போர் அடிக்கிறது. ஒரு இருபது வருடங்கள் பின்னோக்கி சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று இருக்கிறேன். சும்மா இருந்தால் வாங்களேன்.

ரைட், 1994க்கு வந்திருக்கிறோம். ரோட்டில் கூட்டம், கார்கள், இரைச்சல், ட்ராஃபிக் இல்லை. எஸ்யூவீ கார்கள், லேப்டாப், இன்டர்னெட், செல்ஃபோன், காஃபி ஷாப், மல்டிப்ளெக்ஸ், டிடீஹெச், டியோடர்ண்ட், ஹைடெஃப்பனிஷன் டீவி, எதுவும் இல்லை. இத்தனை ஏன், ‘தி இந்து’ கூட தமிழில் இல்லை!

இவை இல்லாத வாழ்க்கை ’ஜோரா இல்லை போரா’ என்கிற விவாதத்தை பட்டிமன்ற டாபிக்காய் பாப்பையாவிடம் விட்டுவிடுவோம். நான் சொல்ல வந்தது வேறு. அன்றில்லாத புதிய பொருள் வகைகள், தொழில்கள், ப்ராண்டுகள் பிறந்திருக்கின்றன. வெற்றி பெற்றிருக்கின்றன. தொழில் வளர்ச்சி பெற, வெற்றி அடைய புதிய ஐடியாக்கள், பொருள் வகைகள் அதில் புதிய ப்ராண்டுகள் தேவை என்கிறார்கள் ‘சேன் கிம் மற்றும் ரென்னி மொவ்பர்ன்’ என்னும் நிர்வாகவியல் பேராசிரியர்கள். இவர்கள் இருவரும் கடந்த 100 வருட டேட்டாவை கொண்டு 30 பொருள் வகைககளையும் புதியதாய் பிறந்த 150 தொழில்களையும் ஆராய்ந்தனர். தங்கள் ஆராய்ச்சி முடிவுகளையும் படிப்பினைகளையும் ‘ப்ளூ ஓஷன் ஸ்ட்ரேடஜி’ (Blue Ocean Strategy) என்கிற புத்தகமாக வெளியிட்டனர்.

பிசினஸ் உலகத்தையும் அதிலுள்ள பொருள் வகைகளையும் ’சிவப்பு கடல்’, ‘நீலக் கடல்’ என்று இரண்டாகப் பிரிக்கலாம் என்கிறார்கள். சிவப்பு கடல் என்பது வெகுகாலமாக இருக்கும் பொருள் வகைகள். இதில் தான் காலகாலமாக ப்ராண்டுகள் ஒன்றை ஒன்று அடித்து, கடித்து வளர முயற்சிக்கின்றன. அந்த சண்டை பத்தாது என்று அதில் புதிய ப்ராண்டுகளும் சேர்ந்து போட்டி உக்கரமடைந்து வெட்டுக்குத்து, வீச்சரிவாள் வரை போய் ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் இந்த பொருள் வகைகளை சிவப்புக் கடல் என்றழைக்கலாம் என்கிறார்கள்.

நீலக் கடல் என்பது இதுவரை இல்லாத பொருள் வகைகள். இனிமேல் பிறக்க வேண்டிய ஐடியாக்கள். இங்கு போட்டியில்லை. சண்டையில்லை. ரத்த ஆறு ஓடுவதில்லை. அழகான, அமைதியான நீலக் கடல்கள் இவை. இது போன்ற புதிய பொருள் வகையை உருவாக்கி அதில் ப்ராண்டை அறிமுகப்படுத்தும் கம்பெனிகள் வெற்றி பெறுகின்றன. போட்டியில்லாத இந்த நீலக் கடல் அந்த ப்ராண்டிற்கே சொந்தமாகிவிடுகிறது என்கிறார்கள்.

சோப், டியட்யோடரண்ட், சமையல் எண்ணெய், ஜவுளிக்கடைகள், பல்புகள், கார்கள், பைக்குகள், மினரல் வாட்டர் என்று பல பொருள் வகைகள் சிவப்புக் கடல்களே. இந்த பொருள் வகைகளில் நுழைவது சிரமம். மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுவது அதை விட சிரமம். அதோடு ஏகப்பட்ட விற்பனை செலவுகள், விளம்பர செலவுகள். பத்தாதற்கு போட்டியாளர்களின் ‘இலவசம்’, ‘ஆடித் தள்ளுபடி’, ‘ஆஃப்பர்’ போன்ற கழுத்தறுப்பு வேறு. நித்ய கண்டம், பூரண ஆயுசுக்கு உத்திரவாதமில்லாத சிவப்பு கடலில் சிக்கி, செருப்படி பட்டு, சந்தி சிரித்து, சீரழியாமல் இருப்பதற்க்குள் போதும் போதும் என்றாகிவிடும். இதில் எங்கிருந்து வளர்வது? எப்படி முன்னேறுவது?

புதிய தொழில் துவங்க எதற்கு சிவப்பு கடலுக்குள் நுழையவேண்டும்? கேட்டு வாங்கி எதற்கு தூக்கு மாட்டிக்கொள்ள வேண்டும்? சிவப்பு கடல்களில் குதித்து, குளித்து, கரையேற முடியுமா? இந்த பொருள் வகையிலுள்ள மற்ற ப்ராண்டுகள் கடித்துக் குதறி, கும்மி அடித்து, குமுறி விடாதா?

சரி, நீலக் கடலை எங்கு தேடுவது? அது ஒன்றும் ஐந்து கண்டங்களைத் தாண்டி, ஆறாவது மலைக்கு அப்பால், ஏழாவது குகைக்குள் இருக்கும் மேட்டர் இல்லை. அது உங்கள் அருகிலேயே இருக்கிறது. நீங்கள் போட்டி போடும் பொருள் வகையிலேயே ஒளிந்திருக்கிறது. அதை கண்டுகொள்ளும் திறமை உங்களுக்கு இருந்தால் போதும்.

ஷாம்பு மார்க்கெட் ஒரு சிவப்பு கடல். அதில் ஏகத்துக்கு போட்டி. ஆனால் அதனுள் போட்டியில்லாத ‘பொடுகு ஷாம்பு’ என்னும் நீலக் கடல் இருப்பதை கவனித்து அதில் ‘ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ்’ என்னும் ப்ராண்டை அறிமுகப்படுத்தி  அதில் நம்பர் ஒன்னாய் திகழும் ‘பிஅண்டுஜி’ செய்த சாமர்த்தியம் உங்களுக்கு வேண்டும்.

சோப்பு மார்க்கெட் ஒரு சிவப்புக் கடல். அதில் ப்ராண்டுகள் போட்டியில் சிக்கித் தவிக்க அதில் போட்டியில்லாத ’ஹெர்பல் சோப்’ என்னும் நீலக் கடலை கவனித்து அதில் ‘ஹமாம்’மை அறிமுகப்படுத்தி அமர்களப்படுத்தி வரும் ‘இந்துஸ்தான் யூனிலீவரின்’ சாதுர்யம் உங்களுக்கு வேண்டும்.

சில கம்பெனிகள் மட்டுமே இது போல் மாற்றி யோசித்து நீலக் கடல்கள இனங்கண்டு புதிய பொருள் வகைகளை உருவாக்கி அதில் ப்ராண்டுகளை அறிமுகப்படுத்தி வெற்றி பெறுகின்றன என்கிறார்கள் சேன்னும் ரென்னியும். அப்படி மாற்றி யோசித்து வடிவமைக்கும் உத்தியை ‘ப்ளூ ஓஷன் ஸ்ட்ரேடஜி’ என்கிறார்கள். விற்பனையை அதிகரித்து லாபத்தை கூட்ட சிறந்த வழி போட்டி நிறைந்த சிவப்புக் கடலை விடுத்து போட்டி இல்லாத நீலக் கடலை கண்டுபிடிப்பது தான் என்கிறார்கள்.

சிவப்புக் கடலில் பத்தோடு பதினொன்றாக பரிதவிக்கவேண்டும். நீலக் கடலில் போட்டியில்லாமல் பட்டா போடமுடியும். சிவப்புக் கடலில் போட்டியாளர்களோடு சதா போரிடவேண்டும். நீலக் கடலில் போட்டியாளரே இல்லாததால் போரிடாமலே வெல்ல முடியும். சிவப்புக் கடலில்  டிமாண்டைக் கூட்ட மெனக்கெட வேண்டும். நீலக் கடலில் புதிய டிமாண்டை உருவாக்கினால் போதும்.

அதற்காக நீலக் கடலின் வெற்றி நிரந்தரம் என்று நினைக்காதீர்கள். நீலக் கடலின் அழகில் மயங்கி பலர் நுழைய முயல்வார்கள். முதலில் நுழைந்த ப்ராண்டுகள் தங்களை மேம்படுத்திக் கொண்டே இருந்து நீலக் கடலை முழுவதுமாய் ஆக்கிரமித்து அடுத்தவனை அண்டவிடாமல் செய்வது அதிமுக்கியம்.

புதிய தொழிற்நுட்பம் இருந்தால் நீலக் கடல்களை உருவாக்குவது எளிதாகும். போட்டி பிடியில் சிக்கி இருந்த செல்ஃபோன் என்னும் சிவப்புக் கடலை ஒரங்கட்டி டச் ஸ்க்ரீன் என்னும் புதிய தொழிற்நுட்பத்தால் வெற்றி பெற்றது ‘ஐஃபோன்’.

புதிய தொழிற்நுட்பம் இல்லாமலும் நீலக் கடலை கண்டுபிடிக்க முடியும். டூத்பேஸ்ட் மார்க்கெட்டில் பல ப்ராண்டுகள் பல் இளித்துக்கொண்டிருக்க அதில் ஜெல் என்னும் பொருள் வகையை உருவாக்கி அந்த நீலக் கடலில் ’க்ளோஸ் அப்’ வெற்றி பெற்றது.

பல சமயங்களில் நீலக் கடல்கள் சிவப்புக் கடல் அருகிலோ, அதற்குள்ளேயே கூட அமைந்துவிடும். சிவப்பழகு க்ரீம் மார்க்கெட் பல ப்ராண்டுகள் போட்டிப் போடும் சிவப்புக் கடல். எல்லா ப்ராண்டுகளும் பெண்களை மட்டுமே குறிவைக்கிறதே என்று மாற்றி யோசித்து ’ஃபேர் அண்டு ஹேண்ட்சம்’ என்று ஆண்களுக்கான சிவப்பழகு க்ரிமை அறிமுகப்படுத்தி சிவப்புக் கடல் உள்ளேயே ஒரு நீலக் கடலை உருவாக்கி வெற்றி பெற்றது ‘இமாமி’.

இரண்டு சிவப்புக் கடல்களை கலந்து நீலக் கடலை உருவாக்கவும் முடியும். சிலர் தலைக்கு சீயக்காய் உபயோகிப்பதையும் சிலர் ஷாம்பு உபயோகிப்பதையும் பார்த்தது ‘கவின்கேர்’. சீயக்காய் மார்கெட்டிலும் ஷாம்பு மார்க்கெட்டிலும் ஏகப்பட்ட ப்ராண்டுகள். இந்த சிவப்பு கடல்களுக்குள் எதற்கு நுழைவது என்று ’சீயக்காயின் குணநலன்களையும் ஷாம்புவின் சௌகரியத்தையும் கலந்து ’சீயக்காய் ஷாம்பு’ என்னும் புதிய பொருள் வகையை உருவாக்கி அந்த நீலக் கடலில் ’மீரா’ என்கிற ப்ராண்டை அறிமுகப்படுத்தி பெரும் வெற்றிப் பெற்றது.

சிவப்புக் கடலில் சிக்கி சங்கடப்படுவதை விட நீலக் கடலை எப்படி உருவாக்குவது, அதில் புதிய ப்ராண்டுகளை எப்படி அறிமுகப்படுத்துவது என்று சிந்தியுங்கள். நீலக் கடலை உருவாக்கி வெற்றி பெற்றிருக்கும் ‘டிஷ் டீவி’, ’ஸ்கூட்டி’, ‘எகனாமிக் டைம்ஸ்’, ‘சன் டீவி’ போன்ற ப்ராண்டுகளை பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்.

ஹலோ, இன்னமும் 1994லேயே இருந்தால் எப்படி? 2020க்கு வாருங்கள். கேன் அளவு தண்ணீரை விட்டு சேன் சொன்ன நீலக் கடலைத் தேடுங்கள். மென்னி முறிக்கும் மார்க்கெட்டை விட்டு ரென்னி சொன்ன நீலக் கடலை உருவாக்குங்கள். ஆளே இல்லாத கடை தான். அதனால் என்ன, இங்கு டீ ஆத்துங்கள்!

இந்தக் நீலக் கடலில் ஆள் கிடையாது. அரவம் கிடையாது. போட்டி கிடையாது. போர் கிடையாது. அதனால் வளர்ச்சி கிடைக்கும். வெற்றி கிடைக்கும். இங்கு தொடுவானம் கூட தொடும் தூரம் தான். கடல் ஆழம் கூட கால் கட்டை விரல் வரை தான். நீலக் கடல் உங்கள் நீச்சல் குளமாகும். அப்புறம் என்ன, அதில் ஜலக்கிரீடை தான். ஜாலி தான்!

கோரோனா கோபத்திற்கு ஆளானது மனிதர்கள் மட்டுமல்ல, மளிகைக் கடைகளும் தான். பெரிய டிபார்மெண்ட் ஸ்டோர்கள் முதல் ஆன்லைன் ப்ராண்டுகள் வரை பலவும் பாதிக்கப்பட்டிருந்தாலும் மளிகை கடைகளில் நெடி கொஞ்சம் தூக்கல் தான். அருகில் இருப்பதாலும், அடிக்கடி பார்ப்பதாலும் மளிகைக் கடைகளின் மகத்துவத்தை நாம் மறந்துவிடுகிறோம். என் வீட்டிற்கருகில் இருக்கும் அண்ணாச்சி கடையில் சோஷியல் டிஸ்டன்சிங் மெயிண்டேயின் செய்து சாமான் வாங்க நின்ற போது மனதில் எழுந்த சில எண்ணங்களை எழுதுகிறேன்!

சமீப காலமாக நாடெங்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் கொரோனாவை காட்டிலும் வேகமாக பரவி வருகிறது. போதாக்குறைக்கு அன்றாட சாமான்களை ஆன்லைனில் விற்கும் ப்ராண்டுகள் புற்றீசல் போல் பெருகி வருகிறது. இவை தவறல்ல. நாடு வளரும் போது, தங்கள் சௌகரியம் மட்டுமே மற்றவை காட்டிலும் மக்களுக்கு முக்கியமாக படும். அதனால் இவ்வகை புதுமைகளின் வளர்ச்சியை தடுக்க முடியாது. தடுக்கவும் கூடாது. மாட்டு வண்டி அசௌகரியம், காரில் செல்வதே கம்ஃபர்ட் என்று மக்கள் முதல் மளிகைகடைக்கார்கள் வரை நினைக்கும்போது மற்ற விஷயங்கள் மட்டும் மாறாமல் பழையபடியே இருக்கவேண்டும் என்று நினைத்தால் ‘இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல’ என்று கோரோனா நம் காதுபட கேட்கும்!

அப்படியென்றால் மாட்டு வண்டி போல் மளிகை கடைகளும் காணாமல் போக தான் வேண்டுமா? அவசியமில்லை. இந்நிலை மாற வாடிக்கையாளர்கள் மாறவேண்டும், மளிகை கடைகளை காப்பாற்ற அரசாங்கம் சட்டம் இயற்றவேண்டும் என்று கூறுவது தப்பாட்டம். அப்படி நடக்கப் போவதில்லை. அப்படி கூறுபவர்கள் டெய்லரிடம் சட்டை தைத்து போட்டுக்கொண்டதை மறந்து ரெடிமேட் சட்டை போடுவதை நிறுத்திவிட்டு இப்படியெல்லாம் கூறினால் தேவலை. அவர்கள் கல்யாண ப்ரோக்கர் தந்த ஃபோட்டோக்களிலிருந்து கட்டிக்கப் போகிறவளை கரெக்ட் செய்த காலத்தை துறந்து ஆன்லைனில் பெண் தேடுவதை நிறுத்தி மளிகை கடைகளுக்கு கொடி பிடிப்பது உசிதம்.

வாழ்க்கையின் சௌகரியங்களுக்கு ஒரு விலை இருக்கிறது. அதை கொடுக்க மக்கள் தயாராய் இருக்கும் போது மக்களை மாறச் சொல்வது மடத்தனம். மளிகை கடைகள் தான் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். மாற்றிகொண்டால் தான் மீண்டும் அவர்கள் கல்லா ஃபுல்லாகும்!

கொரோனா எல்லாருக்கும் உபத்திரவமாக இருந்தாலும் மளிகை கடைகளுக்கு ஒரு உபகாரத்தை செய்திருக்கின்றன. அதை மளிகைகடைக்கார்கள் உணர்வது நல்லது. பல டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் பாதி திறந்து பாதி மூடிக் கிடக்க, ஆன்லைன் கடைகள் முழுவதுமாய் முடங்கிக் கிடக்கும் இச்சமயத்தில் மளிகை கடைகள் தயவில் தான் வீடுகளில் அடுப்பெரிகிறது. அதற்காக ‘பார் எங்கள் அருமையை’ என்று மளிகை கடைகள் மார்தட்டிக்கொள்ளும் நேரமல்ல இது. கொரோனா டாடா கட்டி மலையேறி மறையும் காலம் வரை தான் இந்த நல்ல காலம் நிலைக்கும் என்பதை உணர்வது அவர்களுக்கு நல்லது. இந்த நேரம் மீண்டும் தாங்கள் தலையெடுக்க காலம் தரும் செகண்ட் சான்ஸ் என்பதை அண்ணாச்சிகள் அறிவது அவசியம்.

இதற்கு மளிகை கடைகள் மார்க்கெட்டிங் தெரிந்துகொண்டு அதோடு கொஞ்சம் தொழிற்திறனை அரவனைத்தால் தேவலை. மார்க்கெட்டிங் என்றால் என்ன? யார் வாடிக்கையாளர், அவருக்கு என்ன தேவை, அத்தேவையை மற்றவர்களை விட எப்படி சரியாக பூர்த்தி செய்வது, அப்படி பூர்த்தி செய்வதை அவர்களுக்கு எப்படி சொல்லிக்காட்டிக்கொண்டே இருப்பது. இதை மளிகைகடைகள் செயலாக்கக் கூடிய விதம் பற்றிப் பார்ப்போம்.

மளிகை கடை கஸ்டமர்கள் அதைச் சுற்றி வசிப்பவர்கள் என்பது தெரிந்ததே. ஆனால் அருகிலிருக்கும் மளிகை கடை தாண்டி எதற்கு தள்ளியிக்கும் டிபார்ட்மெட்ண்ட் ஸ்டோர் அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்கிறார்கள். இதை உணர்ந்தாலே விடை தெரியும். அதற்காக டிபார்ட்மெண்ட் ஸ்டோர் போல் தாங்களும் கடையை தூசி தட்டி, ஏசி மாட்டி, கடையை அழகாக்கவேண்டும் என்று கூறவில்லை. அப்படி செய்தாலும் தப்பில்லை. ஆனால் அது மட்டுமல்ல வாடிக்கையாளர்கள் தேவை. தங்களுக்கு தேவையான எல்லா பொருள்களும் கிடைக்கவேண்டும், அதைப் பார்த்து படித்து தேர்வு செய்யும் வசதி வேண்டும், அவசரத்திற்கு கேட்ட நேரத்தில் வீட்டிற்கே டெலிவரி செய்யவேண்டும். இவை தான் அவர்களுக்கு தேவை. இதை தான் தள்ளியிருக்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களும் ஆன்லைன் ப்ராண்டுகளும் மளிகைக் கடைகளை விட பெட்டராய் செய்கின்றன. இதைத் தான் மளிகைக்கடைக்காரர்கள் செய்யத் துவங்கவேண்டும். இவை தங்களுக்கு சாத்தியப்படாது என்று இத்தனை நாள் மளிகை கடைகாரர்கள் விட்டேத்தியாய் விட்டுவிட்டார்கள். இதை அவர்கள் ஈசியாய் சரி செய்யலாம். செய்யவேண்டும். செய்ய முடியும்!

மளிகை கடை சின்னதாய் இருந்தால் என்ன? வாடிக்கையளர் கேட்ட பொருளை, கேட்கும் நேரத்தில், கேட்டவர் வீட்டு வாசலில் டெலிவரி செய்யும் வகையில் தங்களை மாற்றிக்கொண்டால் போயிற்று. டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஆனைலன் போட்டியை விட பெட்டராய் கஸ்டமர் தேவையை பூர்த்தி செய்ய புது வழி பிறந்திருக்கிறது. எளிய முறைகள் வளர்ந்திருக்கிறது.

கஸ்டமர் கேட்கும் எல்லா பொருள்களையும் ஆறடி கடைக்குள் அண்ணாச்சிகள் அடுக்க முடியுமா? வீட்டிலிருந்தே கஸ்ட்மர்கள் ஆர்டர் செய்யும் வகையில் கடையை மாற்ற முடியுமா? வந்த ஆர்டரை வாடிக்கையாளர் வீடு தேடி கரெக்ட்டாய் டெலிவரி செய்ய முடியுமா?

பேஷாய் முடியும். அதற்கான புதிய எளிய தொழிற்நுட்பம் பிறந்திருக்கிறது. இப்படி சொல்வதால் எதோ கம்பசூத்திர மேட்டர் கூறப்போகிறேன் என்று மலைக்காதீர்கள். மளிகை கடைகளுக்கு தேவை சிம்பிள் சிஸ்டமும், அதைவிட சிம்பிளான ஆப்ஸ் (Apps) மட்டுமே. முதலில் தங்கள் கடையில் உள்ள பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய தேவையான ஆப் ஒன்றை நிறுவவேண்டும். அதை தங்கள் கஸ்டமர்களிடம்  கூறி அவர்களை டவுன்லோட் செய்யவைக்கவேண்டும். அதன் மூலம் தங்களுக்குத் தேவையான பொருள்களை படித்து, பார்த்து தேர்வு செய்ய வைக்க முடியும். அவர்கள் ஆர்டரை கடையின் பில்லிங் சாஃப்வேருடன் இணையச் செய்யவேண்டும். வந்த ஆர்டர்களை இனம்பிரித்து ஆர்டர் செய்தவர் வீட்டிற்கு சரியாக டெலிவரி செய்யும்படி டெலிவரி பாய்ஸ் வைத்திருக்கவேண்டும். அவ்வளவே!

என்ன ஈசியா இத்தனை சொல்லிவிட்டாய்? எனக்கு இத்தனை தொழிற்திறன் தெரியாது என்று அண்ணாச்சிகள் பின்வாங்கத் தேவையில்லை. வாட்ஸ் அப்பில் மெசேஜ் பார்த்து அனுப்ப தெரிந்தவர்களுக்கு இந்த ஆப்ஸை உபயோகிப்பது சுலபம்.  அநியாயத்திற்கு எளிமையான ஆப்ஸ். இதை மளிகைகடைகளுக்கென்றே பிரத்யேகமாக தயாரித்து வழங்கியிருக்கிறது ’கோஃப்ரூகல்’ என்கிற தமிழ் கம்பெனி. அந்த ஆப்ஸ்ஸை தங்கள் பில்லிங் சாஃப்ட்வேருடன் இணைத்து பிரயோகிப்பது வெகு எளிது. அது மட்டுமல்ல, இருக்கும் கஸ்ட்மர்களை தக்க வைத்துக்கொள்ளவும் புதிய கஸ்டமர்களை பெற வழி செய்யவும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், ஆன்லைன் ப்ராண்டுகளோடு கூட போட்டி போடும் வழியை காண்பிக்கும் இந்த ஆப்ஸ். ஆன்லைன் ப்ராண்டுகளாவது அடுத்த நாள் தான் டெலிவரி செய்யும். மளிகை கடைகள் அடுத்த கணமே வாடிக்கையாளர் வீடு சென்று சேர்க்க உதவும் இவை!

இதையெல்லாம் விட பெரிய விஷயம் ஒன்று உண்டு. கரோனா காலத்தில் சின்ன மளிகை கடைகளுக்கு உதவும் எண்ணத்தில் அவர்கள் வியாபாரத்தை விருத்தி செய்து வளர்க்கும் விதமாக அடுத்த ஆறு மாதத்திற்கு இந்த ஆப்ஸை கடைகளுக்கு இலவசமாக வழங்குகிறது கோஃப்ரூகல். வாய்ப்பு வாசல் கதவை தட்டும் போது திறக்கவேண்டும் என்பார்கள். இந்த வாய்ப்பு கதவை தட்டாமல் தேடி வந்து மடியில் அமர்கிறது. இதை கொஞ்சி குலாவ வேண்டியது தான் பாக்கி!

கொஞ்சம் மார்க்கெட்டிங், கொஞ்சம் தொழிற்நுட்பம். சேர்த்தால் போதும். பார்த்து வளர்ந்த மளிகை கடைகள் மீண்டும் மலரத் துவங்கும். பிறந்தது முதல் நம்மோடு அன்னியோன்யமாக பழகி வரும் அண்ணாச்சி கடைகள் அமேஸான் ஆகும்!