. அமெரிக்காவில் பல காலமாய் ‘னைக்கி’ ஷூ கால்ஃப் வீரர் ‘டைகர் உட்ஸ்’ஸை வைத்து விளம்பரம் செய்து வந்தது. ஒரு நாள் அவர் ‘செட் அப் மேட்டர்’ தெரிந்துபோய் அவர் மணைவி அவரை ரோடிலேயே துரத்த அந்த மேட்டர் ஊரெல்லாம் பரவி சந்தி சிரித்தது. இப்பேற்பட்ட ஆளை வைத்தா ஷூ விளம்பரம் எடுத்தாய், பிடி சாபம் என்று சுமார் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கஸ்டமர்கள் நைக்கியை இனி சிந்தையாலும் தொடேன் என்று சத்தியம் செய்தனர். நைக்கிக்கு ஒன்றே முக்கால் மில்லியன் டாலர் நஷ்டம். எல்லாம் எதனால்? னைக்கி கோடி கோடியாய் கொண்டு கொட்டிய டைகர் தன் பசிக்கு புல்லை தின்னப் போனதால்!
இது இப்படி என்றால் அடிகர் திலகம் ‘ஜாக்கி சான்’ கதை வேறு மாதிரி. அவர் சினிமாவில் நடிக்காத நேரத்தில் பல நாடுகளில் விளம்பரங்களில் தோன்றி எலக்ட்ரிக் பைக், சாஃப்ட்வேர் என்று பல ப்ராண்டுகளை பிரபலப்படுத்துபவர். அவர் போறாத வேளை, அவர் விளம்பரப்படுத்திய பல ப்ராண்டுகளில் ப்ராப்ளம் தோன்றின. அவர் பிரபலப்படுத்திய ஷாம்பு ப்ராண்ட் புற்று நோய் ஏற்படுத்தும் என்று ஒரு செய்தி பரவியது. அவர் ஒப்புதல் அளித்த ஆட்டோ ரிப்பேர் பள்ளி ஏமாற்று கேஸில் மாட்டிக்கொண்டது. அவர் நடித்த கம்ப்யூட்டர் கம்பெனி திவாலாகியது. இப்பொழுது அங்கெல்லாம் ஜாக்கி சான் பற்றி பேசும் போது ‘அவரு எல்லாரையும் அடிச்சு வெளுப்பாரு. அவர வச்சு விளம்பரம் செய்யற ப்ராண்டையும் சேர்த்து’ என்று கிண்டல் செய்கிறார்கள்!
இவ்வளவு ஏன், இந்தியாவில் சில வருடங்களுக்கு முன் ‘ஸ்னாப் டீல்’ என்னும் ஈகாமர்ஸ் கம்பெனி ‘அமீர் கானை’ வைத்து பல நாள் விளம்பரம் செய்தது. அந்த கம்பெனிக்கு சனி அமீர் கான் ரூபத்திலேயே வந்தது. இந்தியாவில் வாழவே பயமாயிருக்கிறது என்று ஒரு நாள் அறிக்கை விட நாடே கொந்தளித்தது. ’உன்னை வளர்த்த இந்நாட்டில் உனக்கு வாழ முடியலன்னா பாகிஸ்தான் போயேன்’ என்று ஆயிரக்கணக்கானவர்கள் கோபத்தை காட்டும் வகையில் தங்கள் செல்ஃபோனிலிருந்து ‘ஸ்னாப் டீல்’ ஆப்பை டிலீட் செய்ய அந்த ப்ராண்ட் ‘அய்யா சாமி, எங்களுக்கு அமீருக்கும் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று ஒதுங்கினாலும் விற்பனைச் சரிவை சரிசெய்யவே முடியவில்லை. ஸ்னாப் டீல் ஸ்னாப் டல்லானது!
இத்தனை நடந்தும் இதைப் பற்றி இந்துவில் கட்டுரைகள் எழுதப்பட்டும் நானாக பட்டுக்கொள்ளும் வரை திருந்தமாட்டேன் என்று பலர் இன்னும் பிரபலங்களிடம் பல கோடிகள் அழுது அவர்கள் போதை பாதையில் போய் ஊரே பார்த்து சிரிக்க தங்கள் ப்ராண்டும் பாழாவதைப் பார்த்துக்கொண்டு திக்குத் தெரியாமல் தவிக்கிறார்கள். தேவையா இந்த தலையெழுத்து!
இதை சொன்னால் ‘ஏகப்பட்ட ப்ராண்டுகள், எக்கச்சக்க விளம்பரங்கள் இருக்கும் போது என் ப்ராண்டை எப்படி எல்லார் கண்ணிலும் படவைப்பதாம்’ என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள் மார்க்கெட்டர்கள். பிரச்சனையே அது தானே. நீங்கள் பணம் கொடுத்து வாங்குவது பிரபலத்தின் முகமும் உங்கள் ப்ராண்டிற்கான ஒப்புதலும் மட்டும் இல்லையே. கூடவே இலவச இணைப்பாக அவருடைய தகாத செயல்கள், இமாலய தவறுகள், வரலாறு காணாத ஸ்காண்டல்கள், தெரியாத விஷயங்களை கூட தெரிந்தது போல் உதிர்க்கும் உளறல்கள் எல்லாவற்றையும் அல்லவா சேர்த்து வாங்குகிறார்கள். பிரபலங்கள் பிரச்சனையிலும் ப்ராப்ளமிலும் சிக்கும் போது அவர்களோடு சேர்ந்து ப்ராண்டும் தெருவிற்கு வருகிறது. அதோடு கம்பெனிக்கும் கெட்ட பெயர் வந்து சேர்கிறது. இப்படியா கேட்டு வாங்கி தூக்கு மாட்டிக்கொள்வது!
ஒருவன் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை அவன் நிரபராதி என்பது சட்டம். ஆனால் மக்கள், மீடியா, சோஷியல் மீடியா உலகில் குற்றம் சாட்டப்பட்டாலே அவன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்படுகிறதே. பிரபலத்தை தூக்கி நிறுத்திய அதே கும்பல் அவரை தூக்கியெறியவும் தயாராக இருக்கிறதே. பிரபலம் பிரபலவீனம் ஆகிறாரே. சனிப் பிணம் தனிப்போகாது என்பது போல் கூடவே ப்ராண்டும் பாதாளம் பயனிக்கிறதே.
ப்ராண்டை பிரபலமாக்கும் வழி அதை பிரபலங்கள் தயவில் விட்டு ‘ஆனது ஆகட்டும்’ என்று இருப்பதல்ல. வாடிக்கையாளர் தேவையை புரிந்து அதை மற்றவர்களை விட பெட்டராய் பூர்த்தி செய்து ப்ராண்டில் புதுமைகளை புகுத்திக்கொண்டே இருந்து அவர்களுக்கு எப்பொழுதும் ரெலவெண்ட்டாய் இருப்பது தான். அப்படி செய்தால் எந்த ப்ராண்டும் பிரபலங்கள் இல்லாமலேயே பிரபலமாகும். வேலியில் போகும் ஓனானை வேட்டியில் விட வேண்டியிருக்காது!