நம் சின்ன வயதை கலகலப்பாக்கிய விஷயங்களில் ஒன்று ஸ்கூலில் யாருடனாவது நாம் இறங்கிய கைகலப்புகள். யாரையாவது வம்பிழுத்து பாக்சிங்கில் ஆரம்பித்து மல்யுத்த லெவலுக்கு உருண்டு கலிங்கரத்துபரணி பாடும் ரேஞ்சிற்கு சண்டை போட்டோம். சண்டைக்கு காரணம் இருந்ததோ இல்லையோ நம்மை விட சிறியவர்களோடு மட்டும் சண்டை போட்டோம். படிப்பு ஏறவில்லை என்றாலும் அந்த வயதில் ஒன்று தெளிவாய் புரிந்தது. நம்மை விட பெரியவனோடு சண்டையிட்டால் கதை கந்தலாகி நம் கபாலம் முதல் கால் கட்டை விரல் வரை பின்னி பெடலெடுத்து பெண்டை நிமிர்த்துவான் என்று. அதனால் ஒத்த சைஸ் பையனோடு சத்தம் போட்டு சண்டை போட்டோம்.
பள்ளியில் படிக்கும் போது இருக்கும் இந்த அறிவு பெரியவனாகி எம்பிஎ படித்து மார்க்கெட்டிங்கில் சேர்ந்த பிறகு சிலருக்கு மொத்தமாய் மறந்து போகிறது. தன்னை விட பத்து மடங்கு பெரிய ப்ராண்டோடு சண்டையிட்டு மார்க்கெட்டில் நேருக்கு நேர் மோதி முன்பக்கம் நையப்புடைக்கப்பட்டு அடி தாங்காமல் புறமுகுது காட்டி ஓடும் போது பேக்சைட் முழுவதும் பந்தாடப்பட்டு பாதாதிகேசமும் பஞ்சர் ஆகிறார்கள்.
அப்படி ஒரு சண்டையை தேவையில்லாமல் துவங்கியிருக்கிறது ‘இந்துஸ்தான் லீவர்’ கம்பெனியின் ‘டோமெக்ஸ்’. அது வலிய சென்று வம்புக்கு இழுத்திருப்பது ‘ரெக்கிட்’ கம்பெனியின் ‘ஹார்பிக்’கை. பாரத பாத்ரூம்களின் பாஸ் ஹார்பிக். எழுபது சதவீத மார்க்கெட் ஷேர் உள்ள ப்ராண்ட். டோமெக்ஸ் மார்கெட் ஷேர் ஏழு சதவீதம் மட்டுமே. தன்னை விட பத்து மடங்கு பலமான ஹார்பிக்கை வம்புக்கிழுத்திருக்கிறது. சும்மா சொல்லக்கூடாது. கேட்டு வாங்கி தூக்கு மாட்டிக்கொள்ள தயாராகியிருக்கிறது.
என்ன தப்பு? டொமெக்ஸ் வளரக்கூடாதா? சின்னதாகவே தான் இருக்கவேண்டுமா? பெரிய ப்ராண்டோடு போட்டி போடக்கூடாதா?
வளர வேண்டும் தான். ஆனால் யாரோடு மோதி எப்படி வளர்வது என்ற வரைமுறை . வியாபாரத்தை விடுங்கள், வாழ்க்கையில் கூட நம்மை விட சிறிய சைஸ் பகையோடல்லவா சண்டையிடவேண்டும். இப்படியா ஒரு பகாசுரனோடு மோதுவது. அதுவும் நேருக்கு நேராகவா. ப்ராப்ளம் வந்தால் புறமுதுகு காட்டி கூட ஓட முடியாதே.
டீவியில் பேப்பரில் பார்த்திருப்பீர்கள் டோமெக்ஸ் புதிய விளம்பரத்தை. ஹார்பிக்கை காட்டி இது பாத்ரூமை சுத்தம் மட்டுமே செய்யும், நாற்றத்தை போக்காது. டோமெக்ஸ் நாற்றத்தை போக்கி நறுமணம் தரும் என்பது போல் நேருக்கு நேர் காட்டும்படியான கம்பாரடிவ் அட்வர்டைசிங் ரக விளம்பரம். ஹிந்தி மொழியில் ஒரு நடிகையும் தமிழில் நடிகை ரேவதியும் டோமெக்ஸ் பற்றி பேசுவதாய் சித்தரித்திருக்கிறார்கள்.
இந்துஸ்தான் லீவரிடம் கோடி கோடியாய் பணம் இருக்கிறது. டீவியை போட்டாலே இந்த விளம்பரம் வரும்படி இழைக்கப்போகிறார்கள். போதாக் குறைக்கு நடிகையை வைத்து விளம்பரம் செய்திருப்பதால் மக்கள் கவனத்தை ஈர்க்கும். அப்புறம் என்ன டோமெக்ஸ் காட்டில் மழை தான் என்று நீங்கள் நினைக்கலாம். பிரச்சனை இவை அல்ல. அவர்கள் பிரச்சனை ஹார்பிக். டோமெக்ஸ் அடிக்க கையை ஓங்கியிருப்பது லேசுபட்டவள் அல்ல. ஸ்வர்னாக்கா!
இந்த டோமெக்ஸ் ஹார்பிக் மேட்டர் முடிவு எப்படி இருக்கும் என்பதை மார்க்கெட்டிங் தர்ட் அம்பயரிடம் கேட்டுப் பார்ப்போம்.
சண்டை போட முதலில் தரையில் பேலன்ஸ் செய்து நிற்கும் திறமை வேண்டும். எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று விற்க வழி தேடி நிற்கிறது டோமெக்ஸ். அதே பாத்ரூம் பிரிவில் அரியனையில் கால் மேல் காட்டு போட்டு கோலோச்சுகிறது ஹார்பிக். பாத்ரூம் க்ளீனர் என்றாலே பெரும்பாலானவர் மனதில் தோன்றும் ப்ராண்ட். பல லட்சம் தாய்மார்களின் நம்பிக்கை பெற்ற ப்ராண்டும் கூட. நிற்க வழியில்லாமல் சண்டை போட வந்திருக்கும் டோமெக்ஸை உட்கார்ந்த வாக்கிலேயே ஊதி தள்ளாதா ஹார்பிக். சூப்பர்ஸ்டார் சொன்னது போல எழுந்து நிக்கவே வக்கில்லாதவன் ஒன்பது பொண்டாட்டி கேட்பது கொஞ்சம் ஓவர் இல்லையா. ஆக, பால் பிட்சிட் இன் லைன். முதல் ரெட்!
போர் கலையை கற்றுத் தருபவர்கள் கூறும் முக்கிய பாடம் எண்ண்ணிக்கையில் அதிகமிருக்கும் பகையுடன் நேருக்கு நேர் மோதாதே என்பதை. கணிதத்தில் நான் சற்று வீக் என்றாலும் ஏழை விட எழுபது ரொம்பவே பெரியது என்று தோன்றுகிறது. ஏழு பேர் மட்டுமே கொண்ட படை எழுபது பேர் கொண்ட பகையுடன் மோதினால் என்ன ஆகும். வேறென்ன, தர்பனம் தான். டோமெக்ஸ் தன்னை போல் எங்க வீட்டுகாரரும் பாத்ரூம் க்ளீன் பண்றார் என்பது போன்ற சின்ன ப்ராண்டுகளோடு சண்டை போட்டாலாவது ஏதாவது தேறியிருக்கும். எழுபது யானைகள் புடை சூழ வரும் சாம்ராட்டிடம் சண்டையிடுவது டோமெக்ஸுக்கே சற்று ஓவராக தெரியவில்லையா. ஆக, இம்பாக்ட் இன் லைன். இரண்டாவது ரெட்!
பாத்ரூம் முதலில் சுத்தமாய் இருக்கவேண்டும். அதோடு சற்று வாசனையாக இருந்தால் பெட்டர். இப்பொருள் பிரிவின் ஆதார உண்மை இதுவே. பாத்ரூமின் மூலை முடுக்கெல்லாம் கூட சுத்தம் செய்யும் வகையில் அழகான வடிவமைப்போடு சுத்தம் என்று சத்தமாய் பல காலம் அலறி வருகிறது ஹார்பிக். அந்த மழையில் நேற்று முளைத்த காளான் நான் பாத்ரூமை வாசனையோடு வைக்கிறேன் என்று சத்தம் போட்டால் சுத்தம் என்கிற சத்தமே அங்கில்லையே. சுத்தப்படுத்துகிறேன் அதோடு கொஞ்சம் வாசனையாகவும் வைக்கிறேன் என்றல்லவா டோமெக்ஸ் சொல்லயிருக்க வேண்டும். டோமெக்ஸ் சுத்தம் செய்யும் என்பதையே மக்கள் இதுவரை பெரியதாக நம்பவில்லையே. அப்படி நம்பியிருந்தால் வெறும் ஏழு சதவித மார்கெட் ஷேருடன் மேலே வளரும் வழி தேடி தவித்துக்கொண்டிருக்காதே. சுத்தம் என்கிற சினிமா டிக்கேட் வாங்காமல் வாசனை என்கிற வண்டியை நிறுத்த பார்க்கிங் டிக்கெட் வாங்கிவிட்டு என்னையும் பாத்ரூம் ஆட்டத்தில் சேர்த்துக்கொள் என்றால் திருமதி வாடிக்கையாளர் டோமெக்ஸை ஏன் பார்க்கப்போகிறார். அல்லது வாங்கத் தான் போகிறார். ஆக, பால் இஸ் ஹிட்டிங் ஸ்டம்ப்ஸ். மூன்றாவது ரெட்.
டோம்க்ஸ் அவுட்!
ஹார்பிக் இந்நேரம் கண்ணை திறந்திருப்பாள். கால்மாட்டில் காட்டுக் கத்தல் கத்துவது யார் என்று கடைக்கண்ணால் கண்டிருப்பாள். மூன்று புது நறுமனங்களில் புதிய ஹார்பிக்கை அறிமுகப்படுத்தப்போகிறாள். சுத்தம் என்கிற பெட்டியை டிக் செய்தவள் அடுத்து வாசனை என்கிற பெட்டியையும் டிக் செய்வாள். அப்புறம் என்ன, கேம் செட் அண்ட் மாட்ச் ஹார்பிக்!
உங்களில் சிலர் நினைக்கலாம். டோமெக்ஸ் வேண்டுமானால் சின்ன ப்ராண்டாய் இருக்கலாம். ஆனால் அதன் ஓனர் ஹிந்துஸ்தான் லீவர். அதன் ஆண்டு விற்பனை சுமார் நாற்பத்தி ஆறாயிரம் கோடி. அதன் நிழல் சைஸ் கூட இல்லாத கம்பெனி ஹார்பிக்கின் ஓனரான ’ரெக்கிட்’. கம்பெனி டு கம்பெனி சண்டையில் லீவர் ரெக்கிட்டை போட்டுத் தள்ளாதா என்று தோன்றும். ஒன்று புரிந்துகொள்ளுங்கள். மார்க்கெட்டிங் சண்டை நடப்பது மார்க்கெட்டில் அல்ல, வாடிக்கையாளர் மனதில். சண்டை லீவருக்கும் ரெக்கிட்டுக்கும் அல்ல. ஹார்பிக்கிற்கும் டோமெக்ஸுக்கும். வாடிக்கையாளர் மனதில் ஹார்பிக் மகாராணி. டோமெக்ஸ் சின்ன ஆணி. பெருக்கித் தள்ள முடியும் அவளால். அதுவும் படு ஈசியாக!
ப்ரைமரி க்ளாஸ் மாணவன் ஆர்வ மிகுதியில் பிச்.டி படிப்பவனை சண்டைக்கு இழுத்திருக்கிறான். அவன் பாடம் பெறுவான். அதிலிருந்து நாம் படிப்பினை பெறுவோம்!