கொஞ்ச நாளாகாவே தினம் வாக்கிங் செல்கிறேன். டாக்டர் சொல்லி அல்ல.
வாக்கிங் சென்றால் ஆரோக்கியமாகி எங்கு இவன் நம்மிடம் வராமல் இருப்பானோ என்று அவர் சொல்லவில்லை.
பாழாய் போன பீச் பக்கத்தில் குடியிருக்கிறேன். தினம் எங்கு, ஏன் போகிறோம் என்று தெரியாமல்
அதை தெரிந்துகொள்ள நடப்பது போல் குறுக்கும் நெடுக்குமாக பலர் வாக்கிங் செல்வதைப் பார்த்தேன்.
மனதில் குற்ற உணர்ச்சி. ‘பீச் பக்கத்தில இருந்துட்டு வாங்கிங் போறதில்லையா’ என்று பலர்
துக்கம் விசாரித்தனர். போறாததற்கு என் மணைவி நான் கிச்சன் சென்றாலே ‘நகருங்க, எது ஃப்ரிஜ்ஜின்னே
தெரியல’ என்று வளர்ந்து வரும் என் தொப்பையை குத்திக்காட்டினாள். பொறுத்தது போதும் என்று
ஒரு நாள் ஷூ, சாக்ஸ் எல்லாம் வாங்கி நடக்கத் துவங்கினேன். ஸ்கூல் படிக்கும் போது பி.டி
பீரியட், ஸ்போர்ட்ஸ் டே அன்று போட்டது. புதுசா இருந்தாலும் மூன்று மாத வாக்கிங்கில்
இப்பொழுது பழகிவிட்டது.
என் உடம்பு இளைத்ததா தெரியவில்லை. ஆனால் தள்ளு வண்டி, ஜூஸ் கடை என்று
தினம் ஒன்று முளைத்து பீச் இளைத்துவிட்டது. நடக்க ஆரம்பித்த புதிதில் மற்றவர் மூஞ்சியை
பார்க்க வெட்கமாக இருந்தது. ’இவனெல்லாம் ஏன்
வரான்’ என்பது போல் என்னை கடந்து சென்றார்கள். காலச் சுழற்சியில் இப்பொழுது சீனியர்
போல் உணர்வதால் ஜாலியாக மற்றவர் முகம் பார்த்து நடக்கிறேன். சிலரோடு ’குட்மார்னிங்
சார்’ என்று ஆரம்பித்த நட்பு கிரிக்கெட் மாட்ச், அரசியல் என்று டிஸ்கஸ் செய்தவாரே நடக்குமளவிற்கு
வளர்ந்திருக்கிறது. இப்படி சொல்வதால் ஃப்ரெண்ட் ஆகிவிட்டார்கள் என்று அர்த்தமல்ல. பலர்
பெயர் கூட எனக்குத் தெரியாது. கேட்கவில்லை. அவ்வளவு தான். எல்லாருமே ‘சார்’ தான். இதில்
ஒரு சௌகரியம. யார் பெயரும் மறக்காது!
அன்றும் அப்படித் தான். பாங்கில் வேலை செய்யும் ‘சார்’ புது ஷூ அணிந்து
வந்தார். முதலில் நாங்கள் கவனிக்கவில்லை. என்றும் இல்லாத திருநாளாய் அன்று காலை ஆட்டிக்கொண்டே
நடந்தார். ஒழுங்காய் இருந்த லேஸை அடிக்கடி கழட்டி கட்டினார். பாவமாய் இருந்தது. கேட்டே
விட்டேன். ‘புது ஷூவா?’
‘ஆமா சார்’. சாதித்த சந்தோஷம் அவர் முகத்தில்.
எங்களோடு வந்த செண்டரல் கவர்மெண்ட் சார் அவரிடம் ‘என்ன பிங்க் கலர்ல
இருக்கு. பொம்பளைங்க ஷூவா’ என்றார்.
‘இல்லையே, ஆன்லைன்ல தான் வாங்கினேன்’ என்றார் பாங்க்.
இதன் அனர்த்தம் யாருக்கும் புரிந்ததாய் தெரியவில்லை. எனக்கு பழகிவிட்டது.
செண்ட்ரல் கவர்ன்மெண்ட் தொடர்ந்தார். ‘எல்லாரும் எல்லாத்தையும் ஆன்லைன்ல வாங்கிட்டா
கடையெல்லாம் இழுத்து மூடனுமோ’.
பிசினஸ் டாபிக்ஸ் என்றால் என்னை பார்ப்பார்கள் என்பதால் அக்கேள்வி
என்னிடம் கேட்கப்பட்டதாய் உணர்ந்து ‘ஆன்லைன் வளர்ச்சிய தடுக்க முடியாது சார்.’
‘கடைகாரங்க பாவம் என்ன சார் பண்ணுவாங்க’?
‘ரிக்ஷாகாரங்களுக்கு பாவப்பட்டிருந்தா ’ஓலா’ல உட்கார மாட்டோமே.
டெய்லருக்கு வருத்தப்பட்டிருந்தா ‘பீட்டர் இங்லாண்ட்’ போட மாட்டோமே. டெக்னாலஜிய யூஸ்
பண்ணி சௌகரியத்த தேடறது தானே சார் வாழ்க்கை’ என்றேன்.
‘இந்த அரசாங்கம் ஏதாவது பண்ணி ஆன்லைன் கொட்டத்த அடக்கனும்’ என்றார்
ஆர்கிடெக்ட். அவர் மைத்துனர் ஃபார்மசி வைத்திருக்கும் வருத்தம் போலும்.
‘அரசாங்கம் இண்டர்னெட் கனெக்ஷன் எல்லாத்தையும் கழட்டி எறிஞ்சி எல்லாரோட
செல்ஃபோனையும் பிடுங்கிக்கிட்டா ஆன்லைன் கொட்டத்த அடக்கலாம்’ என்றேன்.
’என்னால தான் முடியல, பாழாய் போன கவர்மெண்ட் பண்ணா தேவலை. டெய்லி
என் பொண்டாட்டி செல்ஃபோன்ல எதையாவது பார்த்து ஆர்டர் பண்ணி தொலைக்கறா. வாராவாரம் ஆன்லைன்
கம்பெனிக்கு கப்பம் கட்றேன். நடந்து இளைக்கிறேனோ இல்லையோ ஆன்லைன்ல பணம் செலவழிச்சே
இளைச்சுட்டேன்’.
‘உங்களுக்காவது பொண்டாட்டி தான். என் வீட்டுல பொண்டாட்டிலேருந்து
பசங்க வரைக்கும் சப்ஜாடா ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிறாங்க. அமேசான் ஓனரே என்னை கூப்ட்டு
தாங்க்ஸ் சொல்றாருன்னா பாருங்க’ என்றார் கெமிகல்ஸ் கம்பெனி ஓனர்.
ரொம்ப அவதிப்பட்டிருக்கிறார்கள் என்பது அவர்கள் பேச்சில் தெரிந்தது.
ஆறுதல் கூறுவோமே என்று ‘பெண்டாட்டி, பிள்ளைகள் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணறதுக்கே கவலைப்படறீங்களே.
இங்கிலாந்துல வீட்டில வளர்ர கிளி யாரும் இல்லாத போது சூப்பர்மார்க்கெட்டுக்கு ஃபோன்
பண்ணி தனக்கு ரொம்ப பிடிச்ச தர்பூஸ், திராட்சை, ப்ராக்கலி, ஐஸ் க்ரீம் ஆர்டர் பண்ணி
விளையாட காத்தாடியும் பத்தாததுக்கு பல்பும் ஆர்டர் பண்ணியிருக்கு’ என்றேன்.
’அட’, ‘அப்படியா’ என்று குரல்கள் கேட்டது. அவர்கள் பாரம் சற்று குறைந்தது.
நாம் தான் குடும்பத்தால் ஆன்லைன் அவதிப்படுகிறோம் என்று பார்த்தால் மற்றவர்கள் இதை
விட மோசமான நிலையில் இருப்பது மனதிற்கு ஒரு ஆறுதலாய் இருந்திருக்கும் அவர்களுக்கு.
வீட்டில் கரண்ட் போகும் போது அக்கம்பக்கம் பார்த்து அங்கும் கரண்ட் இல்லை என்று நம்
மனதை திடப்படுத்திக்கொள்வது போல!
’நிஜமாவா சார்’ என்றார் கெமிகல்ஸ் ஓனர்.
‘கிளி மேல சத்தியமா சார். ஆப்பரிக்க க்ரே வகை கிளி. மனுஷங்க மாதிரி
பேசும். முதல்ல எதோ சரணாலயத்தில இருந்திருக்கு. ஆனா பாருங்க, அங்க வர டூரிஸ்டை அசிங்கமா
வய்யுமாம். இதனால கூட்டம் குறையுதுன்னு அங்க வேலை செய்யற மேரியன்னு ஒருத்தர் அத தன்
வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து ரோக்கோன்னு பெயர் வெச்சு வளர்க்கரார். வளர்த்த கிளி பாருங்க,
ஆன்லைன் மார்ல பாயுது’.
‘நல்ல வேளை, என் பொண்டாட்டி நாய் தான் வளர்க்கறா’ என்றார் இஞ்சினியர்.
’ஆன்லைன் கம்பெனி எப்படி இப்படி குறஞ்ச விலைல விக்க முடியுது’ என்றார்
பாங்க்.
‘அது என்ன கன்றாவியோ தெரியல சார். வென்சர் ஃபண்ட் பஞ்சர் ஃபண்டெல்லாம்
ஆன்லைன் கம்பெனிகள்ல பணத்தை போய் கொட்றாங்க. என்ன எழவு நேர்த்தி கடனோ தெரியல’ என்றேன்.
‘பைஜூன்னு ஆன்லைன் கம்பெனிக்கு 540 மில்லியன் டாலர் தந்திருக்காங்க’
என்றார் ட்யூஷன் செண்டர் நடத்தும் டீச்சர். ‘ஆன்லைன்ல பாடம் சொல்லி தர கம்பெனி’ என்று
நிறுத்தி ‘நானும் தான் ட்யூஷன் எடுக்கறேன். எனக்கு பசங்களே சரியா வரதில்ல. இந்த கம்பெனிக்கு
மட்டும் எப்படி சார் இத்தனை பணம் வருது’ என்றார்.
‘அவங்க கோடிக்கணக்கில பணம் தத்து ஷாரூக் கான் வச்சு விளம்பரம் செஞ்சாங்க.
அதில மயங்கி பணம் தந்திருப்பாங்க. நீங்களும் அப்படி பண்ணிப் பாருங்களேன். உங்களுக்கும்
ஒரு இளிச்சவாயன் கிடைக்காமலா போவான்’ என்றேன்.
’எங்கிட்ட அவ்வளவு பணமில்லையே’.
‘ஷாரூக் கான் இல்லன்னா என்ன, உங்க சக்திக்கு ஏத்த மாதிரி மன்சூர்
அலி கான் வச்சு விளம்பரம் பண்ணுங்க’. அவரை உற்சாகப்படுத்தத் தான் கூறினேன். ஆனால் அவர்
ஏனோ முகத்தை திருப்பிக்கொண்டார்.
’ஆன்லைன்ல நிறைய ஃப்ராடு நடக்குதாம் சார்’ என்று ஆரம்பித்தார் சென்டர்ல்
கவர்மெண்ட். ‘சாப்பாடு டெலிவரி பண்ற கம்பெனிகாரர் ஒருத்தர் ஆர்டர் பண்ண சாப்பாட்ட பாதி
சாப்டுருக்கார். நல்லா இல்லை போலிருக்கு. மீதிய மட்டும் டெலிவரி பண்ணியிருக்கார்’ என்றார்.
‘விடுங்க சார், அரசியல்வாதிங்க நம்ம வரிப்பணத்தை சாப்டு மீதிய தானே
நாட்டுக்கு செலவழிக்கறாங்க. இந்த டெலிவரி பாய் செஞ்சது பெரிய தப்பில்ல’ என்றார் பாங்க்.
தப்பை சப்பு கட்டி அதன் தீவிரத்தை குறைத்து நாளடைவில் அதை தப்பே
இல்லை என்று சித்தரிக்கும் இந்திய பண்பை நினைத்தேன். அமரர் சுஜாதா எழுதிய வரிகள் நினைவிற்கு
வந்தது. ‘தப்பு என்ன பனியன் சைஸா, ஸ்மால், மீடியம், லார்ஜ் என்று பார்த்து மன்னிக்க’.
அந்நேரம் எதிரில் வந்த இளைஞனை செண்ட்ரல் கவர்ன்மெண்ட் நிறுத்தினார்.
’வாப்பா உனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிருக்காமே’ என்றார். குரலில் ஒரு எகத்தாளம். அக்கம்பக்கமும்
கரண்ட் போகும் திருப்தி!
‘ஆமா சார், மேட்ரிமோனியல் சைட்ல அப்பா ரிஜிஸ்டர் பண்ணியிருந்தார்.
அதுல ஒரு பெண்ணை செலக்ட் செஞ்சு ஜாதகம் எல்லாம் பார்த்தார். பொருந்தியிருக்கு. நான்
பொண்ண பாக்கல, ஆனா ஃபோட்டோ பாத்து ஓகே சொல்லிட்டேன்’ என்றான்.
இந்த செண்ட்ரல் கவர்ன்மெண்ட் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம். ‘பாத்துப்பா, இப்ப தான் பேசிட்டிருந்தோம். ஒரு சாப்பாடு டெலிவரி கம்பெனிக்காரர்’ என்று துவங்கி ’நீயோ ஆன்லைன்ல ஆர்டர் பண்ணியிருக்கேன்னு சொல்ற’ என்று தொடர, நான் நைஸாக அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டேன்.
அனேகமாய் இந்நேரம் செண்ட்ரல் கவர்ன்மெண்ட் கவிழ்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்!