’இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது’ என்ற பராசக்தி வசனம் போல் தொழில் உலகம் பல
விசித்திரமான விஷயங்களை சந்தித்திருக்கிறது. எல்லா தொழில்களையும் அரசாங்கம் தான் நடத்தித் தொலைக்கவேண்டும் என்ற காலம் மாறி வெளிநாட்டு கம்பெனிகள் கூட இங்கு தாராளமாய் கடை திறக்கலாம் என்பது வரை, தொழில் துவங்க ஒன்பதாயிரம் சட்டதிட்டங்கள் இருந்த கெடுபிடி முதல் ‘சிங்கிள் விண்டோ க்ளியரன்ஸ்’ வசதி தருகிறோம் என்று மாநில அரசாங்கங்களின் அழைப்பு வரை நம் நாட்டு தொழிலில் தான் எத்தனை மாற்றங்கள்.
அனைத்தையும் மீறி ஒரு விஷயம் மாறாதிருக்கிறது என்றால் அது நம் நாட்டில் நிலவி வரும் ’குடும்ப தொழில்’ கோட்பாடு தான். அப்பா திறந்த கடையை இன்று அவரோடு
சேர்ந்து மகன் நடத்த மூன்றாம் தலைமுறை பேரன் எம்.பி.எ படித்து ஃபாஸாகி வந்த கையோடு அவனுக்கும் கல்லா அருகில் புது
சேர் போடப்பட்டுவிட்டது.
இது ஏதோ தமிழ் கூற் நல்லுலகத்தில் மட்டும் நடந்தேறும் கதையல்ல. நாடெங்கும் இதே குடும்ப கதை தான். இந்தியாவில் உள்ள டாப் இருபது தொழில் குழுமங்களில் பதினைந்து இது போன்ற குடும்ப தொழில்களே என்று புள்ளி விவரம் கூறுகிறது. இந்த நாட்டிலுள்ள தொழில்களில் 80%
தொழில்களை குடும்பங்கள் தான் நடத்துகின்றன என்கிறது இன்னொரு ரிப்போர்ட்.
பலசரக்கு கடை முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை பெரும்பாலான தொழில்களை குடும்பங்களே நிர்வாகம் செய்கின்றன.
இது தவறில்லை.
விதை விதைத்தவன் விவசாயம் செய்யலாம் தான். ஆனால்,
இன்று பல குடும்பங்கள் அடித்துக்கொண்டும், அறுத்துக்கொண்டும் கோர்ட், கொலைவெறி என்று திரிவதால் தான் பிரச்சனை உருவாகிறது. அவர்கள் குடும்பங்களில் மட்டுமல்ல. அவர்கள் நடத்தும் தொழிலிலும்.
அது என்னவோ தெரியல என்ன மாயமோ புரியல,
பெரும்பாலும் குடும்ப தொழில்கள் மூன்றாவது தலைமுறை தாண்டுவதில்லை. அபிராமி அபிராமி என்று ஆராதிக்காமல் ’அடிடா அவனை’
என்று அடித்துக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.
’பிர்லா’
குடும்பம் முதல் ‘பஜாஜ்’ குடும்பம் வரை இதே
சோக கதை தான். அம்பானி குடும்பம் அனைவரையும் விட பெரியதல்லவா. அதனால் இரண்டாவது தலைமுறையிலேயே சட்டையைப்
பிடித்துக்கொண்டு நின்றனர்!
குடும்பம் பிரிந்தால் உறவுகள் பிரியும். அது வீட்டுப் பிரச்சனை. அவ்வளவே. அதே குடும்பம் ஒரு கம்பெனியை நிர்வகிக்கும் போது வீட்டோடு தொழிலையும் பாதிக்கிறது. கம்பெனியில் பணிபுரிபவர் பிரச்சனையாகிறது. சமூகத்தின் பிரச்சனையாகிறது. நாட்டின் பிரச்சனையாகிறது.
அதற்காக எல்லா குடும்பங்களும் கழுத்து மென்னியை பிடித்துக்கொண்டு நிற்கும் ரகமல்ல. ஜெர்மனியைச் சேர்ந்த ’மெர்க்’ என்ற கம்பெனி 1668ல் குடும்பத் தொழிலாய் பிறந்து இன்று வரை ஜர்க் இல்லாமல் ஸ்மூத்தாய் பயனிக்கிறது. இந்தியாவில் கூட 1897ல் ஆரம்பித்த ’காட்ரேஜ்’ அவர்கள் பீரோவைப் போல் இன்றும் ஸ்ட்ராங்காகவே சௌக்கியமாக இருக்கிறது. நம்மூரைச் சேர்ந்த ’முருகப்பா க்ரூப்’ முருகன் அருளால் நூறு வருடங்களாக முன்னனியில் நின்று முன்னேறி வருகிறது.
இந்தியாவில்
குடும்ப தொழில்கள் கண்டிப்பாய் தழைக்கும் என்று கூறும் சிலர் தொழில் வளர்ச்சிக்கு
குடும்பங்களின் பங்களிப்பு அவசியமானது என்கின்றனர். தெரிந்த தொழிலை அடுத்த தலைமுறைக்கு கற்றுத் தந்து வழி நடத்திச் செல்லவும் பொருளும்
பணமும் குறையாமல் தொழில் தழைக்கவும் குடும்பங்களின் பங்களிப்பு முக்கியமானது.
அதுவும் பெரிய அளவு ஃபினான்ஷியல் வல்லமை பெறாத இந்தியா போன்ற வளரும்
நாடுகளில் குடும்ப தொழில்களே பிரதானம் என்கின்றனர்.
இப்படி
கூறுவதை எதிர்க்கும் கூட்டமும் உண்டு. மாறி வரும் உலகில், நாளொரு தொழிற்நுட்பமும் பொழுதொரு
புதிய ப்ராண்டும் பிறக்கும் இன்றைய காம்பெடிடிவ் கால கட்டத்தில் குடும்பங்கள்
கையில் பிசினஸ் என்பது எதன் கையிலோ தரப்பட்ட பூமாலை; பூட்டா
கேஸ் என்று கூறுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
இவர்கள்
அடித்துக்கொண்டு கிடக்கட்டும். நீங்கள் குடும்ப
தொழில் நடத்துகிறீர்களா? சண்டை சச்சரவு இல்லாமல் சாத்வீகமாய்
கூட்டு வியாபாரம் செய்து சக்சஸை குடும்பத்தோடு சந்தோஷமாக கொண்டாடவேண்டும் என்று
ஆசைப்படுபவரா? இதோ உங்களுக்கான சில
டிப்ஸ். குடும்பத்தோடு சேர்ந்து படியுங்கள்!
பேசித் தீருங்கள். தீர்த்துவிட்டு பேசாதீர்கள்!
பேசித் தீர்க்க முடியாத பிரச்சனை ஏதுமில்லை. குடும்ப தொழிலை நிர்வகிப்பவர்கள் ஒன்றாக
அமர்ந்து பேசினாலே பாதி
பிரச்சனைகள் தோன்றாது. சின்ன மனஸ்தாபங்களை கூட முடிவெடுக்காமல் விடுவதில்லை என்று வைராக்கியத்துடன் கூடிப் பேசுங்கள். பேசும் போது உங்கள் அனைவரையும் முறைப்படுத்த பட்டிமன்ற நடுவர் போல் ஒரு ஆலோசகரை அமர்த்திக்கொண்டாலும் தப்பில்லை.
தமிழகமெங்கும் கடை திறந்து விரிந்து வெற்றிப் பெற்றிருக்கும் மதுரையைச் சேர்ந்த ‘தங்கமயில் ஜுவல்லரி’ கட்டுக்கோப்பான ஒரு குடும்பத் தொழிலாகவே இன்றும் திகழ்கிறது. சிறிய கடையாய் துவங்கிய சகோதரர்கள் வளர்ந்து விரிந்தாலும் இன்று வரை தங்கள் குடும்பங்களோடு சேர்ந்து மாதம் ஒரு முறை மனம் விட்டு அனைத்து விஷயங்களையும் பேசுகிறார்கள். பேசுவதென்றால், ஆபீஸ் போகும் வழியில் அரக்க பரக்க காபி உறிஞ்சிக்கொண்டே அவசரத்தில் பேசுவதல்ல. ஆர அமர அனைவரும் முறையாக அமர்ந்து ஆன்மீக மீட்டிங் போல் அமைதியாக பேசுகிறார்கள். பேசுவதோடு நில்லாமல் என்ன பேசப்பட்டது, என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்ற மீட்டிங் மினிட்ஸ் எடுத்து எழுத்து பூர்வமாக அனைவருக்கும் தருகிறார்கள்.
ஒளிவுமறைவு இல்லாத பேச்சு பரிவர்த்தனையே தங்கள் வெற்றி ரகசியம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.
அதோடு குடும்பத்தின் பிணைப்பு தான் தங்கள் தொழிலின் அஸ்திவாரம் என உணர்ந்து செயல்படுகிறார்கள். அதானாலேயே குடும்பத்தோடு தங்கள் தொழிலையும் தழைக்க வைக்க முடிகிறது இந்த கூட்டு குடும்பத்தால்.
மகள்களையும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்
பல குடும்ப தொழில்களில் மகள்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இது என்ன கன்றாவி? கேட்டால், இன்னொரு வீட்டிற்கு செல்லவேண்டியவள் தானே என்று பதில் வருகிறது. பிறகு ஏன் பெற்றீர்கள்? கைவசம் கல்லிப் பால் கிடைக்கவில்லையா? பெற்ற மகள் தானே. உங்கள் ரத்தம் தானே. உங்கள் திறமை அவளுக்கும் இருக்குமே. சொல்லப் போனால் பல தொழில்களில் மகன்களை விட மகள்கள் இன்னமும் கூட திறமையாக நடத்துவார்கள். அவர்களையும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இந்திரா நூயி என்ற சென்னையை சேர்ந்த பெண்ணால் ’பெப்சிகோ’ நிறுவன சியிஓவாக உலகெங்கும் வெற்றிகரமாக வலம் வர முடியுமென்றால் உங்கள் மகளால் முடியாதா என்ன. ‘காட்ரெஜ்’
கம்பெனியை இன்று வெற்றிகரமாக வழி நடத்திச் செல்வது அக்குடும்பத்தின் மகள்கள் தானே. நம்மூரிலேயே
‘டஃபே’ கம்பெனியை திருமதி மல்லிகா ஸ்ரீனிவாசன் திறம்பட
நடத்தி வரவில்லையா?
வீடு வரை உறவு. ஆபீஸ் வரை அல்ல.
குடும்பத் தொழில் நசிய ஒரு முக்கிய காரணம் ப்ரஃபஷனலிஸம் இல்லாத நிர்வாகம். ஆசைக்கு பிறந்த பிள்ளையை ஆபீசில் சேர்க்கவேண்டும் என்ற அவசியமில்லை. காதல் மணைவியை கட்டிய பாவத்திற்கு அவள் உடம்பிறப்பை உங்களோடு பணியில்
சேர்க்கவேண்டிய கட்டாயமில்லை. கொடுக்கும் வேலையை செய்து முடிக்கும் திறமை இருக்கிறதா என்று பாருங்கள். ஓனர்ஷிப் வேறு, நிர்வாகம் வேறு. இது இரண்டையும் போட்டு சேர்த்துக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
நிர்வாகங்களுக்கு தேவை ப்ர்ஃபஷனலிஸம். விருப்பு வெறுப்பில்லாமல் கம்பெனி நிர்வாகத்திற்கு யார் பொருத்தமானவரோ அவரை நியமித்து, நிர்வாகத்திற்கு எது தேவையோ அதை செய்வது தான் ப்ரஃபஷனலிஸம்.
பொறுப்பை ஒருவருக்கு கொடுத்த பின் அவர் உங்கள் மகனே ஆனாலும் அவர் வேலையில் குறிக்கிடாதீர்கள். அவருக்கு கீழ் உள்ளவர்களை அழைத்து விசாரிப்பது, அவர்களுக்கு உத்தரவுகள் போடுவது என்பது தப்பாட்டம். கிரிக்கெட் மாட்சில் ஆளாளுக்கு அவரவர் இஷ்டப்படி ஃபீல்டிங் அமைத்தால் எப்படி இருக்கும் என்பதை யோசித்துப்
பாருங்கள்.
குழந்தைகளுக்கு வெளி உலகை காட்டுங்கள்
படிப்பு முடித்த கையோடு பிள்ளைகள் நேராக கடை சாவியை வாங்கவேண்டும் என்று தான் பல தொழிலதிபர்கள் நினைக்கின்றனர்.
முடிந்தவரை அப்படி செய்யாதீர்கள். பிள்ளைகளை அவர்கள்
படிப்பிற்கேற்ப, உங்கள் தொழிலிற்கேற்ப வெளி கம்பெனிகளில் சில காலம் பணி புரிந்து அனுபவம் பெற்று வர செய்யுங்கள்.
புதிய கம்பெனி,
புதிய சூழல், புதிய உலகை உங்கள் பிள்ளைகள் சுவாசிக்கட்டும். புதிய படிப்பினைகள் பெறட்டும். புதிய சிந்தனைகள் ஊறட்டும். அதை கற்று வந்து உங்கள் தொழிலில் அதை பயன்படுத்தினால் உங்கள் தொழில் இன்னமும் வேகம் பிடிக்கும். காலகாலம் தழைக்கும்.
ஃபெயில் ஆகாமலிருக்க உயில் எழுதுங்கள்
Succession planning என்று ஒன்று இருப்பதே பல தொழிலதிபர்களுக்கு தெரியமாட்டேன் என்கிறது.
நாம் யாரும் சாஸ்வதம் கிடையாது. இது தெரிந்தும் அடுத்து யார், எப்படி பிரிப்பது,
தொழிலை எப்படி நடத்துவது என்பதையெல்லாம் தெளிவாக எழுதி வைத்துவிட்டு இரவு படுக்க போவது உசிதம். இல்லையென்றால் அடுத்த தலைமுறை அடித்துக்கொண்டு தான் நிற்கும். அரசியல் கட்சிகள் முதல் அம்பானி குடும்பம் வரை இந்த கன்றாவி காட்சி
தருவதை பார்த்தும் பலர் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்!
இருக்கும் போதே அடுத்த தலைமுறைக்கு வழி விட்டு அவர்களை வழிநடத்திச் சென்றால் இந்த பிரச்சனை வராது. அடுத்த தலைமுறையில் யார் எந்த பொறுப்புக்கு சிறந்தவர் என்று கண்டறிந்து அவரை அந்த பொறுப்புக்கு க்ரூம் செய்து வளர்ப்பது குடும்பமும் தொழிலும் சேர்ந்து தழைக்க உதவும்.
தலைமுறை இடைவெளிக்கு இடம் கொடுங்கள்
உங்களுக்கு தியாகராஜ பாகவதர் பாடல் பிடிக்குமென்றால் ஆபிசில் அனைவருக்கும் போட்டுக் காட்டாதீர்கள். நீங்கள் இன்னமும் டைப்ரைட்டரை கட்டிக்கொண்டு அழுகிறீர்கள் என்பதற்காக கம்பெனிக்கு புதிய ரக கம்ப்யூட்டரையும் புதுமையான சாஃப்ட்வேரையும் வாங்கித் தரமாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்யாதீர்கள். புதிய உலகம், புதிய வாடிக்கையாளர்கள் நிறைந்த உலகம் இது. புதுமையான சிந்தனைகள் தேவை. பழையதை கட்டிக்கொண்டு பஞ்சாங்கமாய் பணி புரியாதீர்கள். அதே போல் பேரன்களும் பெரியவர்களை ‘யோவ் பெரிசு சும்மா கிட’ என்று ஒதுக்காமல் மூத்தவர்களின் அனுபவத்தை கேட்டுப் பெறுங்கள்.
அழகான கூட்டுக் குடும்பங்கள் ந்யூக்கிளியர் குடும்பங்களாக தேய்ந்து வரும் காலம் இது. கூட்டுத் தொழில்களும் காலப்போக்கில் தேய்ந்து அவ்வழியே செல்லவேண்டிய அவசியமில்லை. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. வாழ்க்கையில் மட்டுமல்ல. வியாபாரத்திலும் கூட.