மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்று சொன்னவர்கள் கொரோனா எத்தனை நாள், லாக்டவுன் எவ்வளவு காலம் என்பதையும் சொல்லியிருக்கலாம். வேலை இல்லாதவன் பூனை மீசையை சரைத்த கதையாய் சைனாக்காரன் வௌவாலில் சிவனே என்றிருந்த கோவிட்டை எடுத்து வேட்டியில் விட்டுக்கொண்டு அதுவும் பத்தாமல் சைனீஸ் ஃப்ரைட் ரைஸ் போல் அதை உலகெங்கும் பார்செல் செய்து சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்திருக்கிறான். சங்கு சத்தம் காதை பிளக்கிறது. காலை சுற்றிய பாம்பு விடாது போலிருக்கிறது. கை அலம்பினாலும் கைவிடமாட்டேன் என்று கழுத்தறுக்கிறது!
டிவியை போட்டால் கோவிட். பேப்பரை பிரித்தால் கொரோனா. வீட்டில் காலிங் பெல் அடித்தால் கூட ’கொரானாவா பாரு’ என்று கேட்க தோன்றுகிறது. இத்தனை லூட்டியில் அக்னிநட்சத்திர வெயில் கூட பெரியதாக தெரியவில்லை. எப்படி தெரியும், வெளியில் செல்ல பயந்து வீட்டிற்குள்ளேயே வெட்டியாய் கிடந்ததால் வெயில் எப்படியிருக்கும் என்பதே மறந்துவிட்டது. பிறந்தது முதல் என் வீட்டு சுவரே கதி என்றிருந்த பல்லி வாய் திறந்து என்னை கேட்டேவிட்டது. ‘எனக்கு தலையெழுத்து சுவரில் கிடந்து சாகிறேன். நீ ஏன் சோபாவே கதி என்று என்று கிடக்கிறாய்’. பல்லி கூட நம்மை இப்படி சில்லியாய் நினைக்கிறதே என்று நாக்கை பிடுங்கிக்கொள்ளலாம் என்று பார்த்தால் கையை எச்சை பண்ணக்கூடாதாம். கோரோனா தொற்றிக்கொள்ளுமாம். மனதார அழுது துக்கத்தை தொலைக்க கூட வழியில்லை. என்ன எழவு வாழ்க்கை இது.
எங்கு திரும்பினாலும் மாஸ்க் சகிதம் மக்கள். எந்த நேரத்தில் ‘மூடிண்டு போ’ என்று வைதோமோ இன்று அனைவரும் மாஸ்க் சகிதம் மூடிக்கொண்டு போகிறார்கள். இந்த லட்சணத்தில் என் நண்பர் எனக்கு ஃபோன் செய்து ஒரு பாடு புலம்பினார். காரில் சென்றவர் தெருவில் நடந்துசென்றுகொண்டிருந்த என்னை பார்த்து சிரித்தாராம், பதிலுக்கு நான் சிரிக்கவில்லையாம். ஏசி காருக்குள் காசி யாத்திரை போவது போல் என்னை பார்த்து அவர் சிரித்தது நினைவிற்கு வந்தது. பதிலுக்கு நானும் சிரித்தேன். என் தலையெழுத்து, மாஸ்க் போட்டிருந்ததால் நான் சிரித்தது அவருக்கு தெரியவில்லை. நீ முன்பு மாதிரி இல்லை, பழசை மறந்துவிட்டாய் அது இது என்று பேட்டரி தீரும் வரை பேசியே புலம்பிவிட்டார். அவருக்கு கை காட்டி ஹலோ சொல்லி தொலைத்திருக்கலாம். இந்த பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து தப்பியிருப்பேன்.
இந்த பாழாய் போன கொரோனாவல் அவமானப்படவும் வேண்டியிருக்கிறது. அன்று கடைக்கு போனவன் சாமானோடு என் மானத்தையும் வாங்கிக்கட்டிக்கொண்டேன். கடை வாசலில் நின்றிருந்தவர் என்னை பார்த்து சிரித்தார். அவர் கையில் பன்னீர் சொம்பு போல் இருந்தது. வரவேற்கிறார் என்று தலையை குனிந்தேன். ’இது தலைல தடவறதுக்கில்ல, கைய நீட்டுங்க’ என்றார். சானிடைசராம். நானாவது பரவாயில்லை, என் பின்னால் வந்த பிரஹஸ்பதி கையில் தெளித்த சானிடைசரை கோயில் தீர்த்தம் போல் பயபக்தியுடன் உறிஞ்சி தொண்டை எரிச்சலை தாங்கிக்கொண்டு தலையில் வேறு தெளித்துக்கொண்டார். நல்ல காலம், மனிதர் கடையில் அங்கப்பிரதஷணம் செய்யவில்லை. அதுவரை ஷேமம்!
இந்த லட்சணத்தில் சோஷியல் டிஸ்டன்சிங் செய் என்று பிரச்சாரம் வேறு. ஏதோ பழைய காலம் போல் ஊரே ஒன்று கூடி சந்தோஷங்களை பரிமாறி கொள்வது போலவும் கூட்டுக் குடும்பங்கள் கொஞ்சிக் குலாவி குதூகலமாய் கும்மாளமடிப்பது போலவும் நினைப்பு. கணவன் மணைவி கூட சொந்த வீட்டில் சோஷியல் டிஸ்டன்சிங் செய்து வாழும் இக்காலத்தில் தள்ளி நில் என்பவர்களை பார்த்து கொரோனாவே கபகபவென்று சிரிக்கும். இந்த லட்சணத்தில் பக்கத்தில் செல்லாதே, ஆறடி தள்ளி நில், வட்டத்திற்கு வட்டம் பாண்டி ஆடி தாண்டிப் போ என்றெல்லாம் கூறினால் பாவம் கொரோனா சிரித்து சிரித்து அதன் சின்ன வயிறே புண்ணாகியிருக்கும்!
எது எப்படியோ ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரி ஆகிவிட்டது. கலியன் பூங்குன்றனார் கூறியது கரெக்ட். யாதும் கோவிட் யாவரும் கொரோனா. கவிஞர் கண்ணதாசன் இன்று இருந்திருந்தால் ‘வூஹானில் விளையாடி, விமானத்தில் கொடி சீவி வளர்ந்த வில்லங்கமே, கோயம்பேடு ஹோல்சேல் இடம் தோன்றி, ரீடெயில் கடையெங்கும் விரிந்த தலையங்கமே’ என்று பாடியிருப்பார்!
என்ன நேர்த்திக்கடனோ நாம் மூன்று மாதமாக வயிற்றில் புளியை கரைத்துகொண்டு பயத்தில் கொரோனாவை நிரைமாத கர்ப்பிணியாய் சுமக்கிறோம். எப்பொழுது டெலிவரி ஆகும் தெரியவில்லை. கஜ கர்ப்பம்! ஒருவித கடுப்பாகி பலவித வெறுப்பாகி வரவர அநியாயத்திற்கு போர் அடிக்கிறது. இந்த கரோனா கர்மம் எப்பொழுது ஒழியும் என்று புரியவில்லை. தடுப்பூசி கண்டுபிடிக்க மினிமம் ஒன்றறை வருடம் ஆகலாமாம். இதற்கு மருந்தே கிடையாது என்கிறது இன்னொரு கூட்டம். பெரிய மனது பண்ணி கொரோனாவே காலி செய்துகொண்டு போனால் தான் உண்டு போலிருக்கிறது.
சொன்னால் நம்ப மாட்டீர்கள். நான் படும் ப்ரான அவஸ்தையைப் பார்த்து என் லாப்டாப் கூட என்னிடம் ’வைரஸ் அட்டாக் செய்யும் என்று எனக்கு ஆண்டி-வைரஸ் வாங்கி இன்ஸ்டால் செய்தாயே, இன்னுமா உனக்கென்று ஒரு ஆண்டி வைரஸ் மருந்து வாங்க துப்பில்லை’ என்று என் காது பட கூறுயது. வயிறு எரிகிறது. வரும் கோபத்திற்கு எந்த சைனாக்காரனாவது கையில் கிடைத்தால் அவன் மூக்கோடு முழு முகத்தையும் சப்பையாக்காமல் விடமாட்டேன். இது அவன் அனுப்பிய கொரோனா மீது சத்தியம்!
வேறு வழி ஏதும் தெரியவில்லை. கட்டிய மணைவியைப் போல் இந்த கர்மத்தோடும் பல்லைக் கடித்து சகித்துக்கொண்டு பொறுமை காக்கவேண்டும் போலிருக்கிறது. கொரோனா கவலையை துறக்க முடியவில்லை என்றால் என்ன, மறந்து தொலைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். மறப்பது நமக்கு ஒன்றும் பெரிய விஷயமில்லையே. எவ்வளவு தான் ஃபைனான்ஸ் கம்பெனி ஏமாற்றி தலையில் மிளகாய் அரைத்தாலும் அதை மறந்து அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ‘சாரதா தேவியே’ என்று அரைவேக்காடு கம்பெனிகளில் பணத்தை நாம் தொலைப்பதில்லையா. இந்த புண்ணிய பூமியை கூறு போட்டு அரசியல்வாதிகள் விற்று கூத்தடித்தாலும் அதை அடுத்த தேர்த்தலில் மறந்து இன்னார் வந்தால் தெருவில் தேனும் தினைமாவும் பெருக்கெடுத்து ஓடும் என்று ஓட்டு போடுவதில்லையா. அது போல் கரோனாவையும் மறக்க முயற்சிப்போம். முயன்றால் முடியாதது இல்லையாமே. ‘மறதி நம் தேசிய வியாதி’ என்று அழகாய் சொல்லியிருக்கிறாரே நம் ஸ்ரீரங்கத்து தேவதை திரு சுஜாதா!
இத்தனை களோபர குழப்ப ககரோனாவை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா? பேஷாய் முடியும் என்கிறார்கள் உளவியலாளர்கள். மனித மூளை மறந்தே தீருமாம். முக்கிய மேட்டர்களை நினைவில் வைத்துக்கொள்ள மற்றதை கணகாரியமாய் மறந்துவிடுமாம். நினைவுகளை மறப்பது தற்செயலாய் நடக்கும் ஒன்றில்லையாம். மனித மூளை ஃபுல் டைம் செயலாற்றி செய்யும் விஷயமாம். ’நினைவு என்பதே மறக்க தான்’ என்கிறார் கனடா நாட்டு காக்னிடிவ் சைக்காலஜிஸ்ட் ‘ஆலிவர் ஹார்ட்’. நினைவுகளின் ந்யூரோபயாலஜியை ஆராய்ச்சி செய்யும் இவர் மனித மூளையில் நினைவுகள் சரியாய் வேலை செய்ய மறதி அவசியம் என்கிறார். நம் வயிற்றில் பால் வார்க்கும் இந்த புண்ணியவான் எங்கிருந்தாலும் நன்றாய் இருக்கட்டும்!
மறப்பது பெரிய விஷயமுமல்ல, பாவமுமல்ல. தினப்படி வாழ்வில் பல விஷயங்களை மறக்கிறோம். இதற்குக் காரணம் நம் கவனமும் ஃபோகஸும் உலகை புரிந்துகொள்ள மட்டுமே முனைகிறது. அதை ஞாபகம் வைத்துக்கொள்ள அல்ல. செயல் முக்கியம். நினைவுகள் முக்கியமல்ல. தற்சமயத்தை மட்டுமே நினைக்கிறோம். அதனால் தான் எதையோ எடுக்க ரூமுக்குள் சென்று எதை எடுக்க வந்தோம் என்பதை மறக்கிறோம். அறைக்குள் செல்வது என்ற செய்கையை சாதிக்க மனதில் நினைத்தோமே ஒழிய அதை ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைப்பதில்லை!
மறதியெல்லாம் வாழ்க்கைக்கு ஓகே. வியாபாரம் செய்யும் எனக்கு எதாவது சொல்லித் தொலையேன் என்று நீங்கள் கூறுவது கேட்கிறது. அதற்குத் தான் வருகிறேன்.
தொழில் பற்றிய கவலை இனி உங்களுக்கு வேண்டாம். உங்கள் வாடிக்கையாளர்கள் மீண்டு வருவார்கள். உங்களிடம் மீண்டும் வருவார்கள். ஆருடம் கூறவில்லை. அறிந்ததை கூறுகிறேன். ‘கொரோனா’ என்று மெக்சிகோ நாட்டு பியர். பிரசித்திப்பெற்றது. பல வருடங்களாய் உலகமெங்கும் சக்கை போடு போடும் ப்ராண்ட். அதை ஒரு வாய் குடித்தால் சொர்க்கம் தெரியுமாம். குடித்தவர் கூற கேட்டிருக்கிறேன். ஆண்டுக்கு பல மில்லியன் டாலர் வருவாய் ஈட்டி தரும் இந்த கொரோனா பியருக்கு வந்தது சனி அதன் பெயர் ரூபத்திலேயே. கரோனா பயத்தில் இனி எவன் கரோனா பியர் குடிப்பான் என்று தானே நினைக்கிறீர்கள். அதற்கு மாஸ்க் போட்டு, சானிடைசர் தேய்த்து உலகம் மொத்தமாய் சோஷியல் டிஸ்டன்சிங் செய்திருக்கும் என்று தான் நானும் நினைத்தேன்.
இல்லை. முன்பை விட இப்பொழுது தான் கொரோனா பியர் விற்பனை பிய்த்துக்கொண்டு பறக்கிறதாம். பாட்டில் பாட்டிலாய் நுரைத்துக் கொண்டு சிரிக்கிறதாம். எந்த தொண்டை குழியை கரோனா தாக்கும் என்று விஞ்ஞானிகள் பயமுறுத்தினார்களோ அந்த தொண்டைக்கு உலகெங்கும் அபிஷேக ஆராதனையே நடக்கிறதாம். ’ஒய் கொரோனா ஃபியர், வென் கொரோனா பியர் இஸ் ஹியர்’ என்று கூறாத குறை தான் போங்கள். சைனா கரோனா மெக்சிகோ கொரோனாவிடம் தோற்றுவிட்டது. ஸோ, கவலை வேண்டாம். இந்த கொரோனாவும் கடந்து போகும். உங்கள் தொழிலும் நிமிர்ந்து நிற்கும். நம்பிக்கை பெறுங்கள். இந்த சந்தோஷத்தை கடை திறந்தவுடன் கொரோனா குடித்து கொண்டாடுவோம். சியர்ஸ்!