அண்டை மண்ணில் வெற்றிக் கொடி நாட்டி வந்திருக்கிறோம். அடிபட்டு மிதிபட்டு ரத்தம் சிந்தியும் புறமுதுகு காட்டாது பகையோடு போரிட்டு எதிரியை பின்னங்கால் பிடறி பட ஓட விரட்டியிருக்கிறோம். சின்ன கோலியாத்கள் பெரிய டேவிட்டை நையப் புடைத்து திரும்பியிருக்கிறார்கள். அதிகம் அனுபவமில்லாத இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவை வென்ற கதை உபன்யாசமாய் ஒலிக்கிறது. கங்காருகொண்டான் என்ற பட்டம் கொடுத்து ஆஸ்திரேலியபரணி பாடாதது ஒன்று தான் குறை.
புகழ் பாடுவது நியாயமே. உடம்பில் பட்டுக்கொண்டது சாதாரண அடியில்லை. அதை மீறி களத்தில் பெற்றது சாதாரண வெற்றியுமில்லை. முப்பதாறு ரன்களில் சுருண்டு, கைகால் எல்லாம் கழண்டு, இனவெறி பேச்சால் வெகுண்டு பெற்ற வெற்றி நம் பேரக்குழந்தைகள் காலம் வரை பேசப்படவேண்டியதே. இந்தியனாய் நமக்கெல்லாம் பெருமை. தமிழ் வீரர்கள் சேர்ந்து பெற்ற வெற்றியால் தமிழனாயும் பெருமிதம்!
’அனைவருக்கும் ஒரு பாடு பாடிவிட்டார்கள். நீயும் வந்துவிட்டாயா கிரிக்கெட் வெற்றி புராணம் பாட’ என்று புலம்பாதீர்கள். முதல் இரண்டு பத்தி நானும் இந்திய கிரிக்கெட் ரசிகன், அதன் வெற்றியில் மனமுருகுபவன் என்று காட்டவே. பெற்ற வெற்றிக்கு பின் படிக்கவேண்டிய பாடங்களும் தட்டி எழுப்ப வேண்டிய தவறுகளும் கற்றுக்கொள்ள வேண்டிய கஷ்டங்களும் இருக்க அதை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களே என்ற விசாரம் எனக்கு. என் கவலையை கடை பரப்பவே இந்த கட்டுரை.
கோச் ரவி சாஸ்திரி நீங்கலாக சென்றவரெல்லாம் ஆடும் அளவிற்கு ஆளாளுக்கு அடி. ஆஸ்பத்திரிக்கு அன்றாடம் ஷேத்திராடனம். இந்திய ஃபிசியோக்கு ஆடுகளத்திலேயே ஆதார் கார்ட் தரும் அளவிற்கு அங்கேயே ஜாகை. இடுப்பு சுளுக்கு முதல் எலும்பு முறிவு வரை ஒன்று பாக்கியில்லை. மொத்த டீமும் செத்து பிழைத்திருக்கிறது. வீரத்தோடு ஆடியது பிரமாதம் தான். ஆனால் இத்தனை காலம் கிரிக்கெட் ஆடியும் பேஸ், ஸ்விங், பவுன்ஸ் என்றால் நம்மவர்கள் பாதாதிகேசமும் பட்டுக்கொள்ளாமல் ஆட இன்னும் பழகவில்லை என்பது மீண்டும் புரிகிறது. வெளிநாடு சென்று திரும்பும்போதெல்லாம் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ளும் திறன் வளர்க்கும் வகையில் இந்திய பிட்சுகளை மாற்றவேண்டும் என்று பேசி அடுத்த வெற்றியில் அதை மறக்க பழகிவிட்டோம். ‘மறதி நமது தேசிய வியாதி’ என்று ‘சுஜாதா’ சொன்னது சரியே. ’பார்டர்-கவாஸ்கர் கோப்பை’ உள்ளிருக்கும் வியாதியை மறைத்துவிட்டது.
எனக்குத் தெரிந்து ஒலிம்பிக்ஸில் பங்கேற்க கட்சி மாநாடு போல் இந்தியாவிலிருந்து கூட்டம் செல்லும். அதற்கடுத்த பெரிய கூட்டம் இம்முறை ஆஸ்திரேலியா சென்றது. சகட்டு மேனிக்கு அனைவரும் ஆடும் அளவிற்கு வாய்ப்பு கிடைத்தது. குழந்தை பிறப்பு, கை முறிவு என்று சிலர் தாயகம் திரும்பியது கூட ஓகே. பாதி ஓவரில் கால் இழுத்து, கை சுளுக்கிக்கொள்வதை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது? ஃபிசியோ, உதவியாளர் என்று இத்தனை பேர் இருந்தும் ஏன் நம்மவர்களுக்கு நடந்தால் இழுத்து, அமர்ந்தால் சுளுக்கு பிடிக்கிறது? ஐபிஎல் ஆடி ஆடி நாற்பது ஓவர்களுக்கு மேல் ஆடினால் நாக்கில் நுறை தப்புகிறதா. இதை பற்றி யாரும் பேசுவதில்லை. பெற்ற வெற்றி இந்த பிரச்சனையை பெட்டியில் போட்டு மூடிவிட்டது.
‘இந்திய அணிக்கு கோவிட் டெஸ்ட்டே தேவையில்லை. பேட்டிலிருந்து வரும் எதையும் அவர்கள் பிடிக்கமாட்டார்கள்’ என்றது ஒரு வாட்ஸ் அப் மீம்ஸ். பேட் என்றால் மட்டை மட்டுமல்ல வௌவாலும் என்ற அர்த்தத்தில் வந்த ஜோக். அது உண்மை என்பது போல் வந்த காட்சுகளை சோஷியல் டிஸ்டன்சிங் செய்து நம்மவர்கள் தாரை வார்த்தார்கள். வெண்ணெய் தின்ற கிருஷ்ணர்கள் கையிலும் தடவிக்கொண்டு வந்த காட்சுகளை வாங்கி வாங்கி விட்டார்கள். இந்த லட்சணத்தில் இந்த டீமுக்கு ஒரு ஃபீல்டிங் கோச் வேறு. இதைப் பற்றி இப்பொழுது பேசுகிறோமா? மூச். விட்ட காட்சுகளைப் போல் முக்கியமான இந்த விஷயத்தையும் கையில் வாங்காமல் கோட்டை விட்டோம்.
ரிஷப் பண்ட் பேட்டிங்கில் பின்னி பெடலெடுத்தார். இளங்கன்று பயமறியாத ஆட்டம். ஸ்டம்புக்கு முன்னால் நின்றால் கலகலக்கும் அவர் ஸ்டம்புக்கு பின்னால் நின்றால் டொடலொடக்கிறார். விக்கெட் கீப்பிங் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கிறார். அத்தனை பெரிய கீப்பிங் க்ளவுஸ் இருந்தும் ’வந்தது எல்லாம் தங்கிவிட்டால் இந்த க்ளவுசில் பந்துக்கு இடமேது’ என்று பேதாஸ் சாங் பாடும் ரேஞ்சிற்கு இருக்கிறது அவர் கீப்பிங். பாட்ஸ்மென் தானே பரிதாபப்பட்டு தன் காட்சை தானே பிடித்து அவுட் ஆனால் தான் உண்டு. பாதி பேட்டிங் பாதி கீப்பிங் என்பதெல்லம் பத்தாது, ஒன்று நல்ல பாட்ஸ்மெனாய் ஆடட்டும், வேறு கீப்பராய் தேடுவோம் என்று யாரும் பேசுவதில்லை. டவுன் அண்டரில் பெற்ற வெற்றி இல்லையா இந்த முக்கிய மேட்டரும் டவுன் அண்டரில் புதைக்கப்பட்டுவிட்டது.
விக்கெட் கீப்பரின் இன்னொரு பணி அம்பயர் அவுட் தராதபோது தர்ட் அம்பயரிடம் DRS கேட்பது. ரிஷப் பண்ட் அப்படி கேட்டால் இந்திய வீரர்கள் களத்திலேயே அவரைப் பார்த்து சிரிக்கிறார்கள். மாட்சை பார்க்கிறாரா என்றே சந்தேகம் வரும் அளவிற்கு இருக்கிறது அவர் DRS கேட்கும் அழகு. சரி, அனுபவ குறைச்சல் என்று விடலாம். அட ஒரு பேச்சுக்காவது குறை பற்றி அவரிடம் கூறவேண்டாமா. அதான் வென்றாகிவிட்டதே அடுத்த தோல்வியில் பார்த்துக்கொள்வோம் என்று இதையும் மறந்துவிட்டோம்.
சரி, கூற வந்த விஷயத்திற்கு வருகிறேன். ’கிழிந்தது போ, நீ இன்னும் விஷயத்திற்கே வரலையா’ என்று நீங்கள் கேட்பதை நம் ஃபீல்டர்கள் போல் ட்ராப் செய்கிறேன். வெற்றியில் குறை காண்கிறாய், ரோஜாவை விட்டு அதிலுள்ள முள்ளை பார்க்கிறாய் என்று நினைக்காதீர்கள். ‘காபா’ க்ரவுண்டில் மொத்த இந்திய டீமும் மூவர்ண கொடியை பிடித்தபடி நடந்த போதும், நம்மூர் நடராஜன் வெற்றிக்கோப்பை பிடித்தபடி நின்ற போதும் உங்களை போல எனக்கும் வகுடு எடுத்து வாரும் அளவிற்கு மயிர்கூச்செறித்தது. ஆனால் பெற்ற வெற்றி கற்கவேண்டிய பாடங்களை மறைக்கும் போது, மொத்தமாய் அதை நாம் மறக்கும்போது தான் சின்ன பிரச்சனைகள் வேக்சீன் இல்லாமல் வளர்கிறது. ’சண்டையில் தோற்றாலும் போரில் வெல்’ என்று ஒரு வாசகம் உண்டு. சண்டையில் வென்று போரில் தோற்கக் கூடாதே என்பது தான் என் கவலை.
கிரிக்கெட் ஆகட்டும், பிசினஸ் ஆகட்டும். சின்ன வெற்றிகளை கொண்டாடும் அதே நேரம் அதில் மறைந்திருக்கும் பெரிய பாடங்களை நாம் படிக்கத் தவறுகிறோம். வெற்றி மயக்கம் நம் கண்களை மறைக்கிறது. ஏனெனில் சின்ன வெற்றிகள் தான் பெரிய தோல்விக்கான விதைகளை வளர்க்கும் உரம். ‘நோக்கியா’ என்ற கம்பெனி ஞாபகம் இருக்கிறதா. சதா சர்வ காலமும் நம் பாக்கேட்டில் படுத்து இதயத்தோடு இழைந்த கம்பெனி. உலகில் நான்கில் மூவர் நோக்கியா ஃபோன் வைத்திருந்த காலம் உண்டு. அதன் வெற்றி மட்டுமே தலைப்பு செய்தியாயிற்று. அதன் குறைகளும் குற்றங்களும் குறுஞ்செய்தியாகக் கூட யார் கண்ணிலும் படவில்லை. அத்தனையும் ஒரு நாள் பிரவாகமாய் பெருக்கெடுத்து எரிமலையாய் வெடித்து சிதறி மொத்த கம்பெனியையும் புதைத்தது. அந்த அழிவு அரங்கேற அதிக காலம் எடுக்கவில்லை என்பதை உணர்ந்தீர்களா. நோக்கியா இன்று எங்கு நோக்கியும் ’நோ’ கியா!
ஒரு ஊரில் ’பிக் பஜார்’ என்ற கடை இருந்ததாம். ஊரெல்லாம் பிறந்து தெருவெலாம் வளர்ந்ததாம். பெரிய சைஸாம். ஊரே போற்றியதாம். அதனால் தானோ என்னவோ அதன் சிறிய ப்ராப்ளம்ஸ் யார் கண்ணிலும் படாமலே போனதாம். குறைந்த விலையில் பொருள் விற்ற கம்பெனியையே இன்று குறைந்த விலையில் மற்றவர் வாங்க லைன் கட்டுகிறார்களாம். தேவையா இந்த தலையெழுத்து!
‘காஃபி டே’, ‘ஜெட் ஏர்வேஸ்‘, ‘சுபிக்ஷா’ என்று கம்பெனிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அவை அனைத்தும் ஒரு காலத்தில் வெற்றி கதைகள். அதன் வெற்றிகளை மட்டுமே பார்க்கத் தெரிந்த அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அவைகளுக்குள் இருந்த பிரச்சனைகளை பார்க்க தவறினார்கள். தோற்ற பின் காரணம் தேடினார்கள்.
வெற்றி தரும் போதை இதைத் தான் செவ்வனே செய்கிறது. தோல்விக்கான விதைகள் விஷங்களாய் விதைந்திருப்பதை மறைக்கிறது. மறுக்கிறது. அந்த அரளி சைஸ் விதை தான் ஆலகால விஷமாய் வளர்ந்து கம்பெனியை கபளீகரம் செய்கிறது. எந்த ஃபிசியோ வந்தாலும் காப்பாற்ற முடியாமல் செய்கிறது. சின்னி கல்லு, பெத்த லாஸ்!
வெளி வெற்றிகள் கொண்டாடப்படவேண்டும். அதே நேரம் உள்ளிருக்கும் குறைகள் தேடப்படவேண்டும். தோல்விக்கு பின் போஸ்ட் மார்ட்டம் செய்கிறோம். காரணம் என்ன என்று கண்டுகொள்ள. வெற்றிக்கும் அதை செய்வது அவசியம். இந்திய கிரிக்கெட் அணி முதல் இந்திய தொழிலதிபர்கள் வரை விதிவிலக்கில்லாத விதி இது!
மை டியர் இந்தியன் டீம், நீங்கள் பெற்றது சாமனிய வெற்றியல்ல. என்ஜாய். ஓபன் தி பாட்டில். போதை தெளிந்து ஹாங்ஓவர் போன பின் உங்களிடம் சற்று பேச வேண்டும்!