A lady struck up a conversation with a marketer.
“Why”, she asked “did you put two Xs in Exxon?”
“Why ask?” he asked.
“Because”, she said, “I couldn’t help noticing?”
“Well”, he responded, “that’s the answer!”
A lady struck up a conversation with a marketer.
“Why”, she asked “did you put two Xs in Exxon?”
“Why ask?” he asked.
“Because”, she said, “I couldn’t help noticing?”
“Well”, he responded, “that’s the answer!”
இத்தனை காலம் ஆண்களிடம் பேசி அலுத்துவிட்டது. அப்படி பேசித் தான் என்னத்தை கண்டேன். அதனால் இன்று பெண்களை பற்றி கொஞ்சம் பேசலாம் என்றிருக்கிறேன்.
அதற்காக வெடுக்கென்று வேற சைட்டுக்கு போகாதீர்கள். பெண்களை பற்றி உங்களிடம் பேசலாம் என்றிருக்கிறேன். தொடர்ந்து படியுங்கள்.
அது சரி, எதற்காக யாராவாது வருகிறார்களா என்று அங்குமிங்கும் பார்த்துவிட்டு படிக்கிறீர்கள்? மணைவி வருகிறாளா என்றா? சார், பெண்களைப் பற்றி பேசப் போகிறேன் என்று சொன்னதென்னவோ வாஸ்வதம். ஆனால் நாம் பேசப் போவது பலான மேட்டர் பற்றி அல்ல, பிசினஸ் மேட்டர்!
சீப்பு, சோப்பு முதல் ரவா, கோதுமை வரை, வாஷிங் மெஷின் முதல் வேக்யூம் க்ளீனர் வரை பெரும்பாலும் விளம்பரங்கள் பெண்களை மட்டுமே மய்யப்படுத்துவதைப் பார்த்திருப்பீர்கள். எதோ பெண்கள் தான் எல்லா வேலையும் செய்வது போலவும், அவர்கள் தான் குடும்பத்தை பராமரிப்பது மாதிரியும் சித்திரிக்கப்படுகிறார்கள். குடும்ப பராமரிப்பை விடுங்கள். ஆண்கள் குளிப்பது கூட இல்லையா? பவுடர், ஷாம்பு போடுவதில்லையா? ஆண்கள் ஏன் விளம்பரங்களில் வஞ்சிக்கப்படுகிறார்கள்? ஒய் திஸ் ஓரவஞ்சனை?
விடை ரொம்ப ஈசி. பெரும்பாலான பொருட்களை பெண்கள் தான் வாங்குகிறார்கள். எந்த கடையில் வாங்குவது என்பதிலிருந்து எந்த ப்ராண்டை தேர்ந்தெடுப்பது என்பது வரை சர்வம் பெண்கள் கைங்கர்யமே. நம் வீடுகளில் பர்சேஸ் டிபார்ட்மெண்ட்டின் நிரந்தர முதல்வர் பெண்களே. அதனால் தான் மளிகை கடை முதல் சூப்பர்மார்க்கெட் வரை, ஃபேன்சி ஸ்டோர் முதல் ஜவுளி கடை வரை அதிகமாக தென்படுவதும் அவர்களே. ஆண்களை காண ஆசைப்படுபவர்கள் பெட்டி கடை வெளியிலோ அல்லது டாஸ்மாக் உள்ளேயோ பார்க்கவும்!
வீட்டிற்கு தேவையான பொருட்கள் பெரும்பாலானவற்றை வாங்குவது பெண்கள் என்பதால் அவர்களே விளம்பரங்களில் முக்கியத்துவம் பெறுகிறார்கள். இது நியாயமானது. ஒழிந்து போகிறது என்று விட்டுவிடலாம். ஆனால் ஏன் பொருட்களை விற்கும் கம்பெனிகளின் மார்க்கெட்டிங் துறை மற்றும் நிர்வாகத்தில் பெண்களை அதிகம் காண முடிவதில்லை? கடைகள் முதல் கம்பெனிகள் வரை முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருக்கிறார்கள். கம்பெனியில் வேலை செய்த நாள் முதல் மார்க்கெட்டிங் ஆலோசகனாய் இருக்கும் இக்காலம் வரை அபீஸ் கான்ஃபரென்ஸ் ரூமில் நான் சந்தித்த பெண்கள் மிக சொற்பமே. எனக்கு பயந்து பெண்கள் அந்த ரூம் பக்கமே வராமல் இருந்தார்களா என்பது பற்றி தகவல் இல்லை!
இந்திய திருநாட்டில் மட்டும் தான் இந்த இருட்டடிப்பு என்றில்லை. ஆனாளப்பட்ட அமெரிக்காவிலும் இதே கதி தான். ‘Fortune 500’ எனப்படும் அமெரிக்காவின் டாப் ஐனூறு கம்பெனிகளின் நிர்வாக போர்டில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை 15 சதவீதம் தானாம். நம் கிராமங்களில் தான் இந்த கன்றாவி என்றால் கம்பெனிகளில் கூட பெண்களுக்கு கள்ளிப் பால் கொடுக்கப்படுகிறது பாருங்கள்!
’அய்யோ, சமுதாயத்தில் பெண்கள் சரிநிகர்சமானமாக பார்க்கப்படுவதில்லை, அய்யஹோ, ஏன் இந்த அடக்குமுறை, அடடா எதற்காக இந்த ஆணாதிக்கத்தனம்’ என்று கொடி பிடித்து கத்துவதல்ல இக்கட்டுரையின் நோக்கம். ஒரு மார்க்கெட்டராக இதை பார்க்கும் போது இந்த விஷயத்தின் அனர்த்தம் எனக்கு ஆச்சரியமளிக்கிறது. இதனால் நிகழும் தவறுகளை யாரும் கவனிக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
பெண்ணின் மனதை புரிந்துகொள்ள முடியவில்லை என்று பள்ளி பருவதிலிருந்தே புலம்பி வருகிறோம். திருமணத்திற்கு பிறகு அதை புரிந்துகொள்ள முயல்வது முடியாத ஒன்று என்று முடிவு செய்து அம்முயற்சியை மொத்தமாய் கைவிடுகிறோம். ஆபீசிலும் ஏன் இதன் முக்கியத்துவத்தை மறக்கிறோம்?
சொந்த மணைவியையே புரிந்துகொள்ள முடியாத மார்க்கெட்டர்கள் மற்ற பெண்களை எப்படி புரிந்து, அவர்கள் தேவையை அறிந்து தங்கள் ப்ராண்ட் வடிவமைப்பிலிருந்து பொசிஷனிங் வரை, பாக்கேஜிங் முதல் விளம்பரங்கள் வரை அனைத்தையும் செய்யமுடியும்? அவர்கள் ப்ராண்டுகளை வாங்கப்போவது பெண்கள் தான் என்ற பட்சத்தில் அவர்களை தங்களால் சரியாக புரிந்துகொள்ள இயலாது எனும் போது தங்களுக்கு உதவ மார்க்கெட்டிங் துறையிலும் நிர்வாகத்திலும் பெண்களை அல்லவா அதிகம் நியமிக்கவேண்டும்?
அதற்காக ஆபிசில் உள்ள ஆண்களை அடித்து துரத்துங்கள் என்று சொல்லவில்லை. பெண்களை மய்யப்படுத்தியே பல பொருட்கள் இருக்கையில் மார்க்கெட்டிங்கில், நிர்வாகத்தில் பெண்கள் பங்களிப்பு இருக்கவேண்டியதன் அவசியத்தை,அவசரத்தை அறிவுறுத்துகிறேன். பெண் மனதை இன்னொரு பெண்ணால் தான் புரிந்துகொள்ள முடியும் என்று சினிமா முதல் சீரியல் வரை சொல்கிறார்களே. யாரும் இதை மறுத்ததாய் தெரியவில்லையே. ஒரு வேளை இது உண்மையாய் இருக்கும் பட்சத்தில் மார்க்கெட்டிங் விளையாட்டில் அவர்களை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டுமே என்று ஆதங்கப்படுகிறேன்!
நமக்கு பெண்களிடம் எந்த குணங்கள் பிடிக்காதோ அவை தான் மார்க்கெட்டிங் பணி செய்ய அவசியமானவை, நிர்வாகம் செய்ய முக்கியமானவை. மார்க்கெட்டிங்கில் உள்ள பல ஆண்கள் மார்க்கெட், வாடிக்கையாளர், போட்டியாளர்கள் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருப்பது போல் நினைத்துக்கொண்டு அதிகம் கேள்விகள் கேட்டுத் தெரிந்துகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். இதனாலேயே பல கம்பெனிகள் வாடிக்கையாளர்களை சரிவர புரிந்துகொள்ளாமல் தவறான முடிகள் எடுக்கின்றன. கேள்வி கேட்கும் குணத்தில் பெண்கள் எப்படி என்பது தான் கணவன்மார்களுக்கு கண்கலங்க தெரியுமே. கேள்வி கேட்டு குடைந்து குதறுவது பெண்களுக்கு கைவந்த கொலை. ஐ மீன், கலை. பொருள் பிரிவு, வாடிக்கையாளர், போட்டியாளர் போன்றவற்றைப் பற்றி தெரிந்திருந்தும் கேள்விகள் கேட்டு குடைந்து புதிய தகவல்கள் பெற பெண்கள் தான் ரைட் சாய்ஸ்!
அதோடு மார்க்கெட்டிங் துறையில் பெண்களை அதிகம் சேர்த்துக்கொள்வதில் இன்னும் பல சௌகரியங்கள் உண்டு. ஒரே நேரத்தில் பல காரியங்களை செய்ய வேண்டிய சில துறைகளில் மார்க்கெட்டிங்கும் ஒன்று. டீவியில் சீரியல் பார்த்துக்கொண்டே சமையலும் செய்து குழந்தைகளுக்கு ஹோம் ஒர்க் சொல்லித் தந்து, கிடைத்த கேப்பில் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு, பக்கத்து கடைக்கு ஃபோன் செய்து சாமான் ஆர்டர் செய்துகொண்டே பேப்பர் படிக்கும் நம்மிடம் பத்து வேலைகள் தந்து அதை செய்கிறோமா என்று வேவு பார்த்து நாம் செய்யாத பட்சத்தில் திருமணம் செய்த நாளிலிருந்து நான் செய்த தவறுகளை கால வரிசைப்படி கரெக்ட்டாக ஸ்லோகம் சொல்வது போல் சொல்லிக்கொண்டே அறையை பெருக்கி துடைக்கும் அசகாய சூரர்கள் பெண்கள். இந்த அஷ்டாவதானிகளை மார்க்கெட்டிங்கில் சேர்த்துக்கொள்வது கம்பெனிகளுக்கு பிரமாதமாய் பயன் தரும்.
மீட்டிங்கில் ஒருவர் ஒன்றைச் சொன்னார் என்றால் மற்றவர்கள் கேள்வி கேட்காமல் அதை ஒத்துக்கொண்டு பிஸ்கெட் டீயை தின்றுவிட்டு மீட்டிங் முடிக்கப்படுவது தான் பல சமயங்களில் ஆபீசுகளில் நடக்கிறது. சொல்லப்பட்ட விஷயம் பற்றி கேள்வி கேட்டால் தானே சொன்ன விஷயம் சரியா, செய்யத் தகுந்ததா என்பது தெரியும். இதற்காகவே ஒன்றிரண்டு பெண்கள் மீட்டிங்கில் இருந்தால் அவர்கள் கேள்வி கேட்டு குடைந்து பேசப்படும் விஷயத்தின் ஆழம் வரை சென்று சரியான முடிவெடுக்க உதவுவார்கள்.
வாய் ஓயாமல் பேசுகிறார்கள் என்று பெண்களை குறை சொல்கிறோமே, அந்த லொட லொட பேச்சை கொண்டு மார்க்கெட்டை மட மடவென்று புரிந்துகொள்ள முடியும். வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்து அவர்களோடு பேச்சு கொடுத்து அவர்கள் தேவைகள், ப்ராண்ட் பற்றிய அவர்கள் கருத்துக்கள், போட்டி பொருட்களை பற்றிய அவர்கள் எண்ணங்கள் என்று எத்தனை ஃபீட்பேக் பெறமுடியும் என்று சிந்தித்துப் பாருங்கள். வாடிக்கையாளர் ஆய்வு செய்வதற்கென்றே பிரத்யேகமாக ஆர்டர் செய்து தயாரிக்கப்பட்டவர்கள் பெண்கள்!
பெண்கள் கண்டிப்பாய் இருக்கவேண்டிய இன்னொரு இடம் பொருள் வடிவமைப்பு துறை. குறிப்பாக பெண்கள் அதிகம் உபயோகிக்கும் பொருட்களின் பாக்கேஜிங்கை வடிவமைக்கும் போதும் பெண்களின் பங்களிப்பு அதில் அசாத்திய பயன் தரும். பொதுவாகவே பெண்களுக்கு அழுகுணர்ச்சி அதிகம். அவர்களை விட்டு நீங்களும் நானும் மட்டும் பொருளை வடிவமைத்தால் எப்படி இருக்கும்? தலைமுடியை கோதி விட்டுக்கொள்ளாதீர்கள். எனக்குப் புரிகிறது!
நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் ஆசை லவலேசம் கம்பெனிகளுக்கு இருந்தால் பத்து மணி முதல் ஆறு மணி வரை ஆபீசில் அமர்ந்து செய்வது தான் வேலை என்ற எண்ணத்தை விட்டொழிப்பது உசிதம். வேலை என்பது ஆபீசில் மட்டுமே செய்யப்படும் ஒன்று என்ற கோட்பாடு வழக்கொழிந்து போய்கொண்டிருக்கிறது. வீட்டிலிருந்தே உழைப்பது, ஃப்ளெக்சி ஒர்க்கிங் என்று திறமை இருந்தும் ஏதோ சில காரணங்களுக்காக முழு நேரமும் ஆபீஸ் சென்று உழைப்பவர் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகிறது. இதில் பெண்கள் தான் அதிகம். அப்பேற்பட்ட பெண்களின் திறமையை பயன்படுத்தும் ஆசையிருந்தால் அவர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்கலாம். வாரத்திற்கு ஒரு சில நாட்கள் மட்டும் ஒரு சில மணி நேரங்கள் ஆபிசுக்கு வந்து போக சொல்லலாம்.
இதையெல்லாம் சொல்வதால் சாஸ்திரத்திற்கு மட்டும் ஏதோ ஒரு பெண்ணை பிடித்து மார்க்கெட்டிங் துறையிலோ நிர்வாகத்திலோ அமர்த்தி ‘நீ சொன்னது போல் செய்துவிட்டேன், பெண் உரிமை வாழ்க’ என்று அதோடு உங்கள் வேலை முடிந்தது போல் பேசாமல் இருந்து விடாதீர்கள். ஆய்வு ஒன்றில் கம்பெனி நிர்வாக போர்டுகளில் ஒரே ஒரு பெண்மணி மட்டும் இருக்கும் போது மீட்டிங்களில் அவர் பேசக் கூச்சப்பட்டு அதிகம் பங்களிக்காமல் அமைதியாக இருப்பதையும் குறைந்தது மூன்று பெண்கள் போர்டு மீட்டிங்குகளில் இருக்கையில் தைரியமாக கேள்விகள் கேட்டு அதிகம் பங்களித்து நல்ல முடிவுகள் எடுக்க முடிவதையும் கண்டுபிடித்திருக்கின்றனர். அதனால் உங்கள் மார்க்கெட்டிங் முதல் நிர்வாகம் வரை முடிந்தவரை கொஞ்சம் கூடுதலாகவே பெண்களை நியமியுங்கள். உங்கள் பிசினஸும் ப்ராண்டும் தீர்க்கசுமங்கலியாய் இருக்கும்!
அதோடு ஒரு சின்ன வேண்டுகோள். என்றாவது ஆபீஸ் பக்கம் வரும் உங்கள் மனைவி உங்களை சுற்றி சகட்டுமேனிக்கு பெண்கள் இருப்பதைப் பார்த்துவிட்டு ‘யாரைக் கேட்டு இத்தனை பெண்களை வேலைக்கு சேர்த்தீர்கள்’ என்று கேட்டால் தயவு செய்து என் பெயரை கூறி தொலைக்காதீர்கள்!