மார்கெடிங் என்பது பொருள்களைப்
பற்றியதல்ல என்று சொன்னால் ஆச்சரியமாய் இருக்கிறதா? நீங்கள் விற்பது பொருளாய் இருக்கலாம்.
ஆனால் வாடிக்கையாளர் வாங்குவது பொருள் அல்ல. அவர் வாங்குவது ஒரு வேல்யூ. பொருள் தரும்
பயனை. உதாரணத்திற்கு, வாடிக்கையாளர் பல்ப் வாங்கவில்லை, வெளிச்சத்தை வாங்குகிறார்.
தெளிவாய் குழிப்பி விட்டேனா?
வாடிக்கையாளருக்கு தேவை வெளிச்சம்.
இன்று அதை அளிப்பது பல்ப் என்பதால் அதை வாங்குகிறார். வெளிச்சம் தரும் ஃபேன் கண்டுபிடிக்கப்பட்டால்
எதற்கு பல்பை வாங்கிக்கொண்டு. பேசாமல் அந்த ஃபேனை வாங்கினால் போகிறது. அதனால் தான்
அவர்கள் வாங்குவது பல்ப் அல்ல, வெளிச்சத்தை. நாம் வாடிக்கையாளருக்கு விற்பது பொருளை
அல்ல; அவர் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு பயனை.
பொருளை விற்கிறோம் என்று நினைப்பவர்களுக்கு
மார்க்கெட்டிங் இரண்டு படிகளை கொண்ட சமாச்சாரம் போல் தோன்றும்: பொருளை செய்வது. செய்த
பொருளை விற்பது. இப்படி நினைப்பது தப்பாட்டம். தோல்வியை கேட்டு வாங்கும் தொலைபேசி அழைப்பு.
பல பொருட்கள் விற்க முடியாமல் மார்க்கெட்டில் விக்கி, போட்டியில் சிக்கி, கடையில் மக்கி
மண்ணாகிப் போகும் மூல காரணம்.
சில காலம் முன் ’டிவிஎஸ்’ கம்பெனி
’ஜைவ்’ என்ற ப்ராண்டை அறிமுகப்படுத்தியது. கியர் இல்லா பைக்குகள் என்றார்கள். அமோக
டெக்னாலஜி, அமர்க்கள சவாரி, அட்டகாசமான வண்டி என்று அலறினார்கள். மக்களுக்கு அந்தச்
சத்தம் கேட்டதா? பைக் பிடித்ததா?
க்ளட்சையும் கியரையும் சேர்த்து
பிரயோகிக்கும் ஆனந்தத்தை தராத இதை வாங்குவதற்கு பதில் மொபெட் தேவலை என்று மக்கள் நினைத்தார்களோ
என்னவோ, ஜைவ் பக்கம் யாரும் டைவ் அடிக்கவில்லை. வந்த சுவடு தெரியாமல் நொந்த ப்ராண்டானது
ஜைவ்.
பொருளைச் செய், அதன் பின் விற்க
முற்படு என்று மார்க்கெட்டிங்கை இரண்டு படிகளாகப் பார்த்ததால் பெற்ற அடி, விளைந்த சோகம்,
விதிக்கப்பட்ட சாபம் இது. இப்படி மார்க்கெட்டர் நினைப்பதால் தான் பொருள் வாடிக்கையாளருக்கு
பயன்படுமா, அவர்களுக்கு தேவையா என்று சிந்திக்க மறக்கிறார்கள். தோல்வியடைகிறார்கள்.
மார்க்கெட்டிங் என்பது வாடிக்கையாளருக்கு
தரும் ‘வேல்யூ என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் போது மார்க்கெட்டிங் மூன்று படிகள் கொண்டது
என்பது விளங்கும்.
முதல் படி: வேல்யூவை தேர்ந்தெடுப்பது
வாடிக்கையாளருக்கு என்ன வேல்யூ
தரவேண்டும் என்பதை முதலில் முடிவு செய்யவேண்டும். எந்த பயன் வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி
செய்யும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதை செய்ய நமக்கு தேவை வகைப்படுத்தல்,
குறி வைத்தல், இடம் பிடித்தல். அதாவது Segmentation,
Targeting, Positioning (STP).
மார்கெட் என்பது பல வகை வாடிக்கையாளர்களால்
ஆன ஒரு சங்கமம். அவர்கள் தேவைகள், குணாதிசயங்கள், விநோதங்கள் போன்றவற்றைக் கொண்டு பொருள்
பிரிவை பல பிரிவுகளாக பிரிக்கலாம். பிரிக்க வேண்டும். இதன் பெயர் வகைப்படுத்தல். பின்,
போட்டியிட நினைக்கும் மார்க்கெட்டை தேர்ந்தெடுத்து அதிலுள்ள பிரிவுகளில் எந்தப் பிரிவை
சேர்ந்த வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்ய முடியும் என்பதைக் கண்டறிய வேண்டும். இது
தான் குறி வைத்தல். மூன்றாவதாக, தேர்ந்தெடுத்த பிரிவின் வாடிக்கையாளர்களின் பிரத்யேக
தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ப்ராண்டை உருவாக்கி அதை அவர்கள் மனதில் பதிய வைக்க
வேண்டும். இது தான் இடம் பிடித்தல்.
STP என்ற இந்த மூன்றின் கலவை தான் மார்கெடிங்கின் முதல் படி. அதாவது
வேல்யூவை தேர்ந்தெடுப்பது. இதை எப்படி திறம்பட செய்வது என்பதை வரும் இதங்களில் விரிவாகப் பார்ப்போம்.
இரண்டாவது படி: வேல்யூவை வடிவமைப்பது
என்ன வேல்யூ என்று முடிவு செய்த
பின் அடுத்து தேர்ந்தெடுத்த வேல்யூவை பொருளாய் வடிவமைக்க வேண்டும். எந்த வாடிக்கையாளர்களை
குறி வைத்தோமோ அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வேல்யூவை வடிவமைக்க வேண்டும்.
அதாவது அவர்களுக்கேற்ற பொருளை செய்யவேண்டும்.
ஆர்அண்ட்டி, பொருள் வடிவமைப்பு
துறை, தயாரிப்பு நிர்வாகம், ஆபரேஷன்ஸ் டீம் அனைவரிடமும் ப்ராண்ட் ஐடியாவை விளக்கி
‘அவர்களை ஒரு சேர சிந்திக்க வைத்து ப்ராண்டை தயாரிக்க வேண்டும்.
மூன்றாவது படி: வேல்யூவை வழங்குவது
மார்க்கெட்டர் என்ற முறையில்
நாம் வாடிக்கையாளருக்கு ஒரு வேல்யூ தருகிறோம். அடுத்து அவர் தேவையைப் பூர்த்தி செய்யக்
கூடிய பொருளை தயாரிக்கிறோம். அதன் பின், அப்பொருள் வாடிக்கையாளருக்கு எளிதாகச் சென்றடையத்
தேவையான விநியோக முறைகளை வரையறுக்க வேண்டும். அப்பொருள் என்ன விலை பெறும், என்ன விலை
கொடுத்து வாங்க வாடிக்கையாளர் முன்வருவர் என்பதைக் கண்டறிந்து அப்பொருளுக்கு உண்டான
விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். இறுதியாக, அப்பொருளை வாடிக்கையாளருக்கு அறிமுகம் செய்து
அவரைக் கவர்ந்து வாங்கச் செய்யத் தேவையான அனைத்து விற்பனை மேம்பாட்டுச் செயல்களைச்
செய்ய வேண்டும்.
இந்த மூன்று படிகளைக் கொண்டது தான் மார்க்கெட்டிங்கின் புதிய பரிமானம். போட்டி மிகுந்த இன்றைய வியாபார சந்தையில் வெற்றி பெறுவதின் ரகசியம் இதுவே. அப்படி வெற்றிப் பெற்ற ஒரு ப்ராண்டை பார்போம்.
’ஸ்கூட்டி’. ஜைவ்வை அறிமுகப்படுத்தி
தோல்வி கண்ட அதே ‘டீவிஎஸ்’ கம்பெனி தயாரிப்பு தான் இதுவும். மார்க்கெட்டில் சக்கைப்
போடு போடுகிறது. ரோடெங்கும் சகட்டு மேனிக்கு ஓடுகிறது. பெண்களின் பேரதரவு பெற்று பெரு
வாழ்வு வாழ்கிறது!
டீவிஎஸ் முதல் படியாக தாங்கள்
தரப்போகும் வேல்யூவை தேர்ந்தெடுத்தது. எத்தனையோ வாடிக்கையாளர் பிரிவுகள் இருக்க, கல்லூரி
செல்லும் பெண்களை தன் செக்மெண்டாய் தேர்வு செய்தது. மொபெட் என்பது ஆண்கள் ஓட்டும் வண்டியாய்,
சாமான் தூக்கவும், சரக்கேற்றவும் பயன்படும் வண்டியாய் போனதால் கல்லூரி பெண்களுக்கு
நவீன வடிவில், சுகமாய் பிரயானிக்க ஏதுவான ஸ்கூட்டரெட் என்ற பொருள் வடிவை தேர்ந்தெடுத்தது.
ஸ்கூட்டரெட் என்பது மொபெட்டிற்கு
ஒரு படி மேலே. ஆனால் ஸ்கூட்டருக்கு ஒரு படி கீழே. செய்யப் போகும் வண்டி பெண்களைக் கவரும்
வண்ணம் அமைய ’எதற்கு மற்றவர்களை நம்பிக் கொண்டு, எங்கு செல்லவேண்டுமோ அங்கு நீங்களே
செல்லலாம், உங்களை ஃப்ரீயாக்க வந்த உங்கள் தோழி இவள்’ என்ற தொனியில் பொசிஷனிங் செய்தது.
க்யூட்டாக ஸ்கூட்டி என்று அதற்கு பெயரும் இட்டது.
அடுத்து, அந்த கனவு வண்டியை
பெண்கள் கவரும் வண்ணம் தயாரித்தது. கல்லூரி பெண் என்பதால் அவர்களுக்கு பிடிக்கும் வண்ணம்
பல வண்ணங்களில் தயாரித்தது. அதாவது தேர்ந்தெடுத்த வேல்யூவிற்கு ஏற்றபடி வடிவமைத்தது.
பின், அந்த வேல்யூவை வாடிக்கையாளருக்கு
சரியான விலை கொண்டு, ஊரெங்கும் ஷோரூம் திறந்து, அவர்கள் மனதை கவரும் வண்ணத்தில் விளம்பரம்
செய்து கொண்டு சேர்த்தது. பெண்களும் ஸ்கூட்டி தான் தங்கள் வாழ்வின் ப்யூட்டி என்று
சீட்டி அடித்து வாங்க ப்ராண்டின் விற்பனை பட்டி தொட்டி எங்கும் பிய்த்துக்கொண்டு பறந்தது
வெற்றிக் கொடி நட்டது.
வெற்றி பெற ப்ராண்டுகள் புரிந்துகொள்ள வேண்டியது மார்க்கெட்டிங்கின் இந்த புதிய பரிமானம். புரிந்துகொள்ளாமல் தொழில் செய்தால் ஜைவ் போல் பெறலாம் நெற்றியில் பெரு நாமம்!