நம் சின்ன வயதை கலகலப்பாக்கிய விஷயங்களில் ஒன்று ஸ்கூலில் யாருடனாவது நாம் இறங்கிய கைகலப்புகள். யாரையாவது வம்பிழுத்து பாக்சிங்கில் ஆரம்பித்து மல்யுத்த லெவலுக்கு உருண்டு கலிங்கரத்துபரணி பாடும் ரேஞ்சிற்கு சண்டை போட்டோம். சண்டைக்கு காரணம் இருந்ததோ இல்லையோ நம்மை விட சிறியவர்களோடு மட்டும் சண்டை போட்டோம். படிப்பு ஏறவில்லை என்றாலும் அந்த வயதில் ஒன்று தெளிவாய் புரிந்தது. நம்மை விட பெரியவனோடு சண்டையிட்டால் கதை கந்தலாகி நம் கபாலம் முதல் கால் கட்டை விரல் வரை பின்னி பெடலெடுத்து பெண்டை நிமிர்த்துவான் என்று. அதனால் ஒத்த சைஸ் பையனோடு சத்தம் போட்டு சண்டை போட்டோம்.

பள்ளியில் படிக்கும் போது இருக்கும் இந்த அறிவு பெரியவனாகி எம்பிஎ படித்து மார்க்கெட்டிங்கில் சேர்ந்த பிறகு சிலருக்கு மொத்தமாய் மறந்து போகிறது. தன்னை விட பத்து மடங்கு பெரிய ப்ராண்டோடு சண்டையிட்டு மார்க்கெட்டில் நேருக்கு நேர் மோதி முன்பக்கம் நையப்புடைக்கப்பட்டு அடி தாங்காமல் புறமுகுது காட்டி ஓடும் போது பேக்சைட் முழுவதும் பந்தாடப்பட்டு பாதாதிகேசமும் பஞ்சர் ஆகிறார்கள். 

அப்படி ஒரு சண்டையை தேவையில்லாமல் துவங்கியிருக்கிறது ‘இந்துஸ்தான் லீவர்’ கம்பெனியின் ‘டோமெக்ஸ்’. அது வலிய சென்று வம்புக்கு இழுத்திருப்பது ‘ரெக்கிட்’ கம்பெனியின் ‘ஹார்பிக்’கை. பாரத பாத்ரூம்களின் பாஸ் ஹார்பிக். எழுபது சதவீத மார்க்கெட் ஷேர் உள்ள ப்ராண்ட். டோமெக்ஸ் மார்கெட் ஷேர் ஏழு சதவீதம் மட்டுமே. தன்னை விட பத்து மடங்கு பலமான ஹார்பிக்கை வம்புக்கிழுத்திருக்கிறது. சும்மா சொல்லக்கூடாது. கேட்டு வாங்கி தூக்கு மாட்டிக்கொள்ள தயாராகியிருக்கிறது.

என்ன தப்பு? டொமெக்ஸ் வளரக்கூடாதா? சின்னதாகவே தான் இருக்கவேண்டுமா? பெரிய ப்ராண்டோடு போட்டி போடக்கூடாதா?

வளர வேண்டும் தான். ஆனால் யாரோடு மோதி எப்படி வளர்வது என்ற வரைமுறை . வியாபாரத்தை விடுங்கள், வாழ்க்கையில் கூட நம்மை விட சிறிய சைஸ் பகையோடல்லவா சண்டையிடவேண்டும். இப்படியா ஒரு பகாசுரனோடு மோதுவது. அதுவும் நேருக்கு நேராகவா. ப்ராப்ளம் வந்தால் புறமுதுகு காட்டி கூட ஓட முடியாதே.

டீவியில் பேப்பரில் பார்த்திருப்பீர்கள் டோமெக்ஸ் புதிய விளம்பரத்தை. ஹார்பிக்கை காட்டி இது பாத்ரூமை சுத்தம் மட்டுமே செய்யும், நாற்றத்தை போக்காது. டோமெக்ஸ் நாற்றத்தை போக்கி நறுமணம் தரும் என்பது போல் நேருக்கு நேர் காட்டும்படியான கம்பாரடிவ் அட்வர்டைசிங் ரக விளம்பரம். ஹிந்தி மொழியில் ஒரு நடிகையும் தமிழில் நடிகை ரேவதியும் டோமெக்ஸ் பற்றி பேசுவதாய் சித்தரித்திருக்கிறார்கள்.

இந்துஸ்தான் லீவரிடம் கோடி கோடியாய் பணம் இருக்கிறது. டீவியை போட்டாலே இந்த விளம்பரம் வரும்படி இழைக்கப்போகிறார்கள். போதாக் குறைக்கு நடிகையை வைத்து விளம்பரம் செய்திருப்பதால் மக்கள் கவனத்தை ஈர்க்கும். அப்புறம் என்ன டோமெக்ஸ் காட்டில் மழை தான் என்று நீங்கள் நினைக்கலாம். பிரச்சனை இவை அல்ல. அவர்கள் பிரச்சனை ஹார்பிக். டோமெக்ஸ் அடிக்க கையை ஓங்கியிருப்பது லேசுபட்டவள் அல்ல. ஸ்வர்னாக்கா!

இந்த டோமெக்ஸ் ஹார்பிக் மேட்டர் முடிவு எப்படி இருக்கும் என்பதை மார்க்கெட்டிங் தர்ட் அம்பயரிடம் கேட்டுப் பார்ப்போம்.

சண்டை போட முதலில் தரையில் பேலன்ஸ் செய்து நிற்கும் திறமை வேண்டும். எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று விற்க வழி தேடி நிற்கிறது டோமெக்ஸ். அதே பாத்ரூம் பிரிவில் அரியனையில் கால் மேல் காட்டு போட்டு கோலோச்சுகிறது ஹார்பிக். பாத்ரூம் க்ளீனர் என்றாலே பெரும்பாலானவர் மனதில் தோன்றும் ப்ராண்ட். பல லட்சம் தாய்மார்களின் நம்பிக்கை பெற்ற ப்ராண்டும் கூட. நிற்க வழியில்லாமல் சண்டை போட வந்திருக்கும் டோமெக்ஸை உட்கார்ந்த வாக்கிலேயே ஊதி தள்ளாதா ஹார்பிக். சூப்பர்ஸ்டார் சொன்னது போல எழுந்து நிக்கவே வக்கில்லாதவன் ஒன்பது பொண்டாட்டி கேட்பது கொஞ்சம் ஓவர் இல்லையா. ஆக, பால் பிட்சிட் இன் லைன். முதல் ரெட்!

போர் கலையை கற்றுத் தருபவர்கள் கூறும் முக்கிய பாடம் எண்ண்ணிக்கையில் அதிகமிருக்கும் பகையுடன் நேருக்கு நேர் மோதாதே என்பதை. கணிதத்தில் நான் சற்று வீக் என்றாலும் ஏழை விட எழுபது ரொம்பவே பெரியது என்று தோன்றுகிறது. ஏழு பேர் மட்டுமே கொண்ட படை எழுபது பேர் கொண்ட பகையுடன் மோதினால் என்ன ஆகும். வேறென்ன, தர்பனம் தான். டோமெக்ஸ் தன்னை போல் எங்க வீட்டுகாரரும் பாத்ரூம் க்ளீன் பண்றார் என்பது போன்ற சின்ன ப்ராண்டுகளோடு சண்டை போட்டாலாவது ஏதாவது தேறியிருக்கும். எழுபது யானைகள் புடை சூழ வரும் சாம்ராட்டிடம் சண்டையிடுவது டோமெக்ஸுக்கே சற்று ஓவராக தெரியவில்லையா. ஆக, இம்பாக்ட் இன் லைன். இரண்டாவது ரெட்!

பாத்ரூம் முதலில் சுத்தமாய் இருக்கவேண்டும். அதோடு சற்று வாசனையாக இருந்தால் பெட்டர். இப்பொருள் பிரிவின் ஆதார உண்மை இதுவே. பாத்ரூமின் மூலை முடுக்கெல்லாம் கூட சுத்தம் செய்யும் வகையில் அழகான வடிவமைப்போடு சுத்தம் என்று சத்தமாய் பல காலம் அலறி வருகிறது ஹார்பிக். அந்த மழையில் நேற்று முளைத்த காளான் நான் பாத்ரூமை வாசனையோடு வைக்கிறேன் என்று சத்தம் போட்டால் சுத்தம் என்கிற சத்தமே அங்கில்லையே. சுத்தப்படுத்துகிறேன் அதோடு கொஞ்சம் வாசனையாகவும் வைக்கிறேன் என்றல்லவா டோமெக்ஸ் சொல்லயிருக்க வேண்டும். டோமெக்ஸ் சுத்தம் செய்யும் என்பதையே மக்கள் இதுவரை பெரியதாக நம்பவில்லையே. அப்படி நம்பியிருந்தால் வெறும் ஏழு சதவித மார்கெட் ஷேருடன் மேலே வளரும் வழி தேடி தவித்துக்கொண்டிருக்காதே. சுத்தம் என்கிற சினிமா டிக்கேட் வாங்காமல் வாசனை என்கிற வண்டியை நிறுத்த பார்க்கிங் டிக்கெட் வாங்கிவிட்டு என்னையும் பாத்ரூம் ஆட்டத்தில் சேர்த்துக்கொள் என்றால் திருமதி வாடிக்கையாளர் டோமெக்ஸை ஏன் பார்க்கப்போகிறார். அல்லது வாங்கத் தான் போகிறார். ஆக, பால் இஸ் ஹிட்டிங் ஸ்டம்ப்ஸ். மூன்றாவது ரெட்.

டோம்க்ஸ் அவுட்!

ஹார்பிக் இந்நேரம் கண்ணை திறந்திருப்பாள். கால்மாட்டில் காட்டுக் கத்தல் கத்துவது யார் என்று கடைக்கண்ணால் கண்டிருப்பாள். மூன்று புது நறுமனங்களில் புதிய ஹார்பிக்கை அறிமுகப்படுத்தப்போகிறாள். சுத்தம் என்கிற பெட்டியை டிக் செய்தவள் அடுத்து வாசனை என்கிற பெட்டியையும் டிக் செய்வாள். அப்புறம் என்ன, கேம் செட் அண்ட் மாட்ச் ஹார்பிக்!

உங்களில் சிலர் நினைக்கலாம். டோமெக்ஸ் வேண்டுமானால் சின்ன ப்ராண்டாய் இருக்கலாம். ஆனால் அதன் ஓனர் ஹிந்துஸ்தான் லீவர். அதன் ஆண்டு விற்பனை சுமார் நாற்பத்தி ஆறாயிரம் கோடி. அதன் நிழல் சைஸ் கூட இல்லாத கம்பெனி ஹார்பிக்கின் ஓனரான ’ரெக்கிட்’. கம்பெனி டு கம்பெனி சண்டையில் லீவர் ரெக்கிட்டை போட்டுத் தள்ளாதா என்று தோன்றும். ஒன்று புரிந்துகொள்ளுங்கள். மார்க்கெட்டிங் சண்டை நடப்பது மார்க்கெட்டில் அல்ல, வாடிக்கையாளர் மனதில். சண்டை லீவருக்கும் ரெக்கிட்டுக்கும் அல்ல. ஹார்பிக்கிற்கும் டோமெக்ஸுக்கும். வாடிக்கையாளர் மனதில் ஹார்பிக் மகாராணி. டோமெக்ஸ் சின்ன ஆணி. பெருக்கித் தள்ள முடியும் அவளால். அதுவும் படு ஈசியாக!

ப்ரைமரி க்ளாஸ் மாணவன் ஆர்வ மிகுதியில் பிச்.டி படிப்பவனை சண்டைக்கு இழுத்திருக்கிறான். அவன் பாடம் பெறுவான். அதிலிருந்து நாம் படிப்பினை பெறுவோம்!

அண்டை மண்ணில் வெற்றிக் கொடி நாட்டி வந்திருக்கிறோம். அடிபட்டு மிதிபட்டு ரத்தம் சிந்தியும் புறமுதுகு காட்டாது பகையோடு போரிட்டு எதிரியை பின்னங்கால் பிடறி பட ஓட விரட்டியிருக்கிறோம். சின்ன கோலியாத்கள் பெரிய டேவிட்டை நையப் புடைத்து திரும்பியிருக்கிறார்கள். அதிகம் அனுபவமில்லாத இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவை வென்ற கதை உபன்யாசமாய் ஒலிக்கிறது. கங்காருகொண்டான் என்ற பட்டம் கொடுத்து ஆஸ்திரேலியபரணி பாடாதது ஒன்று தான் குறை.

புகழ் பாடுவது நியாயமே. உடம்பில் பட்டுக்கொண்டது சாதாரண அடியில்லை. அதை மீறி களத்தில் பெற்றது சாதாரண வெற்றியுமில்லை. முப்பதாறு ரன்களில் சுருண்டு, கைகால் எல்லாம் கழண்டு, இனவெறி பேச்சால் வெகுண்டு பெற்ற வெற்றி நம் பேரக்குழந்தைகள் காலம் வரை பேசப்படவேண்டியதே. இந்தியனாய் நமக்கெல்லாம் பெருமை. தமிழ் வீரர்கள் சேர்ந்து பெற்ற வெற்றியால் தமிழனாயும் பெருமிதம்!

’அனைவருக்கும் ஒரு பாடு பாடிவிட்டார்கள். நீயும் வந்துவிட்டாயா கிரிக்கெட் வெற்றி புராணம் பாட’ என்று புலம்பாதீர்கள். முதல் இரண்டு பத்தி நானும் இந்திய கிரிக்கெட் ரசிகன், அதன் வெற்றியில் மனமுருகுபவன் என்று காட்டவே. பெற்ற வெற்றிக்கு பின் படிக்கவேண்டிய பாடங்களும் தட்டி எழுப்ப வேண்டிய தவறுகளும் கற்றுக்கொள்ள வேண்டிய கஷ்டங்களும் இருக்க அதை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களே என்ற விசாரம் எனக்கு. என் கவலையை கடை பரப்பவே இந்த கட்டுரை.

கோச் ரவி சாஸ்திரி நீங்கலாக சென்றவரெல்லாம் ஆடும் அளவிற்கு ஆளாளுக்கு  அடி. ஆஸ்பத்திரிக்கு அன்றாடம் ஷேத்திராடனம். இந்திய ஃபிசியோக்கு ஆடுகளத்திலேயே ஆதார் கார்ட் தரும் அளவிற்கு அங்கேயே ஜாகை. இடுப்பு சுளுக்கு முதல் எலும்பு முறிவு வரை ஒன்று பாக்கியில்லை. மொத்த டீமும் செத்து பிழைத்திருக்கிறது. வீரத்தோடு ஆடியது பிரமாதம் தான். ஆனால் இத்தனை காலம் கிரிக்கெட் ஆடியும் பேஸ், ஸ்விங், பவுன்ஸ் என்றால் நம்மவர்கள் பாதாதிகேசமும் பட்டுக்கொள்ளாமல் ஆட இன்னும் பழகவில்லை என்பது மீண்டும் புரிகிறது. வெளிநாடு சென்று திரும்பும்போதெல்லாம் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ளும் திறன் வளர்க்கும் வகையில் இந்திய பிட்சுகளை மாற்றவேண்டும் என்று பேசி அடுத்த வெற்றியில் அதை மறக்க பழகிவிட்டோம். ‘மறதி நமது தேசிய வியாதி’ என்று ‘சுஜாதா’ சொன்னது சரியே. ’பார்டர்-கவாஸ்கர் கோப்பை’ உள்ளிருக்கும் வியாதியை மறைத்துவிட்டது.

எனக்குத் தெரிந்து ஒலிம்பிக்ஸில் பங்கேற்க கட்சி மாநாடு போல் இந்தியாவிலிருந்து கூட்டம் செல்லும். அதற்கடுத்த பெரிய கூட்டம் இம்முறை ஆஸ்திரேலியா சென்றது. சகட்டு மேனிக்கு அனைவரும் ஆடும் அளவிற்கு வாய்ப்பு கிடைத்தது. குழந்தை பிறப்பு, கை முறிவு என்று சிலர் தாயகம் திரும்பியது கூட ஓகே. பாதி ஓவரில் கால் இழுத்து, கை சுளுக்கிக்கொள்வதை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது? ஃபிசியோ, உதவியாளர் என்று இத்தனை பேர் இருந்தும் ஏன் நம்மவர்களுக்கு நடந்தால் இழுத்து, அமர்ந்தால் சுளுக்கு பிடிக்கிறது? ஐபிஎல் ஆடி ஆடி நாற்பது ஓவர்களுக்கு மேல் ஆடினால் நாக்கில் நுறை தப்புகிறதா. இதை பற்றி யாரும் பேசுவதில்லை. பெற்ற வெற்றி இந்த பிரச்சனையை பெட்டியில் போட்டு மூடிவிட்டது.

‘இந்திய அணிக்கு கோவிட் டெஸ்ட்டே தேவையில்லை. பேட்டிலிருந்து வரும் எதையும் அவர்கள் பிடிக்கமாட்டார்கள்’ என்றது ஒரு வாட்ஸ் அப் மீம்ஸ். பேட் என்றால் மட்டை மட்டுமல்ல வௌவாலும் என்ற அர்த்தத்தில் வந்த ஜோக். அது உண்மை என்பது போல் வந்த காட்சுகளை சோஷியல் டிஸ்டன்சிங் செய்து நம்மவர்கள் தாரை வார்த்தார்கள். வெண்ணெய் தின்ற கிருஷ்ணர்கள் கையிலும் தடவிக்கொண்டு வந்த காட்சுகளை வாங்கி வாங்கி விட்டார்கள். இந்த லட்சணத்தில் இந்த டீமுக்கு ஒரு ஃபீல்டிங் கோச் வேறு. இதைப் பற்றி இப்பொழுது பேசுகிறோமா? மூச். விட்ட காட்சுகளைப் போல் முக்கியமான இந்த விஷயத்தையும் கையில் வாங்காமல் கோட்டை விட்டோம்.

ரிஷப் பண்ட் பேட்டிங்கில் பின்னி பெடலெடுத்தார். இளங்கன்று பயமறியாத ஆட்டம். ஸ்டம்புக்கு முன்னால் நின்றால் கலகலக்கும் அவர் ஸ்டம்புக்கு பின்னால் நின்றால் டொடலொடக்கிறார். விக்கெட் கீப்பிங் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கிறார். அத்தனை பெரிய கீப்பிங் க்ளவுஸ் இருந்தும் ’வந்தது எல்லாம் தங்கிவிட்டால் இந்த க்ளவுசில் பந்துக்கு இடமேது’ என்று பேதாஸ் சாங் பாடும் ரேஞ்சிற்கு இருக்கிறது அவர் கீப்பிங். பாட்ஸ்மென் தானே பரிதாபப்பட்டு தன் காட்சை தானே பிடித்து அவுட் ஆனால் தான் உண்டு. பாதி பேட்டிங் பாதி கீப்பிங் என்பதெல்லம் பத்தாது, ஒன்று நல்ல பாட்ஸ்மெனாய் ஆடட்டும், வேறு கீப்பராய் தேடுவோம் என்று யாரும் பேசுவதில்லை. டவுன் அண்டரில் பெற்ற வெற்றி இல்லையா இந்த முக்கிய மேட்டரும் டவுன் அண்டரில் புதைக்கப்பட்டுவிட்டது.

விக்கெட் கீப்பரின் இன்னொரு பணி அம்பயர் அவுட் தராதபோது தர்ட் அம்பயரிடம் DRS கேட்பது. ரிஷப் பண்ட் அப்படி கேட்டால் இந்திய வீரர்கள் களத்திலேயே அவரைப் பார்த்து சிரிக்கிறார்கள். மாட்சை பார்க்கிறாரா என்றே சந்தேகம் வரும் அளவிற்கு இருக்கிறது அவர் DRS கேட்கும் அழகு. சரி, அனுபவ குறைச்சல் என்று விடலாம். அட ஒரு பேச்சுக்காவது குறை பற்றி அவரிடம் கூறவேண்டாமா. அதான் வென்றாகிவிட்டதே அடுத்த தோல்வியில் பார்த்துக்கொள்வோம் என்று இதையும் மறந்துவிட்டோம்.

சரி, கூற வந்த விஷயத்திற்கு வருகிறேன். ’கிழிந்தது போ, நீ இன்னும் விஷயத்திற்கே வரலையா’ என்று நீங்கள் கேட்பதை நம் ஃபீல்டர்கள் போல் ட்ராப் செய்கிறேன். வெற்றியில் குறை காண்கிறாய், ரோஜாவை விட்டு அதிலுள்ள முள்ளை பார்க்கிறாய் என்று நினைக்காதீர்கள். ‘காபா’ க்ரவுண்டில் மொத்த இந்திய டீமும் மூவர்ண கொடியை பிடித்தபடி நடந்த போதும், நம்மூர் நடராஜன் வெற்றிக்கோப்பை பிடித்தபடி நின்ற போதும் உங்களை போல எனக்கும் வகுடு எடுத்து வாரும் அளவிற்கு மயிர்கூச்செறித்தது. ஆனால் பெற்ற வெற்றி கற்கவேண்டிய பாடங்களை மறைக்கும் போது, மொத்தமாய் அதை நாம் மறக்கும்போது தான் சின்ன பிரச்சனைகள் வேக்சீன் இல்லாமல் வளர்கிறது. ’சண்டையில் தோற்றாலும் போரில் வெல்’ என்று ஒரு வாசகம் உண்டு. சண்டையில் வென்று போரில் தோற்கக் கூடாதே என்பது தான் என் கவலை.

கிரிக்கெட் ஆகட்டும், பிசினஸ் ஆகட்டும். சின்ன வெற்றிகளை கொண்டாடும் அதே நேரம் அதில் மறைந்திருக்கும் பெரிய பாடங்களை நாம் படிக்கத் தவறுகிறோம். வெற்றி மயக்கம் நம் கண்களை மறைக்கிறது. ஏனெனில் சின்ன வெற்றிகள் தான் பெரிய தோல்விக்கான விதைகளை வளர்க்கும் உரம். ‘நோக்கியா’ என்ற கம்பெனி ஞாபகம் இருக்கிறதா. சதா சர்வ காலமும் நம் பாக்கேட்டில் படுத்து இதயத்தோடு இழைந்த கம்பெனி. உலகில் நான்கில் மூவர் நோக்கியா ஃபோன் வைத்திருந்த காலம் உண்டு. அதன் வெற்றி மட்டுமே தலைப்பு செய்தியாயிற்று. அதன் குறைகளும் குற்றங்களும் குறுஞ்செய்தியாகக் கூட யார் கண்ணிலும் படவில்லை. அத்தனையும் ஒரு நாள் பிரவாகமாய் பெருக்கெடுத்து எரிமலையாய் வெடித்து சிதறி மொத்த கம்பெனியையும் புதைத்தது. அந்த அழிவு அரங்கேற அதிக காலம் எடுக்கவில்லை என்பதை உணர்ந்தீர்களா. நோக்கியா இன்று எங்கு நோக்கியும் ’நோ’ கியா!

ஒரு ஊரில் ’பிக் பஜார்’ என்ற கடை இருந்ததாம். ஊரெல்லாம் பிறந்து தெருவெலாம் வளர்ந்ததாம். பெரிய சைஸாம். ஊரே போற்றியதாம். அதனால் தானோ என்னவோ அதன் சிறிய ப்ராப்ளம்ஸ் யார் கண்ணிலும் படாமலே போனதாம். குறைந்த விலையில் பொருள் விற்ற கம்பெனியையே இன்று குறைந்த விலையில் மற்றவர் வாங்க லைன் கட்டுகிறார்களாம். தேவையா இந்த தலையெழுத்து!

‘காஃபி டே’, ‘ஜெட் ஏர்வேஸ்‘, ‘சுபிக்‌ஷா’ என்று கம்பெனிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அவை அனைத்தும் ஒரு காலத்தில் வெற்றி கதைகள். அதன் வெற்றிகளை மட்டுமே பார்க்கத் தெரிந்த அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அவைகளுக்குள் இருந்த பிரச்சனைகளை பார்க்க தவறினார்கள். தோற்ற பின் காரணம் தேடினார்கள்.

வெற்றி தரும் போதை இதைத் தான் செவ்வனே செய்கிறது. தோல்விக்கான விதைகள் விஷங்களாய் விதைந்திருப்பதை மறைக்கிறது. மறுக்கிறது. அந்த அரளி சைஸ் விதை தான் ஆலகால விஷமாய் வளர்ந்து கம்பெனியை கபளீகரம் செய்கிறது. எந்த ஃபிசியோ வந்தாலும் காப்பாற்ற முடியாமல் செய்கிறது. சின்னி கல்லு, பெத்த லாஸ்!

வெளி வெற்றிகள் கொண்டாடப்படவேண்டும். அதே நேரம் உள்ளிருக்கும் குறைகள் தேடப்படவேண்டும். தோல்விக்கு பின் போஸ்ட் மார்ட்டம் செய்கிறோம். காரணம் என்ன என்று கண்டுகொள்ள. வெற்றிக்கும் அதை செய்வது அவசியம். இந்திய கிரிக்கெட் அணி முதல் இந்திய தொழிலதிபர்கள் வரை விதிவிலக்கில்லாத விதி இது!

மை டியர் இந்தியன் டீம், நீங்கள் பெற்றது சாமனிய வெற்றியல்ல. என்ஜாய். ஓபன் தி பாட்டில். போதை தெளிந்து ஹாங்ஓவர் போன பின் உங்களிடம் சற்று பேச வேண்டும்!

போர் அடிக்கிறது. ஒரு இருபது வருடங்கள் பின்னோக்கி சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று இருக்கிறேன். சும்மா இருந்தால் வாங்களேன்.

ரைட், 1994க்கு வந்திருக்கிறோம். ரோட்டில் 2014 அளவு கூட்டம், கார்கள், இரைச்சல், ட்ராஃபிக் இல்லை. எஸ்யூவீ கார்கள், லேப்டாப், இன்டர்னெட், செல்ஃபோன், காஃபி ஷாப், மல்டிப்ளெக்ஸ், டிடீஹெச், டியோடர்ண்ட், ஹைடெஃப்பனிஷன் டீவி, எதுவும் இல்லை. இத்தனை ஏன், ‘தி இந்து’ கூட தமிழில் இல்லை!

இவை இல்லாத வாழ்க்கை ’ஜோரா இல்லை போரா’ என்கிற விவாதத்தை பட்டிமன்ற டாபிக்காய் பாப்பையாவிடம் விட்டுவிடுவோம். நான் சொல்ல வந்தது வேறு. அன்றில்லாத புதிய பொருள் வகைகள், தொழில்கள், ப்ராண்டுகள் பிறந்திருக்கின்றன. வெற்றி பெற்றிருக்கின்றன. தொழில் வளர்ச்சி பெற, வெற்றி அடைய புதிய ஐடியாக்கள், பொருள் வகைகள் அதில் புதிய ப்ராண்டுகள் தேவை என்கிறார்கள் ‘சேன் கிம் மற்றும் ரென்னி மொவ்பர்ன்’ என்னும் நிர்வாகவியல் பேராசிரியர்கள். இவர்கள் இருவரும் கடந்த 100 வருட டேட்டாவை கொண்டு 30 பொருள் வகைககளையும் புதியதாய் பிறந்த 150 தொழில்களையும் ஆராய்ந்தனர். தங்கள் ஆராய்ச்சி முடிவுகளையும் படிப்பினைகளையும் ‘ப்ளூ ஓஷன் ஸ்ட்ரேடஜி’ (Blue Ocean Strategy) என்கிற புத்தகமாக வெளியிட்டனர்.

பிசினஸ் உலகத்தையும் அதிலுள்ள பொருள் வகைகளையும் ’சிவப்பு கடல்’, ‘நீலக் கடல்’ என்று இரண்டாகப் பிரிக்கலாம் என்கிறார்கள். சிவப்பு கடல் என்பது வெகுகாலமாக இருக்கும் பொருள் வகைகள். இதில் தான் காலகாலமாக ப்ராண்டுகள் ஒன்றை ஒன்று அடித்து, கடித்து வளர முயற்சிக்கின்றன. அந்த சண்டை பத்தாது என்று அதில் புதிய ப்ராண்டுகளும் சேர்ந்து போட்டி உக்கரமடைந்து வெட்டுக்குத்து, வீச்சரிவாள் வரை போய் ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் இந்த பொருள் வகைகளை சிவப்புக் கடல் என்றழைக்கலாம் என்கிறார்கள்.

நீலக் கடல் என்பது இதுவரை இல்லாத பொருள் வகைகள். இனிமேல் பிறக்க வேண்டிய ஐடியாக்கள். இங்கு போட்டியில்லை. சண்டையில்லை. ரத்த ஆறு ஓடுவதில்லை. அழகான, அமைதியான நீலக் கடல்கள் இவை. இது போன்ற புதிய பொருள் வகையை உருவாக்கி அதில் ப்ராண்டை அறிமுகப்படுத்தும் கம்பெனிகள் வெற்றி பெறுகின்றன. போட்டியில்லாத இந்த நீலக் கடல் அந்த ப்ராண்டிற்கே சொந்தமாகிவிடுகிறது என்கிறார்கள்.

சோப், டியட்யோடரண்ட், சமையல் எண்ணெய், ஜவுளிக்கடைகள், பல்புகள், கார்கள், பைக்குகள், மினரல் வாட்டர் என்று பல பொருள் வகைகள் சிவப்புக் கடல்களே. இந்த பொருள் வகைகளில் நுழைவது சிரமம். மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுவது அதை விட சிரமம். அதோடு ஏகப்பட்ட விற்பனை செலவுகள், விளம்பர செலவுகள். பத்தாதற்கு போட்டியாளர்களின் ‘இலவசம்’, ‘ஆடித் தள்ளுபடி’, ‘ஆஃப்பர்’ போன்ற கழுத்தறுப்பு வேறு. நித்ய கண்டம், பூரண ஆயுசுக்கு உத்திரவாதமில்லாத சிவப்பு கடலில் சிக்கி, செருப்படி பட்டு, சந்தி சிரித்து, சீரழியாமல் இருப்பதற்க்குள் போதும் போதும் என்றாகிவிடும். இதில் எங்கிருந்து வளர்வது? எப்படி முன்னேறுவது?

புதிய தொழில் துவங்க எதற்கு சிவப்பு கடலுக்குள் நுழையவேண்டும்? கேட்டு வாங்கி எதற்கு தூக்கு மாட்டிக்கொள்ள வேண்டும்? சிவப்பு கடல்களில் குதித்து, குளித்து, கரையேற முடியுமா? இந்த பொருள் வகையிலுள்ள மற்ற ப்ராண்டுகள் கடித்துக் குதறி, கும்மி அடித்து, குமுறி விடாதா?

சரி, நீலக் கடலை எங்கு தேடுவது? அது ஒன்றும் ஐந்து கண்டங்களைத் தாண்டி, ஆறாவது மலைக்கு அப்பால், ஏழாவது குகைக்குள் இருக்கும் மேட்டர் இல்லை. அது உங்கள் அருகிலேயே இருக்கிறது. நீங்கள் போட்டி போடும் பொருள் வகையிலேயே ஒளிந்திருக்கிறது. அதை கண்டுகொள்ளும் திறமை உங்களுக்கு இருந்தால் போதும்.

ஷாம்பு மார்க்கெட் ஒரு சிவப்பு கடல். அதில் ஏகத்துக்கு போட்டி. ஆனால் அதனுள் போட்டியில்லாத ‘பொடுகு ஷாம்பு’ என்னும் நீலக் கடல் இருப்பதை கவனித்து அதில் ‘ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ்’ என்னும் ப்ராண்டை அறிமுகப்படுத்தி  அதில் நம்பர் ஒன்னாய் திகழும் ‘பிஅண்டுஜி’ செய்த சாமர்த்தியம் உங்களுக்கு வேண்டும்.

சோப்பு மார்க்கெட் ஒரு சிவப்புக் கடல். அதில் ப்ராண்டுகள் போட்டியில் சிக்கித் தவிக்க அதில் போட்டியில்லாத ’ஹெர்பல் சோப்’ என்னும் நீலக் கடலை கவனித்து அதில் ‘ஹமாம்’மை அறிமுகப்படுத்தி அமர்களப்படுத்தி வரும் ‘இந்துஸ்தான் யூனிலீவரின்’ சாதுர்யம் உங்களுக்கு வேண்டும்.

சில கம்பெனிகள் மட்டுமே இது போல் மாற்றி யோசித்து நீலக் கடல்கள இனங்கண்டு புதிய பொருள் வகைகளை உருவாக்கி அதில் ப்ராண்டுகளை அறிமுகப்படுத்தி வெற்றி பெறுகின்றன என்கிறார்கள் சேன்னும் ரென்னியும். அப்படி மாற்றி யோசித்து வடிவமைக்கும் உத்தியை ‘ப்ளூ ஓஷன் ஸ்ட்ரேடஜி’ என்கிறார்கள். விற்பனையை அதிகரித்து லாபத்தை கூட்ட சிறந்த வழி போட்டி நிறைந்த சிவப்புக் கடலை விடுத்து போட்டி இல்லாத நீலக் கடலை கண்டுபிடிப்பது தான் என்கிறார்கள்.

சிவப்புக் கடலில் பத்தோடு பதினொன்றாக பரிதவிக்கவேண்டும். நீலக் கடலில் போட்டியில்லாமல் பட்டா போடமுடியும். சிவப்புக் கடலில் போட்டியாளர்களோடு சதா போரிடவேண்டும். நீலக் கடலில் போட்டியாளரே இல்லாததால் போரிடாமலே வெல்ல முடியும். சிவப்புக் கடலில்  டிமாண்டைக் கூட்ட மெனக்கெட வேண்டும். நீலக் கடலில் புதிய டிமாண்டை உருவாக்கினால் போதும்.

அதற்காக நீலக் கடலின் வெற்றி நிரந்தரம் என்று நினைக்காதீர்கள். நீலக் கடலின் அழகில் மயங்கி பலர் நுழைய முயல்வார்கள். முதலில் நுழைந்த ப்ராண்டுகள் தங்களை மேம்படுத்திக் கொண்டே இருந்து நீலக் கடலை முழுவதுமாய் ஆக்கிரமித்து அடுத்தவனை அண்டவிடாமல் செய்வது அதிமுக்கியம்.

புதிய தொழிற்நுட்பம் இருந்தால் நீலக் கடல்களை உருவாக்குவது எளிதாகும். போட்டி பிடியில் சிக்கி இருந்த செல்ஃபோன் என்னும் சிவப்புக் கடலை ஒரங்கட்டி டச் ஸ்க்ரீன் என்னும் புதிய தொழிற்நுட்பத்தால் வெற்றி பெற்றது ‘ஐஃபோன்’.

புதிய தொழிற்நுட்பம் இல்லாமலும் நீலக் கடலை கண்டுபிடிக்க முடியும். டூத்பேஸ்ட் மார்க்கெட்டில் பல ப்ராண்டுகள் பல் இளித்துக்கொண்டிருக்க அதில் ஜெல் என்னும் பொருள் வகையை உருவாக்கி அந்த நீலக் கடலில் ’க்ளோஸ் அப்’ வெற்றி பெற்றது.

பல சமயங்களில் நீலக் கடல்கள் சிவப்புக் கடல் அருகிலோ, அதற்குள்ளேயே கூட அமைந்துவிடும். சிவப்பழகு க்ரீம் மார்க்கெட் பல ப்ராண்டுகள் போட்டிப் போடும் சிவப்புக் கடல். எல்லா ப்ராண்டுகளும் பெண்களை மட்டுமே குறிவைக்கிறதே என்று மாற்றி யோசித்து ’ஃபேர் அண்டு ஹேண்ட்சம்’ என்று ஆண்களுக்கான சிவப்பழகு க்ரிமை அறிமுகப்படுத்தி சிவப்புக் கடல் உள்ளேயே ஒரு நீலக் கடலை உருவாக்கி வெற்றி பெற்றது ‘இமாமி’.

இரண்டு சிவப்புக் கடல்களை கலந்து நீலக் கடலை உருவாக்கவும் முடியும். சிலர் தலைக்கு சீயக்காய் உபயோகிப்பதையும் சிலர் ஷாம்பு உபயோகிப்பதையும் பார்த்தது ‘கவின்கேர்’. சீயக்காய் மார்கெட்டிலும் ஷாம்பு மார்க்கெட்டிலும் ஏகப்பட்ட ப்ராண்டுகள். இந்த சிவப்பு கடல்களுக்குள் எதற்கு நுழைவது என்று ’சீயக்காயின் குணநலன்களையும் ஷாம்புவின் சௌகரியத்தையும் கலந்து ’சீயக்காய் ஷாம்பு’ என்னும் புதிய பொருள் வகையை உருவாக்கி அந்த நீலக் கடலில் ’மீரா’ என்கிற ப்ராண்டை அறிமுகப்படுத்தி பெரும் வெற்றிப் பெற்றது.

சிவப்புக் கடலில் சிக்கி சங்கடப்படுவதை விட நீலக் கடலை எப்படி உருவாக்குவது, அதில் புதிய ப்ராண்டுகளை எப்படி அறிமுகப்படுத்துவது என்று சிந்தியுங்கள். நீலக் கடலை உருவாக்கி வெற்றி பெற்றிருக்கும் ‘டிஷ் டீவி’, ’ஸ்கூட்டி’, ‘எகனாமிக் டைம்ஸ்’, ‘சன் டீவி’ போன்ற ப்ராண்டுகளை பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்.

ஹலோ, இன்னமும் 1994லேயே இருந்தால் எப்படி? 2020க்கு வாருங்கள். கேன் அளவு தண்ணீரை விட்டு சேன் சொன்ன நீலக் கடலைத் தேடுங்கள். மென்னி முறிக்கும் மார்க்கெட்டை விட்டு ரென்னி சொன்ன நீலக் கடலை உருவாக்குங்கள். இந்தக் நீலக் கடலில் ஆள் கிடையாது. அரவம் கிடையாது. போட்டி கிடையாது. போர் கிடையாது. அதனால் வளர்ச்சி கிடைக்கும். வெற்றி கிடைக்கும். இங்கு தொடுவானம் கூட தொடும் தூரம் தான். கடல் ஆழம் கூட கால் கட்டை விரல் வரை தான். நீலக் கடல் உங்கள் நீச்சல் குளமாகும். அப்புறம் என்ன, அதில் ஜலக்கிரீடை தான். ஜாலி தான்!

இந்தியாவில் தியேட்டர்கள் இப்பொழுது தான் மெல்ல திறக்க துவங்கியிருந்தாலும் தினமும் ந்யூஸ்பேப்பர்கள் முதல் செய்தி சேனல்கள் வரை, பத்திரிக்கைகள் முதல் சோஷியல் மீடியா வரை சினிமாவை மிஞ்சும் ஆக்‌ஷன், ஃபைட் சீன், அடிதடி, அனல் தெறிக்கும் வசனங்கள் தூள் பறக்கிறது. எல்லாம் சில சினிமாகாரர்களின் போதை மருந்து மேட்டர் தான். இந்தி பட உலகில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாய் உருவான இந்த போதை பொருள் சூறாவளி தென் மேற்கு திசையில் நகர்ந்து கன்னட திரையுலகில் கரையேறி கலக்க துவங்கியிருக்கிறது. இதனால் தமிழக, தெலுங்கு, மலையாள திரையோரங்களில் எச்சரிக்கை எண் ஏழு ஏற்றப்பட்டிருக்கிறது. யார் கண்டது, போதை விவகாரம் இங்கும் விமரிசையாக நடந்திருந்து விரைவிலேயே எச்சரிக்கை எண் ஏற்றும் கொடி கம்பமே காணாமால் போகும் ரேஞ்சிற்கு சுறாவளி, சுனாமி தாக்கினாலும் சொல்வதற்கில்லை. ஏற்கனவே நசநசவென்று வதந்தி மழை பிசுபிசுவென்று பெய்யத் துவங்கியிருக்கிறது. என்ன ஆகப்போகிறதோ. ஈஸ்வரோ ரஷது!

இந்த லட்சணத்தில் இந்தி திரையுலகைச் சேர்ந்த சில பெரும்புள்ளிகள் சில ஆங்கில டீவி செய்தி சேனல்கள் மீது வழக்கு போட்டிருக்கிறார்கள். ஏதோ பத்து பதினைந்து பேர் இழுத்த புகைக்கு மொத்த இந்தி துறைக்கும் நெருப்பு வைக்கலாமா, தகாத வார்த்தைகளில் திட்டலாமா என்று அவர்களுக்கு அசாத்திய கோபம். வாஸ்தவம் தான். பாதி பேர் செய்தாலும் மீதி பேரையும் சேர்த்து சொல்வது தப்புத் தான். இதே சினிமா துறையை சேர்ந்த சிலர் சகட்டு மேனிக்கு போலீஸ்காரர்கள், டாக்டர்கள், வக்கீல்கள், தொழிலதிபர்கள் அனைவரும் அயோக்கியர்கள் என்பது போல் சித்தரித்து படம் எடுக்கும் போது இந்த அறிவு அவர்களுக்கு லவசேசம் எட்டியிருக்கலாம். தனக்கென்று வந்தால் தான் தெரிகிறது வலியும் வேதனையும்.

அவர்கள் போட்ட கேஸ் பூட்டா கேஸ் ஆகுமா என்று எனக்கு தெரியாது, ஆனால் இந்த கூத்தைப் பார்க்கும் போது பழைய பழமொழி ஒன்று நினைவிற்கு வருகிறது: ‘புருஷன் அடிச்சது பரவாயில்லையாம், பக்கத்து வீட்டுக்காரி சிரிச்சது வலிச்சுதாம்’!

சினிமா துறை எப்படியோ போகட்டும். பிரச்சனை அதுவல்ல. அட்லீஸ்ட் இந்த கட்டுரைக்கு. என் கவலை சினிமாகாரர்களின் பிரபலத்துவத்தை மூலதனமாக்கி அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி தங்கள் ப்ராண்டுகளை விளம்பரம் செய்யும் மார்க்கெட்டர்களின் கதியை நினைத்து. அவர்களை பார்த்தால் எனக்கு ஒரு பக்கம் கோபம் வருகிறது, இன்னொரு பக்கம் பாவமாகவும் இருக்கிறது.

விற்கும் பொருளை பிரபலமாக்கவேண்டும் என்று பிசினஸ்மேன் நினைப்பது நியாயமே. அதற்கு வழி பிரபலங்களை கொண்டு விளம்பரம் செய்வது என்று அவர்கள் நினைக்கும் போது தான் வில்லங்கம் வக்கனையாய் வீடேறி வந்து விளக்கேற்றுகிறது. பொருளை பிரபலமாக்கும் ஒரே வழி அதை ப்ராண்டாக்குவது தான் என்று எத்தனை சொன்னாலும் இவர்களுக்கு தெரிவதில்லை. எந்த பொருளின் க்ராண்ட் வெற்றிக்கும் வித்திடுவது அதை ப்ராண்டாய் மாற்றும்போது என்று கரடியாய் கத்தினாலும் கேட்பதில்லை.

ப்ராண்ட் என்றால் என்ன? வாடிக்கையாளர் தேவையை மற்றவைகளை விட பெட்டராய் பூர்த்தி செய்து வாடிக்கையாளர் மனதில் தனித்துவமாய் தெரியும் வித்தை. இதை செய்தால் எதற்கு வாடிக்கையாளரை கெஞ்சிக்கொண்டு. அவரே ப்ராண்ட் இருக்கும் இடம் தேடி வந்து க்யூவில் நின்று வாங்குவாரே. வெற்றிகரமான ப்ராண்டுகள் இதை தான் செய்தன. செய்கின்றன. செய்யவேண்டும்.

மற்றவர்கள் செய்வதையே வித்தியாசம் இல்லாமல் தானும் செய்து தனித்துவமே இல்லாமல் கூட்டத்தோடு கோவிந்தா போடுவதால் தான் பொருட்கள் கஸ்டமர் கண்ணில் படுவதில்லை. அவரை கவர விளம்பரம் செய்து அதுவும் பத்தாமல் சினிமா, விளையாட்டு பிரபலங்களுக்கு கோடி கோடியாய் கொட்ட வேண்டியிருக்கிறது. அப்படி செய்து தொலைத்தாலாவது ப்ராண்ட் பிரபலமாகிறதா என்றால் அதுவும் இல்லை. பிரபலம் தான் இன்னும் பிரபலமாகிறாரே ஒழிய விளம்பரப்படுத்தப்படும் பொருள் போட்ட இடத்திலேயே பெட்டிப் பாம்பாய் படுத்திருக்கிறது.

பல மார்க்கெட்டர்கள் நாட்டிலுள்ள பிரபலங்களை மேலும் பிரபலப்படுத்தியே தீருவேன், அவர்களுக்கு பணத்தை கொண்டு சென்று கொட்டுவேன் என்று கங்கனம் கட்டிக்கொண்டு அதை மகேசன் திருப்பணியாய் செய்துகொண்டிருக்கிறார்கள். செய்துவிட்டு போகட்டும். அதற்கு தங்கள் ப்ராண்டுகளை நேர்ந்து விட்டு அவைகளை நோகடிக்க வேண்டுமா என்பது தான் கேள்வி.

பத்தா குறைக்கு இன்று நடப்பது போல் பல பிரபலங்கள் திருத்தல யாத்திரை போல் போதை மாத்திரை போட்டுக்கொண்டு தேவ நித்திரையில் மூழ்கும்போது அவர்களை வைத்து விளம்பரம் செய்யும் ப்ராண்டுகளின் கதி என்னவாகும்? வேறென்ன, காசி யாத்திரை சென்று கர்மத்தை தொலைக்கவேண்டியது தான்!

ஏதோ ஒரு பிரபலம் போதை மருந்து போட்டால் ப்ராண்ட் என்னய்யா பண்ணும் என்று  பரிதாபமாய் கேட்பவர்கள் பணிவான கவனத்திற்கு. பிரபலத்தின் தன்மைகள் மற்றும் குணாதிசயங்கள் ப்ராண்டுக்கும் பரவலாய் பரவி அது பொலிவுடன் புவியாள வேண்டும் என்று தானே அவர்களை வைத்து விளம்பரம் செய்கிறார்கள். அந்த பிரபலம் பலான மேட்டரிலோ போதை மருந்து போட்டு மாட்டிக்கொண்டால் மட்டும் பார்ப்பவர் அதை மறந்து ப்ராண்டை மட்டும் பார்க்கவேண்டுமாக்கும். இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராய் தெரியவில்லை. ப்ராண்டின் பிரபலம் போலீஸ் ஸ்டேஷனுக்கும் கோர்ட்டுக்கும் நடையாய் நடந்தால் அவரோடு சேர்ந்து ப்ராண்டும் அல்லவா நடையாய் நடந்து ஓடாய் தேயும்!

அதெல்லாம் கிடையாது, அப்படியெல்லாம் நடக்காது என்று இன்னும் வெள்ளந்தியாய் நினைத்துக்கொண்டிருந்தால் உங்கள் அறிவு கண்ணைத் திறந்து அதற்கு ஒரு மூக்கு கண்ணாடியும் மாட்டவேண்டியிருக்கிறது. அமெரிக்காவில் பல காலமாய் ‘னைக்கி’ ஷூ கால்ஃப் வீரர் ‘டைகர் உட்ஸ்’ஸை வைத்து விளம்பரம் செய்து வந்தது. ஒரு நாள் அவர் ‘செட் அப் மேட்டர்’ தெரிந்துபோய் அவர் மணைவி அவரை ரோடிலேயே துரத்த அந்த மேட்டர் ஊரெல்லாம் பரவி சந்தி சிரித்தது. இப்பேற்பட்ட ஆளை வைத்தா ஷூ விளம்பரம் எடுத்தாய், பிடி சாபம் என்று சுமார் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கஸ்டமர்கள் நைக்கியை இனி சிந்தையாலும் தொடேன் என்று சத்தியம் செய்தனர். நைக்கிக்கு  ஒன்றே முக்கால் மில்லியன் டாலர் நஷ்டம். எல்லாம் எதனால்? னைக்கி கோடி கோடியாய் கொண்டு கொட்டிய டைகர் தன் பசிக்கு புல்லை தின்னப் போனதால்! 

இது இப்படி என்றால் அடிகர் திலகம் ‘ஜாக்கி சான்’ கதை வேறு மாதிரி. அவர் சினிமாவில் நடிக்காத நேரத்தில் பல நாடுகளில் விளம்பரங்களில் தோன்றி எலக்ட்ரிக் பைக், சாஃப்ட்வேர் என்று பல ப்ராண்டுகளை பிரபலப்படுத்துபவர். அவர் போறாத வேளை, அவர் விளம்பரப்படுத்திய பல ப்ராண்டுகளில் ப்ராப்ளம் தோன்றின. அவர் பிரபலப்படுத்திய ஷாம்பு ப்ராண்ட் புற்று நோய்  ஏற்படுத்தும் என்று ஒரு செய்தி பரவியது. அவர் ஒப்புதல் அளித்த ஆட்டோ ரிப்பேர் பள்ளி ஏமாற்று கேஸில் மாட்டிக்கொண்டது. அவர் நடித்த கம்ப்யூட்டர் கம்பெனி திவாலாகியது. இப்பொழுது அங்கெல்லாம் ஜாக்கி சான் பற்றி பேசும் போது ‘அவரு எல்லாரையும் அடிச்சு வெளுப்பாரு. அவர வச்சு விளம்பரம் செய்யற ப்ராண்டையும் சேர்த்து’ என்று கிண்டல் செய்கிறார்கள்!

இவ்வளவு ஏன், இந்தியாவில் சில வருடங்களுக்கு முன் ‘ஸ்னாப் டீல்’ என்னும் ஈகாமர்ஸ் கம்பெனி ‘அமீர் கானை’ வைத்து பல நாள் விளம்பரம் செய்தது. அந்த கம்பெனிக்கு சனி அமீர் கான் ரூபத்திலேயே வந்தது. இந்தியாவில் வாழவே பயமாயிருக்கிறது என்று ஒரு நாள் அறிக்கை விட நாடே கொந்தளித்தது. ’உன்னை வளர்த்த இந்நாட்டில் உனக்கு வாழ முடியலன்னா பாகிஸ்தான் போயேன்’ என்று ஆயிரக்கணக்கானவர்கள் கோபத்தை காட்டும் வகையில் தங்கள் செல்ஃபோனிலிருந்து ‘ஸ்னாப் டீல்’ ஆப்பை டிலீட் செய்ய அந்த ப்ராண்ட் ‘அய்யா சாமி, எங்களுக்கு அமீருக்கும் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று ஒதுங்கினாலும் விற்பனைச் சரிவை சரிசெய்யவே முடியவில்லை. ஸ்னாப் டீல் ஸ்னாப் டல்லானது!

இத்தனை நடந்தும் இதைப் பற்றி இந்துவில் கட்டுரைகள் எழுதப்பட்டும் நானாக பட்டுக்கொள்ளும் வரை திருந்தமாட்டேன் என்று பலர் இன்னும் பிரபலங்களிடம் பல கோடிகள் அழுது அவர்கள் போதை பாதையில் போய் ஊரே பார்த்து சிரிக்க தங்கள் ப்ராண்டும் பாழாவதைப் பார்த்துக்கொண்டு திக்குத் தெரியாமல் தவிக்கிறார்கள். தேவையா இந்த தலையெழுத்து!

இதை சொன்னால் ‘ஏகப்பட்ட ப்ராண்டுகள், எக்கச்சக்க விளம்பரங்கள் இருக்கும் போது என் ப்ராண்டை எப்படி எல்லார் கண்ணிலும் படவைப்பதாம்’ என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள் மார்க்கெட்டர்கள். பிரச்சனையே அது தானே. நீங்கள் பணம் கொடுத்து வாங்குவது பிரபலத்தின் முகமும் உங்கள் ப்ராண்டிற்கான ஒப்புதலும் மட்டும் இல்லையே. கூடவே இலவச இணைப்பாக அவருடைய தகாத செயல்கள், இமாலய தவறுகள், வரலாறு காணாத ஸ்காண்டல்கள், தெரியாத விஷயங்களை கூட தெரிந்தது போல் உதிர்க்கும் உளறல்கள் எல்லாவற்றையும் அல்லவா சேர்த்து வாங்குகிறார்கள். பிரபலங்கள் பிரச்சனையிலும் ப்ராப்ளமிலும் சிக்கும் போது அவர்களோடு சேர்ந்து ப்ராண்டும் தெருவிற்கு வருகிறது. அதோடு கம்பெனிக்கும் கெட்ட பெயர் வந்து சேர்கிறது. இப்படியா கேட்டு வாங்கி தூக்கு மாட்டிக்கொள்வது!

ஒருவன் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை அவன் நிரபராதி என்பது சட்டம். ஆனால் மக்கள், மீடியா, சோஷியல் மீடியா உலகில் குற்றம் சாட்டப்பட்டாலே அவன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்படுகிறதே. பிரபலத்தை தூக்கி நிறுத்திய அதே கும்பல் அவரை தூக்கியெறியவும் தயாராக இருக்கிறதே. பிரபலம் பிரபலவீனம் ஆகிறாரே. சனிப் பிணம் தனிப்போகாது என்பது போல் கூடவே ப்ராண்டும் பாதாளம் பயனிக்கிறதே.

ப்ராண்டை பிரபலமாக்கும் வழி அதை பிரபலங்கள் தயவில் விட்டு ‘ஆனது ஆகட்டும்’ என்று இருப்பதல்ல. வாடிக்கையாளர் தேவையை புரிந்து அதை மற்றவர்களை விட பெட்டராய் பூர்த்தி செய்து ப்ராண்டில் புதுமைகளை புகுத்திக்கொண்டே இருந்து அவர்களுக்கு எப்பொழுதும் ரெலவெண்ட்டாய் இருப்பது தான். அப்படி செய்தால் எந்த ப்ராண்டும் பிரபலங்கள் இல்லாமலேயே பிரபலமாகும். வேலியில் போகும் ஓனானை வேட்டியில் விட வேண்டியிருக்காது!

இத்தனை காலம் ஆண்களிடம் பேசி அலுத்துவிட்டது. அப்படி பேசித் தான் என்னத்தை கண்டேன். அதனால் இன்று பெண்களை பற்றி கொஞ்சம் பேசலாம் என்றிருக்கிறேன்.

அதற்காக வெடுக்கென்று வேற சைட்டுக்கு போகாதீர்கள். பெண்களை பற்றி உங்களிடம் பேசலாம் என்றிருக்கிறேன். தொடர்ந்து படியுங்கள்.

அது சரி, எதற்காக யாராவாது வருகிறார்களா என்று அங்குமிங்கும் பார்த்துவிட்டு படிக்கிறீர்கள்? மணைவி வருகிறாளா என்றா? சார், பெண்களைப் பற்றி பேசப் போகிறேன் என்று சொன்னதென்னவோ வாஸ்வதம். ஆனால் நாம் பேசப் போவது பலான மேட்டர் பற்றி அல்ல, பிசினஸ் மேட்டர்!

சீப்பு, சோப்பு முதல் ரவா, கோதுமை வரை, வாஷிங் மெஷின் முதல் வேக்யூம் க்ளீனர் வரை பெரும்பாலும் விளம்பரங்கள் பெண்களை மட்டுமே மய்யப்படுத்துவதைப் பார்த்திருப்பீர்கள். எதோ பெண்கள் தான் எல்லா வேலையும் செய்வது போலவும், அவர்கள் தான் குடும்பத்தை பராமரிப்பது மாதிரியும் சித்திரிக்கப்படுகிறார்கள். குடும்ப பராமரிப்பை விடுங்கள். ஆண்கள் குளிப்பது கூட இல்லையா? பவுடர், ஷாம்பு போடுவதில்லையா? ஆண்கள் ஏன் விளம்பரங்களில் வஞ்சிக்கப்படுகிறார்கள்? ஒய் திஸ் ஓரவஞ்சனை?

விடை ரொம்ப ஈசி. பெரும்பாலான பொருட்களை பெண்கள் தான் வாங்குகிறார்கள். எந்த கடையில் வாங்குவது என்பதிலிருந்து எந்த ப்ராண்டை தேர்ந்தெடுப்பது என்பது வரை சர்வம் பெண்கள் கைங்கர்யமே. நம் வீடுகளில் பர்சேஸ் டிபார்ட்மெண்ட்டின் நிரந்தர முதல்வர் பெண்களே. அதனால் தான் மளிகை கடை முதல் சூப்பர்மார்க்கெட் வரை, ஃபேன்சி ஸ்டோர் முதல் ஜவுளி கடை வரை அதிகமாக தென்படுவதும் அவர்களே. ஆண்களை காண ஆசைப்படுபவர்கள் பெட்டி கடை வெளியிலோ அல்லது டாஸ்மாக் உள்ளேயோ பார்க்கவும்!

வீட்டிற்கு தேவையான பொருட்கள் பெரும்பாலானவற்றை வாங்குவது பெண்கள் என்பதால் அவர்களே விளம்பரங்களில் முக்கியத்துவம் பெறுகிறார்கள். இது நியாயமானது. ஒழிந்து போகிறது என்று விட்டுவிடலாம். ஆனால் ஏன் பொருட்களை விற்கும் கம்பெனிகளின் மார்க்கெட்டிங் துறை மற்றும் நிர்வாகத்தில் பெண்களை அதிகம் காண முடிவதில்லை? கடைகள் முதல் கம்பெனிகள் வரை முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருக்கிறார்கள். கம்பெனியில் வேலை செய்த நாள் முதல் மார்க்கெட்டிங் ஆலோசகனாய் இருக்கும் இக்காலம் வரை அபீஸ் கான்ஃபரென்ஸ் ரூமில் நான் சந்தித்த பெண்கள் மிக சொற்பமே. எனக்கு பயந்து பெண்கள் அந்த ரூம் பக்கமே வராமல் இருந்தார்களா என்பது பற்றி தகவல் இல்லை!

இந்திய திருநாட்டில் மட்டும் தான் இந்த இருட்டடிப்பு என்றில்லை. ஆனாளப்பட்ட அமெரிக்காவிலும் இதே கதி தான். ‘Fortune 500’ எனப்படும் அமெரிக்காவின் டாப் ஐனூறு கம்பெனிகளின் நிர்வாக போர்டில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை 15 சதவீதம் தானாம். நம் கிராமங்களில் தான் இந்த கன்றாவி என்றால் கம்பெனிகளில் கூட பெண்களுக்கு கள்ளிப் பால் கொடுக்கப்படுகிறது பாருங்கள்!

’அய்யோ, சமுதாயத்தில் பெண்கள் சரிநிகர்சமானமாக பார்க்கப்படுவதில்லை, அய்யஹோ, ஏன் இந்த அடக்குமுறை, அடடா எதற்காக இந்த ஆணாதிக்கத்தனம்’ என்று கொடி பிடித்து கத்துவதல்ல இக்கட்டுரையின் நோக்கம். ஒரு மார்க்கெட்டராக இதை பார்க்கும் போது இந்த விஷயத்தின் அனர்த்தம் எனக்கு ஆச்சரியமளிக்கிறது. இதனால் நிகழும் தவறுகளை யாரும் கவனிக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

பெண்ணின் மனதை புரிந்துகொள்ள முடியவில்லை என்று பள்ளி பருவதிலிருந்தே புலம்பி வருகிறோம். திருமணத்திற்கு பிறகு அதை புரிந்துகொள்ள முயல்வது  முடியாத ஒன்று என்று முடிவு செய்து அம்முயற்சியை மொத்தமாய் கைவிடுகிறோம். ஆபீசிலும் ஏன் இதன் முக்கியத்துவத்தை மறக்கிறோம்?

சொந்த மணைவியையே புரிந்துகொள்ள முடியாத மார்க்கெட்டர்கள் மற்ற பெண்களை எப்படி புரிந்து, அவர்கள் தேவையை அறிந்து தங்கள் ப்ராண்ட் வடிவமைப்பிலிருந்து பொசிஷனிங் வரை, பாக்கேஜிங் முதல் விளம்பரங்கள் வரை அனைத்தையும் செய்யமுடியும்? அவர்கள் ப்ராண்டுகளை வாங்கப்போவது பெண்கள் தான் என்ற பட்சத்தில் அவர்களை தங்களால் சரியாக புரிந்துகொள்ள இயலாது எனும் போது தங்களுக்கு உதவ மார்க்கெட்டிங் துறையிலும் நிர்வாகத்திலும் பெண்களை அல்லவா அதிகம் நியமிக்கவேண்டும்?

அதற்காக ஆபிசில் உள்ள ஆண்களை அடித்து துரத்துங்கள் என்று சொல்லவில்லை. பெண்களை மய்யப்படுத்தியே பல பொருட்கள் இருக்கையில் மார்க்கெட்டிங்கில், நிர்வாகத்தில் பெண்கள் பங்களிப்பு இருக்கவேண்டியதன் அவசியத்தை,அவசரத்தை அறிவுறுத்துகிறேன். பெண் மனதை இன்னொரு பெண்ணால் தான் புரிந்துகொள்ள முடியும் என்று சினிமா முதல் சீரியல் வரை சொல்கிறார்களே. யாரும் இதை மறுத்ததாய் தெரியவில்லையே. ஒரு வேளை இது உண்மையாய் இருக்கும் பட்சத்தில் மார்க்கெட்டிங் விளையாட்டில் அவர்களை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டுமே என்று ஆதங்கப்படுகிறேன்!

நமக்கு பெண்களிடம் எந்த குணங்கள் பிடிக்காதோ அவை தான் மார்க்கெட்டிங் பணி செய்ய அவசியமானவை, நிர்வாகம் செய்ய முக்கியமானவை. மார்க்கெட்டிங்கில் உள்ள பல ஆண்கள் மார்க்கெட், வாடிக்கையாளர், போட்டியாளர்கள் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருப்பது போல் நினைத்துக்கொண்டு அதிகம் கேள்விகள் கேட்டுத் தெரிந்துகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். இதனாலேயே பல கம்பெனிகள் வாடிக்கையாளர்களை சரிவர புரிந்துகொள்ளாமல் தவறான முடிகள் எடுக்கின்றன. கேள்வி கேட்கும் குணத்தில் பெண்கள் எப்படி என்பது தான் கணவன்மார்களுக்கு கண்கலங்க தெரியுமே. கேள்வி கேட்டு குடைந்து குதறுவது பெண்களுக்கு கைவந்த கொலை. ஐ மீன், கலை. பொருள் பிரிவு, வாடிக்கையாளர், போட்டியாளர் போன்றவற்றைப் பற்றி தெரிந்திருந்தும் கேள்விகள் கேட்டு குடைந்து  புதிய தகவல்கள் பெற பெண்கள் தான் ரைட் சாய்ஸ்!

அதோடு மார்க்கெட்டிங் துறையில் பெண்களை அதிகம் சேர்த்துக்கொள்வதில் இன்னும் பல சௌகரியங்கள் உண்டு. ஒரே நேரத்தில் பல காரியங்களை செய்ய வேண்டிய சில துறைகளில் மார்க்கெட்டிங்கும் ஒன்று. டீவியில் சீரியல் பார்த்துக்கொண்டே சமையலும் செய்து குழந்தைகளுக்கு ஹோம் ஒர்க் சொல்லித் தந்து, கிடைத்த கேப்பில் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு, பக்கத்து கடைக்கு ஃபோன் செய்து சாமான் ஆர்டர் செய்துகொண்டே பேப்பர் படிக்கும் நம்மிடம் பத்து வேலைகள் தந்து அதை செய்கிறோமா என்று வேவு பார்த்து நாம் செய்யாத பட்சத்தில் திருமணம் செய்த நாளிலிருந்து நான் செய்த தவறுகளை கால வரிசைப்படி கரெக்ட்டாக ஸ்லோகம் சொல்வது போல் சொல்லிக்கொண்டே அறையை பெருக்கி துடைக்கும் அசகாய சூரர்கள் பெண்கள். இந்த அஷ்டாவதானிகளை மார்க்கெட்டிங்கில் சேர்த்துக்கொள்வது கம்பெனிகளுக்கு பிரமாதமாய் பயன் தரும்.

மீட்டிங்கில் ஒருவர் ஒன்றைச் சொன்னார் என்றால் மற்றவர்கள் கேள்வி கேட்காமல் அதை ஒத்துக்கொண்டு பிஸ்கெட் டீயை தின்றுவிட்டு மீட்டிங் முடிக்கப்படுவது தான் பல சமயங்களில் ஆபீசுகளில் நடக்கிறது. சொல்லப்பட்ட விஷயம் பற்றி கேள்வி கேட்டால் தானே சொன்ன விஷயம் சரியா, செய்யத் தகுந்ததா என்பது தெரியும். இதற்காகவே  ஒன்றிரண்டு பெண்கள் மீட்டிங்கில் இருந்தால் அவர்கள் கேள்வி கேட்டு குடைந்து பேசப்படும் விஷயத்தின் ஆழம் வரை சென்று சரியான முடிவெடுக்க உதவுவார்கள்.

வாய் ஓயாமல் பேசுகிறார்கள் என்று பெண்களை குறை சொல்கிறோமே, அந்த லொட லொட பேச்சை கொண்டு மார்க்கெட்டை மட மடவென்று புரிந்துகொள்ள முடியும். வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்து அவர்களோடு பேச்சு கொடுத்து அவர்கள் தேவைகள், ப்ராண்ட் பற்றிய அவர்கள் கருத்துக்கள், போட்டி பொருட்களை பற்றிய அவர்கள் எண்ணங்கள் என்று எத்தனை ஃபீட்பேக் பெறமுடியும் என்று சிந்தித்துப் பாருங்கள். வாடிக்கையாளர் ஆய்வு செய்வதற்கென்றே பிரத்யேகமாக ஆர்டர் செய்து தயாரிக்கப்பட்டவர்கள் பெண்கள்!

பெண்கள் கண்டிப்பாய் இருக்கவேண்டிய இன்னொரு இடம் பொருள் வடிவமைப்பு துறை. குறிப்பாக பெண்கள் அதிகம் உபயோகிக்கும் பொருட்களின் பாக்கேஜிங்கை வடிவமைக்கும் போதும் பெண்களின் பங்களிப்பு அதில் அசாத்திய பயன் தரும். பொதுவாகவே பெண்களுக்கு அழுகுணர்ச்சி அதிகம். அவர்களை விட்டு நீங்களும் நானும் மட்டும் பொருளை வடிவமைத்தால் எப்படி இருக்கும்? தலைமுடியை கோதி விட்டுக்கொள்ளாதீர்கள். எனக்குப் புரிகிறது!

நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் ஆசை லவலேசம் கம்பெனிகளுக்கு இருந்தால் பத்து மணி முதல் ஆறு மணி வரை ஆபீசில் அமர்ந்து செய்வது தான் வேலை என்ற எண்ணத்தை விட்டொழிப்பது உசிதம். வேலை என்பது ஆபீசில் மட்டுமே செய்யப்படும் ஒன்று என்ற கோட்பாடு வழக்கொழிந்து போய்கொண்டிருக்கிறது. வீட்டிலிருந்தே உழைப்பது, ஃப்ளெக்சி ஒர்க்கிங் என்று திறமை இருந்தும் ஏதோ சில காரணங்களுக்காக முழு நேரமும் ஆபீஸ் சென்று உழைப்பவர் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகிறது. இதில் பெண்கள் தான் அதிகம். அப்பேற்பட்ட பெண்களின் திறமையை பயன்படுத்தும் ஆசையிருந்தால் அவர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்கலாம். வாரத்திற்கு ஒரு சில நாட்கள் மட்டும் ஒரு சில மணி நேரங்கள் ஆபிசுக்கு வந்து போக சொல்லலாம்.

இதையெல்லாம் சொல்வதால் சாஸ்திரத்திற்கு மட்டும் ஏதோ ஒரு பெண்ணை பிடித்து மார்க்கெட்டிங் துறையிலோ நிர்வாகத்திலோ அமர்த்தி ‘நீ சொன்னது போல் செய்துவிட்டேன், பெண் உரிமை வாழ்க’ என்று அதோடு உங்கள் வேலை முடிந்தது போல் பேசாமல் இருந்து விடாதீர்கள். ஆய்வு ஒன்றில் கம்பெனி நிர்வாக போர்டுகளில் ஒரே ஒரு பெண்மணி மட்டும் இருக்கும் போது மீட்டிங்களில் அவர் பேசக் கூச்சப்பட்டு அதிகம் பங்களிக்காமல் அமைதியாக இருப்பதையும் குறைந்தது மூன்று பெண்கள் போர்டு மீட்டிங்குகளில் இருக்கையில் தைரியமாக கேள்விகள் கேட்டு அதிகம் பங்களித்து நல்ல முடிவுகள் எடுக்க முடிவதையும் கண்டுபிடித்திருக்கின்றனர். அதனால் உங்கள் மார்க்கெட்டிங் முதல் நிர்வாகம் வரை முடிந்தவரை கொஞ்சம் கூடுதலாகவே பெண்களை நியமியுங்கள். உங்கள் பிசினஸும் ப்ராண்டும் தீர்க்கசுமங்கலியாய் இருக்கும்!

அதோடு ஒரு சின்ன வேண்டுகோள். என்றாவது ஆபீஸ் பக்கம் வரும் உங்கள் மனைவி உங்களை சுற்றி சகட்டுமேனிக்கு பெண்கள் இருப்பதைப் பார்த்துவிட்டு ‘யாரைக் கேட்டு இத்தனை பெண்களை வேலைக்கு சேர்த்தீர்கள்’ என்று கேட்டால் தயவு செய்து என் பெயரை கூறி தொலைக்காதீர்கள்!

லாக்டவுன் முடிந்து கடைகள் சைஸ் வாரியாக திறக்க துவங்கியிருக்கிறது. பழையபடி சகஜ நிலை எப்பொழுது திரும்பும் என்பது தெரியாது. பல தொழில்கள் இனி சகஜ நிலைக்கு திரும்புமா என்பதே சந்தேம் தான். வாழ்க்கையை அடக்கி வியாபாரத்தை முடக்கிய கரோனா பிசினஸ் சிலபஸ்ஸை மொத்தமாய் மாற்றியிருக்கிறது. புதிய விதிகளை புரிந்துகொண்டு தொழிலில் மாற்றங்கள் செய்பவர்கள் மட்டுமே செகண்ட் இன்னிங்க்ஸ் ஆட களத்தில் அனுமதிக்கப்படுவார்கள். அதெல்லாம் எதற்கு, பழையபடி ஷட்டரை திறந்து கல்லாவில் அமர்ந்து கரன்சியை எண்ணி ரப்பர் பாண்ட் வைத்து கட்டினால் போதும் என்று நினைப்பவர்களை பார்த்து கரோனாவே பரிதாபப்படும். விற்கும் பொருளை, செய்யும் தொழிலை, புரியும் மார்க்கெட்டிங்கை மாற்றியமைக்க வேண்டியது இனி காலத்தின் கட்டாயம்.

விற்கும் பொருள்களில் மாற்றங்கள்

கொரோனா சாஸ்வதம் அல்ல. மருத்து கண்டுபிடித்துவிடுவார்கள். அதற்காக உங்கள் பொருள்களை மீண்டும் சாஸ்வதமாய் விற்க துவங்கலாம் என்று நினைக்காதீர்கள். கொரோனா மக்களை கொஞ்ச நஞ்சம் பயமுறுத்தவில்லை. உயிரை கையில் பிடித்துகொண்டு வாங்கும் பொருள்களில் கிருமி இருக்கிறதா என்று பூதக்கண்னாடி கொண்டு பயத்தோடு பார்க்கும் அளவிற்கு பூச்சாண்டி காட்டியிருக்கிறது. வாங்கும் பொருள்கள் பாதுகாப்பானதா என்று வாடிக்கையாளர்கள் பார்க்கிறார்கள். அதனால் உங்கள் பொருள்களை கொரோனா ப்ரூஃப் ஆக்கும் வழியைத் தேடுங்கள்.

நான் விற்கும் பொருளுக்கு இதெல்லாம் சாத்தியப்படாது என்று வியாக்கியானம் பேசாதீர்கள். ’பீட்டர் இங்கிலாண்ட்’ தான் விற்கும் சட்டை துணியை துளசி மற்றும் வேப்ப இலையின் குணங்கள் கொண்டு தயாரிக்கமுடியுமா என்று பார்க்கிறது. ’டோனியர்’ தான் விற்கும் கோட் சூட்டை ஆண்டி-வைரலாக்க வழி தேடுகிறது. ‘பாட்டா’ ஆண்டி பாக்டீரியா ஷூ செய்யலாமா என்று யோசிக்கிறது. யார் கண்டது, இந்நேரம் உங்கள் போட்டியாளர்கள் தங்கள் பொருள்களை இது போல் பாதுகாப்பானதாக்கும் வழி தேடிக்கொண்டிருக்கலாம். பழையபடியே பொருளை விற்கலாம் என்றிருந்தால் உங்கள் பொருள் பழைய பேப்பர் கடையில் போடப்படும், உஷார்!

செய்யும் தொழிலில் திருத்தங்கள்

பல காலம் பார்க்காமல் இருந்து பார்க்கும் போது மனிதர்கள் முதல் மரங்கள் வரை மாறியிருப்பதைப் பார்க்கிறோம். செய்யும் தொழில் மட்டும் இதற்கு விதிவிலக்கா. தானாக மாறாவிட்டாலும் நீங்களாக மாற்றவேண்டும். மாற்ற வேண்டியிருக்கும். வந்திருப்பது கரப்பான்பூச்சி அல்ல, கரோனா. வீட்டில் முடங்கிக் கிட, தள்ளி நில், கை அலம்பு என்று ஜபர்தஸ்தாய் ஆர்டர் செய்து மக்களை மாஸ்குடன் மூளையில் மண்டியிட்டு மருந்து வரும் வழி பார்த்து மன்றாட வைத்திருக்கும் அரக்கன்!

தொழிலை பழையபடி செய்துகொண்டிருக்க முடியாது. செய்தால் தொழிலதிபர் மட்டுமல்ல அவர் செய்யும் தொழிலுக்கே மாஸ்க் அணிவிக்கப்படும். தொழிலில் என்னென்ன மாற்றம் தேவை என்பதை சல்லடை போட்டு தேடுங்கள். சேலம் நகரிலுள்ள ‘நாலெட்ஜ் பிசினஸ் ஸ்கூல்’ தங்கள் எம்பிஏ மாணவர்களுக்கு ஆன்லைன் வீடியோ வகுப்புக்கள் நடத்தும் வகையில் தங்கள் பாடம் எடுக்கும் முறைகளை மாற்றியமைத்திருக்கிறது. ஹோம் வர்க் செய்யாத மாணவர்களை ஹோமிலிருந்தே ஒர்க் செய்ய வைத்திருக்கிறது! செய்யும் தொழிலை கரோனா காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றுங்கள். வேவைப்பட்டால் பிசினஸ் மாடலை கொரோனா தாக்கத்திற்கு தகுந்த வகையில் தேற்றுங்கள். உங்கள் தொழிலின் ஆயுள் கூடும்.

புரியும் மார்க்கெட்டிங்கில் புதுமைகள்

மார்க்கெட்டிங் என்றால் விளம்பரம் என்று பலர் நினைக்கிறார்கள். அக்கிரமத்திற்கு தப்பாட்டம் இது என்று கரடியாய் கத்தினாலும் பலர் காதில் விழுவதில்லை. காதை பொத்திக்கொண்டிருந்தால் எப்படி விழும். இனியும் இப்படி இருந்தால் தொழிலை எந்த சானிடைசர் போட்டு கழுவினாலும் காப்பாற்ற முடியாது. மார்க்கெட்டிங் என்பது வாடிக்கையாளரை அறிந்து அவர் தேவையை புரிந்து அதை மற்றவர்களை காட்டிலும் பெட்டராக தீர்த்து அதை கொல்லிக்காட்டிக்கொண்டே இருக்கும் செயல்பாடுகளின் கலவை. இது கரோனா காலம், பாதி கடைகள் திறக்கவில்லை, மீதி கடைகளில் கூட்டமில்லை, இதில் எங்கிருந்து பொருளை விற்பது என்று சால்ஜாப்பு கூறினால் சப்ஜாடாய் தொழிலை மூடவேண்டியது தான். உங்கள் பொருளின் அவசியத்தை வாடிக்கையாளர் உணர என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள். நெருக்கடி காலத்தில் உங்கள் பொருளுக்கு மக்கள் முன்னுரிமை தர என்ன செய்வது என்று யோசியுங்கள்.

கரோனா வந்த பிறகு தான் பல ஆண்களுக்கு தங்கள் வீட்டில் சமையல் அறை எங்கிருக்கிறது, எப்படி இருக்கிறது என்றே தெரிந்திருக்கிறது. இன்று பலர் தாங்களே சமையல் செய்வது முதல் மணைவிக்கு உதவுவது வரை கிச்சனில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள். இதை தங்களுக்கு சாதகமாக்கும் வண்ணம் நாமக்கல் நகரைச் சேர்ந்த ‘அர்பன் ஹோம்ஸ்’ என்ற ஃபர்னிச்சர் கடை வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ஈமெயில் மூலம் வாடிக்கையாளர்களிடம் ‘இப்பொழுது புரிகிறதா உங்கள் மணைவி சாதாரண கிச்சனை கட்டிக்கொண்டு எப்படி கஷ்டப்படுகிறார் என்று. அவளுக்கு நீங்கள் தாஜ் மஹால் கட்டித்தரவேண்டாம், அட்லீஸ்ட் ஒரு அழகான மாடுலர் கிச்சன் ஆர்டர் செய்து தரலாமே. எங்களை அழையுங்கள். உங்கள் வீடு தேடி வந்து செய்து தருகிறோம்’ என்று விளம்பரப்படுத்துகிறது. என்ன அழகான ஐடியா பாருங்கள். சமையல் ரூமில் வேர்க்க விறுவிருக்க மணைவிக்கு உதவிவிட்டு வந்து அமரும் கணவன் வாட்ஸ் அப்பில் இந்த மெசேஜை படித்தால் அர்பன் ஹோம்ஸ் கடையை உடனே அழைப்பாரா மாட்டாரா. இவ்வகை மார்க்கெட்டிங் தான் இனி உங்கள் தொழிலுக்கு ஆக்சிஜன் தரும் வெண்டிலேட்டர் என்பதை உணருங்கள்!

உலகம் அழியப் போவதில்லை. ஆனால் நிறைய மாறப்போகிறது. தொழிலில் முழுமையான மாற்றம் செய்யும் முறைகளை முழு நேரம் சிந்தித்து முனையுங்கள். தொழில் தழைக்க அல்ல, பிழைக்கவே இது அவசியம். புரிந்தவர்கள் தொழிலுக்கு தடுப்பூசி தரப்படும். மாற மறுக்கும் தொழில்கள் சோஷியல் டிஸ்டன்சிங் செய்யப்படும்!

கொஞ்ச நாளாகாவே தினம் வாக்கிங் செல்கிறேன். டாக்டர் சொல்லி அல்ல. வாக்கிங் சென்றால் ஆரோக்கியமாகி எங்கு இவன் நம்மிடம் வராமல் இருப்பானோ என்று அவர் சொல்லவில்லை. பாழாய் போன பீச் பக்கத்தில் குடியிருக்கிறேன். தினம் எங்கு, ஏன் போகிறோம் என்று தெரியாமல் அதை தெரிந்துகொள்ள நடப்பது போல் குறுக்கும் நெடுக்குமாக பலர் வாக்கிங் செல்வதைப் பார்த்தேன். மனதில் குற்ற உணர்ச்சி. ‘பீச் பக்கத்தில இருந்துட்டு வாங்கிங் போறதில்லையா’ என்று பலர் துக்கம் விசாரித்தனர். போறாததற்கு என் மணைவி நான் கிச்சன் சென்றாலே ‘நகருங்க, எது ஃப்ரிஜ்ஜின்னே தெரியல’ என்று வளர்ந்து வரும் என் தொப்பையை குத்திக்காட்டினாள். பொறுத்தது போதும் என்று ஒரு நாள் ஷூ, சாக்ஸ் எல்லாம் வாங்கி நடக்கத் துவங்கினேன். ஸ்கூல் படிக்கும் போது பி.டி பீரியட், ஸ்போர்ட்ஸ் டே அன்று போட்டது. புதுசா இருந்தாலும் மூன்று மாத வாக்கிங்கில் இப்பொழுது பழகிவிட்டது.

என் உடம்பு இளைத்ததா தெரியவில்லை. ஆனால் தள்ளு வண்டி, ஜூஸ் கடை என்று தினம் ஒன்று முளைத்து பீச் இளைத்துவிட்டது. நடக்க ஆரம்பித்த புதிதில் மற்றவர் மூஞ்சியை பார்க்க  வெட்கமாக இருந்தது. ’இவனெல்லாம் ஏன் வரான்’ என்பது போல் என்னை கடந்து சென்றார்கள். காலச் சுழற்சியில் இப்பொழுது சீனியர் போல் உணர்வதால் ஜாலியாக மற்றவர் முகம் பார்த்து நடக்கிறேன். சிலரோடு ’குட்மார்னிங் சார்’ என்று ஆரம்பித்த நட்பு கிரிக்கெட் மாட்ச், அரசியல் என்று டிஸ்கஸ் செய்தவாரே நடக்குமளவிற்கு வளர்ந்திருக்கிறது. இப்படி சொல்வதால் ஃப்ரெண்ட் ஆகிவிட்டார்கள் என்று அர்த்தமல்ல. பலர் பெயர் கூட எனக்குத் தெரியாது. கேட்கவில்லை. அவ்வளவு தான். எல்லாருமே ‘சார்’ தான். இதில் ஒரு சௌகரியம. யார் பெயரும் மறக்காது!

அன்றும் அப்படித் தான். பாங்கில் வேலை செய்யும் ‘சார்’ புது ஷூ அணிந்து வந்தார். முதலில் நாங்கள் கவனிக்கவில்லை. என்றும் இல்லாத திருநாளாய் அன்று காலை ஆட்டிக்கொண்டே நடந்தார். ஒழுங்காய் இருந்த லேஸை அடிக்கடி கழட்டி கட்டினார். பாவமாய் இருந்தது. கேட்டே விட்டேன். ‘புது ஷூவா?’

‘ஆமா சார்’. சாதித்த சந்தோஷம் அவர் முகத்தில்.

எங்களோடு வந்த செண்டரல் கவர்மெண்ட் சார் அவரிடம் ‘என்ன பிங்க் கலர்ல இருக்கு. பொம்பளைங்க ஷூவா’ என்றார்.

‘இல்லையே, ஆன்லைன்ல தான் வாங்கினேன்’ என்றார் பாங்க்.

இதன் அனர்த்தம் யாருக்கும் புரிந்ததாய் தெரியவில்லை. எனக்கு பழகிவிட்டது. செண்ட்ரல் கவர்ன்மெண்ட் தொடர்ந்தார். ‘எல்லாரும் எல்லாத்தையும் ஆன்லைன்ல வாங்கிட்டா கடையெல்லாம் இழுத்து மூடனுமோ’.

பிசினஸ் டாபிக்ஸ் என்றால் என்னை பார்ப்பார்கள் என்பதால் அக்கேள்வி என்னிடம் கேட்கப்பட்டதாய் உணர்ந்து ‘ஆன்லைன் வளர்ச்சிய தடுக்க முடியாது சார்.’

‘கடைகாரங்க பாவம் என்ன சார் பண்ணுவாங்க’?

‘ரிக்‌ஷாகாரங்களுக்கு பாவப்பட்டிருந்தா ’ஓலா’ல உட்கார மாட்டோமே. டெய்லருக்கு வருத்தப்பட்டிருந்தா ‘பீட்டர் இங்லாண்ட்’ போட மாட்டோமே. டெக்னாலஜிய யூஸ் பண்ணி சௌகரியத்த தேடறது தானே சார் வாழ்க்கை’ என்றேன்.

‘இந்த அரசாங்கம் ஏதாவது பண்ணி ஆன்லைன் கொட்டத்த அடக்கனும்’ என்றார் ஆர்கிடெக்ட். அவர் மைத்துனர் ஃபார்மசி வைத்திருக்கும் வருத்தம் போலும்.

‘அரசாங்கம் இண்டர்னெட் கனெக்‌ஷன் எல்லாத்தையும் கழட்டி எறிஞ்சி எல்லாரோட செல்ஃபோனையும் பிடுங்கிக்கிட்டா ஆன்லைன் கொட்டத்த அடக்கலாம்’ என்றேன்.

’என்னால தான் முடியல, பாழாய் போன கவர்மெண்ட் பண்ணா தேவலை. டெய்லி என் பொண்டாட்டி செல்ஃபோன்ல எதையாவது பார்த்து ஆர்டர் பண்ணி தொலைக்கறா. வாராவாரம் ஆன்லைன் கம்பெனிக்கு கப்பம் கட்றேன். நடந்து இளைக்கிறேனோ இல்லையோ ஆன்லைன்ல பணம் செலவழிச்சே இளைச்சுட்டேன்’.

‘உங்களுக்காவது பொண்டாட்டி தான். என் வீட்டுல பொண்டாட்டிலேருந்து பசங்க வரைக்கும் சப்ஜாடா ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிறாங்க. அமேசான் ஓனரே என்னை கூப்ட்டு தாங்க்ஸ் சொல்றாருன்னா பாருங்க’ என்றார் கெமிகல்ஸ் கம்பெனி ஓனர்.

ரொம்ப அவதிப்பட்டிருக்கிறார்கள் என்பது அவர்கள் பேச்சில் தெரிந்தது. ஆறுதல் கூறுவோமே என்று ‘பெண்டாட்டி, பிள்ளைகள் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணறதுக்கே கவலைப்படறீங்களே. இங்கிலாந்துல வீட்டில வளர்ர கிளி யாரும் இல்லாத போது சூப்பர்மார்க்கெட்டுக்கு ஃபோன் பண்ணி தனக்கு ரொம்ப பிடிச்ச தர்பூஸ், திராட்சை, ப்ராக்கலி, ஐஸ் க்ரீம் ஆர்டர் பண்ணி விளையாட காத்தாடியும் பத்தாததுக்கு பல்பும் ஆர்டர் பண்ணியிருக்கு’ என்றேன்.

’அட’, ‘அப்படியா’ என்று குரல்கள் கேட்டது. அவர்கள் பாரம் சற்று குறைந்தது. நாம் தான் குடும்பத்தால் ஆன்லைன் அவதிப்படுகிறோம் என்று பார்த்தால் மற்றவர்கள் இதை விட மோசமான நிலையில் இருப்பது மனதிற்கு ஒரு ஆறுதலாய் இருந்திருக்கும் அவர்களுக்கு. வீட்டில் கரண்ட் போகும் போது அக்கம்பக்கம் பார்த்து அங்கும் கரண்ட் இல்லை என்று நம் மனதை திடப்படுத்திக்கொள்வது போல!

’நிஜமாவா சார்’ என்றார் கெமிகல்ஸ் ஓனர்.

‘கிளி மேல சத்தியமா சார். ஆப்பரிக்க க்ரே வகை கிளி. மனுஷங்க மாதிரி பேசும். முதல்ல எதோ சரணாலயத்தில இருந்திருக்கு. ஆனா பாருங்க, அங்க வர டூரிஸ்டை அசிங்கமா வய்யுமாம். இதனால கூட்டம் குறையுதுன்னு அங்க வேலை செய்யற மேரியன்னு ஒருத்தர் அத தன் வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து ரோக்கோன்னு பெயர் வெச்சு வளர்க்கரார். வளர்த்த கிளி பாருங்க, ஆன்லைன் மார்ல பாயுது’.

‘நல்ல வேளை, என் பொண்டாட்டி நாய் தான் வளர்க்கறா’ என்றார் இஞ்சினியர்.

’ஆன்லைன் கம்பெனி எப்படி இப்படி குறஞ்ச விலைல விக்க முடியுது’ என்றார் பாங்க்.

‘அது என்ன கன்றாவியோ தெரியல சார். வென்சர் ஃபண்ட் பஞ்சர் ஃபண்டெல்லாம் ஆன்லைன் கம்பெனிகள்ல பணத்தை போய் கொட்றாங்க. என்ன எழவு நேர்த்தி கடனோ தெரியல’ என்றேன்.

‘பைஜூன்னு ஆன்லைன் கம்பெனிக்கு 540 மில்லியன் டாலர் தந்திருக்காங்க’ என்றார் ட்யூஷன் செண்டர் நடத்தும் டீச்சர். ‘ஆன்லைன்ல பாடம் சொல்லி தர கம்பெனி’ என்று நிறுத்தி ‘நானும் தான் ட்யூஷன் எடுக்கறேன். எனக்கு பசங்களே சரியா வரதில்ல. இந்த கம்பெனிக்கு மட்டும் எப்படி சார் இத்தனை பணம் வருது’ என்றார்.

‘அவங்க கோடிக்கணக்கில பணம் தத்து ஷாரூக் கான் வச்சு விளம்பரம் செஞ்சாங்க. அதில மயங்கி பணம் தந்திருப்பாங்க. நீங்களும் அப்படி பண்ணிப் பாருங்களேன். உங்களுக்கும் ஒரு இளிச்சவாயன் கிடைக்காமலா போவான்’ என்றேன்.

’எங்கிட்ட அவ்வளவு பணமில்லையே’.

‘ஷாரூக் கான் இல்லன்னா என்ன, உங்க சக்திக்கு ஏத்த மாதிரி மன்சூர் அலி கான் வச்சு விளம்பரம் பண்ணுங்க’. அவரை உற்சாகப்படுத்தத் தான் கூறினேன். ஆனால் அவர் ஏனோ முகத்தை திருப்பிக்கொண்டார்.

’ஆன்லைன்ல நிறைய ஃப்ராடு நடக்குதாம் சார்’ என்று ஆரம்பித்தார் சென்டர்ல் கவர்மெண்ட். ‘சாப்பாடு டெலிவரி பண்ற கம்பெனிகாரர் ஒருத்தர் ஆர்டர் பண்ண சாப்பாட்ட பாதி சாப்டுருக்கார். நல்லா இல்லை போலிருக்கு. மீதிய மட்டும் டெலிவரி பண்ணியிருக்கார்’ என்றார்.

‘விடுங்க சார், அரசியல்வாதிங்க நம்ம வரிப்பணத்தை சாப்டு மீதிய தானே நாட்டுக்கு செலவழிக்கறாங்க. இந்த டெலிவரி பாய் செஞ்சது பெரிய தப்பில்ல’ என்றார் பாங்க்.

தப்பை சப்பு கட்டி அதன் தீவிரத்தை குறைத்து நாளடைவில் அதை தப்பே இல்லை என்று சித்தரிக்கும் இந்திய பண்பை நினைத்தேன். அமரர் சுஜாதா எழுதிய வரிகள் நினைவிற்கு வந்தது. ‘தப்பு என்ன பனியன் சைஸா, ஸ்மால், மீடியம், லார்ஜ் என்று பார்த்து மன்னிக்க’.

அந்நேரம் எதிரில் வந்த இளைஞனை செண்ட்ரல் கவர்ன்மெண்ட் நிறுத்தினார். ’வாப்பா உனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிருக்காமே’ என்றார். குரலில் ஒரு எகத்தாளம். அக்கம்பக்கமும் கரண்ட் போகும் திருப்தி!

‘ஆமா சார், மேட்ரிமோனியல் சைட்ல அப்பா ரிஜிஸ்டர் பண்ணியிருந்தார். அதுல ஒரு பெண்ணை செலக்ட் செஞ்சு ஜாதகம் எல்லாம் பார்த்தார். பொருந்தியிருக்கு. நான் பொண்ண பாக்கல, ஆனா ஃபோட்டோ பாத்து ஓகே சொல்லிட்டேன்’ என்றான்.

இந்த செண்ட்ரல் கவர்ன்மெண்ட் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம். ‘பாத்துப்பா, இப்ப தான் பேசிட்டிருந்தோம். ஒரு சாப்பாடு டெலிவரி கம்பெனிக்காரர்’ என்று துவங்கி ’நீயோ ஆன்லைன்ல ஆர்டர் பண்ணியிருக்கேன்னு சொல்ற’ என்று தொடர, நான் நைஸாக அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டேன்.

அனேகமாய் இந்நேரம் செண்ட்ரல் கவர்ன்மெண்ட் கவிழ்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்!

மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்று சொன்னவர்கள் கொரோனா எத்தனை நாள், லாக்டவுன் எவ்வளவு காலம் என்பதையும் சொல்லியிருக்கலாம். வேலை இல்லாதவன் பூனை மீசையை சரைத்த கதையாய் சைனாக்காரன் வௌவாலில் சிவனே என்றிருந்த கோவிட்டை எடுத்து வேட்டியில் விட்டுக்கொண்டு அதுவும் பத்தாமல் சைனீஸ் ஃப்ரைட் ரைஸ் போல் அதை உலகெங்கும் பார்செல் செய்து சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்திருக்கிறான். சங்கு சத்தம் காதை பிளக்கிறது. காலை சுற்றிய பாம்பு விடாது போலிருக்கிறது. கை அலம்பினாலும் கைவிடமாட்டேன் என்று கழுத்தறுக்கிறது!

டிவியை போட்டால் கோவிட். பேப்பரை பிரித்தால் கொரோனா. வீட்டில் காலிங் பெல் அடித்தால் கூட ’கொரானாவா பாரு’ என்று கேட்க தோன்றுகிறது. இத்தனை லூட்டியில் அக்னிநட்சத்திர வெயில் கூட பெரியதாக தெரியவில்லை. எப்படி தெரியும், வெளியில் செல்ல பயந்து வீட்டிற்குள்ளேயே வெட்டியாய் கிடந்ததால் வெயில் எப்படியிருக்கும் என்பதே மறந்துவிட்டது. பிறந்தது முதல் என் வீட்டு சுவரே கதி என்றிருந்த பல்லி வாய் திறந்து என்னை கேட்டேவிட்டது. ‘எனக்கு தலையெழுத்து சுவரில் கிடந்து சாகிறேன். நீ ஏன் சோபாவே கதி என்று என்று கிடக்கிறாய்’. பல்லி கூட நம்மை இப்படி சில்லியாய் நினைக்கிறதே என்று நாக்கை பிடுங்கிக்கொள்ளலாம் என்று பார்த்தால் கையை எச்சை பண்ணக்கூடாதாம். கோரோனா தொற்றிக்கொள்ளுமாம். மனதார அழுது துக்கத்தை தொலைக்க கூட வழியில்லை. என்ன எழவு வாழ்க்கை இது.

எங்கு திரும்பினாலும் மாஸ்க் சகிதம் மக்கள். எந்த நேரத்தில் ‘மூடிண்டு போ’ என்று வைதோமோ இன்று அனைவரும் மாஸ்க் சகிதம் மூடிக்கொண்டு போகிறார்கள். இந்த லட்சணத்தில் என் நண்பர் எனக்கு ஃபோன் செய்து ஒரு பாடு புலம்பினார். காரில் சென்றவர் தெருவில் நடந்துசென்றுகொண்டிருந்த என்னை பார்த்து சிரித்தாராம், பதிலுக்கு நான் சிரிக்கவில்லையாம். ஏசி காருக்குள் காசி யாத்திரை போவது போல் என்னை பார்த்து அவர் சிரித்தது நினைவிற்கு வந்தது. பதிலுக்கு நானும் சிரித்தேன். என் தலையெழுத்து, மாஸ்க் போட்டிருந்ததால் நான் சிரித்தது அவருக்கு தெரியவில்லை. நீ முன்பு மாதிரி இல்லை, பழசை மறந்துவிட்டாய் அது இது என்று பேட்டரி தீரும் வரை பேசியே புலம்பிவிட்டார். அவருக்கு கை காட்டி ஹலோ சொல்லி தொலைத்திருக்கலாம். இந்த பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து தப்பியிருப்பேன்.

இந்த பாழாய் போன கொரோனாவல் அவமானப்படவும் வேண்டியிருக்கிறது. அன்று கடைக்கு போனவன் சாமானோடு என் மானத்தையும் வாங்கிக்கட்டிக்கொண்டேன். கடை வாசலில் நின்றிருந்தவர் என்னை பார்த்து சிரித்தார். அவர் கையில் பன்னீர் சொம்பு போல் இருந்தது. வரவேற்கிறார் என்று தலையை குனிந்தேன். ’இது தலைல தடவறதுக்கில்ல, கைய நீட்டுங்க’ என்றார். சானிடைசராம். நானாவது பரவாயில்லை, என் பின்னால் வந்த பிரஹஸ்பதி கையில் தெளித்த சானிடைசரை கோயில் தீர்த்தம் போல் பயபக்தியுடன் உறிஞ்சி தொண்டை எரிச்சலை தாங்கிக்கொண்டு தலையில் வேறு தெளித்துக்கொண்டார். நல்ல காலம், மனிதர் கடையில் அங்கப்பிரதஷணம் செய்யவில்லை. அதுவரை ஷேமம்!

இந்த லட்சணத்தில் சோஷியல் டிஸ்டன்சிங் செய் என்று பிரச்சாரம் வேறு. ஏதோ பழைய காலம் போல் ஊரே ஒன்று கூடி சந்தோஷங்களை பரிமாறி கொள்வது போலவும் கூட்டுக் குடும்பங்கள் கொஞ்சிக் குலாவி குதூகலமாய் கும்மாளமடிப்பது போலவும் நினைப்பு. கணவன் மணைவி கூட சொந்த வீட்டில் சோஷியல் டிஸ்டன்சிங் செய்து வாழும் இக்காலத்தில் தள்ளி நில் என்பவர்களை பார்த்து கொரோனாவே கபகபவென்று சிரிக்கும். இந்த லட்சணத்தில் பக்கத்தில் செல்லாதே, ஆறடி தள்ளி நில், வட்டத்திற்கு வட்டம் பாண்டி ஆடி தாண்டிப் போ என்றெல்லாம் கூறினால் பாவம் கொரோனா சிரித்து சிரித்து அதன் சின்ன வயிறே புண்ணாகியிருக்கும்!

எது எப்படியோ ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரி ஆகிவிட்டது. கலியன் பூங்குன்றனார் கூறியது கரெக்ட். யாதும் கோவிட் யாவரும் கொரோனா. கவிஞர் கண்ணதாசன் இன்று இருந்திருந்தால் ‘வூஹானில் விளையாடி, விமானத்தில் கொடி சீவி வளர்ந்த வில்லங்கமே, கோயம்பேடு ஹோல்சேல் இடம் தோன்றி, ரீடெயில் கடையெங்கும் விரிந்த தலையங்கமே’ என்று பாடியிருப்பார்!

என்ன நேர்த்திக்கடனோ நாம் மூன்று மாதமாக வயிற்றில் புளியை கரைத்துகொண்டு பயத்தில் கொரோனாவை நிரைமாத கர்ப்பிணியாய் சுமக்கிறோம். எப்பொழுது டெலிவரி ஆகும் தெரியவில்லை. கஜ கர்ப்பம்! ஒருவித கடுப்பாகி பலவித வெறுப்பாகி வரவர அநியாயத்திற்கு போர் அடிக்கிறது. இந்த கரோனா கர்மம் எப்பொழுது ஒழியும் என்று புரியவில்லை. தடுப்பூசி கண்டுபிடிக்க மினிமம் ஒன்றறை வருடம் ஆகலாமாம். இதற்கு மருந்தே கிடையாது என்கிறது இன்னொரு கூட்டம். பெரிய மனது பண்ணி கொரோனாவே காலி செய்துகொண்டு போனால் தான் உண்டு போலிருக்கிறது.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். நான் படும் ப்ரான அவஸ்தையைப் பார்த்து என் லாப்டாப் கூட என்னிடம் ’வைரஸ் அட்டாக் செய்யும் என்று எனக்கு ஆண்டி-வைரஸ் வாங்கி இன்ஸ்டால் செய்தாயே, இன்னுமா உனக்கென்று ஒரு ஆண்டி வைரஸ் மருந்து வாங்க துப்பில்லை’ என்று என் காது பட கூறுயது. வயிறு எரிகிறது. வரும் கோபத்திற்கு எந்த சைனாக்காரனாவது கையில் கிடைத்தால் அவன் மூக்கோடு முழு முகத்தையும் சப்பையாக்காமல் விடமாட்டேன். இது அவன் அனுப்பிய கொரோனா மீது சத்தியம்!

வேறு வழி ஏதும் தெரியவில்லை. கட்டிய மணைவியைப் போல் இந்த கர்மத்தோடும் பல்லைக் கடித்து சகித்துக்கொண்டு பொறுமை காக்கவேண்டும் போலிருக்கிறது. கொரோனா கவலையை துறக்க முடியவில்லை என்றால் என்ன, மறந்து தொலைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். மறப்பது நமக்கு ஒன்றும் பெரிய விஷயமில்லையே. எவ்வளவு தான் ஃபைனான்ஸ் கம்பெனி ஏமாற்றி தலையில் மிளகாய் அரைத்தாலும் அதை மறந்து அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ‘சாரதா தேவியே’ என்று அரைவேக்காடு கம்பெனிகளில் பணத்தை நாம் தொலைப்பதில்லையா. இந்த புண்ணிய பூமியை கூறு போட்டு அரசியல்வாதிகள் விற்று கூத்தடித்தாலும் அதை அடுத்த தேர்த்தலில் மறந்து இன்னார் வந்தால் தெருவில் தேனும் தினைமாவும் பெருக்கெடுத்து ஓடும் என்று ஓட்டு போடுவதில்லையா. அது போல் கரோனாவையும் மறக்க முயற்சிப்போம். முயன்றால் முடியாதது இல்லையாமே. ‘மறதி நம் தேசிய வியாதி’ என்று  அழகாய் சொல்லியிருக்கிறாரே நம் ஸ்ரீரங்கத்து தேவதை திரு சுஜாதா!

இத்தனை களோபர குழப்ப ககரோனாவை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா? பேஷாய் முடியும் என்கிறார்கள் உளவியலாளர்கள். மனித மூளை மறந்தே தீருமாம். முக்கிய மேட்டர்களை நினைவில் வைத்துக்கொள்ள மற்றதை கணகாரியமாய் மறந்துவிடுமாம். நினைவுகளை மறப்பது தற்செயலாய் நடக்கும் ஒன்றில்லையாம். மனித மூளை ஃபுல் டைம் செயலாற்றி செய்யும் விஷயமாம். ’நினைவு என்பதே மறக்க தான்’ என்கிறார் கனடா நாட்டு காக்னிடிவ் சைக்காலஜிஸ்ட் ‘ஆலிவர் ஹார்ட்’. நினைவுகளின் ந்யூரோபயாலஜியை ஆராய்ச்சி செய்யும் இவர் மனித மூளையில் நினைவுகள் சரியாய் வேலை செய்ய மறதி அவசியம் என்கிறார். நம் வயிற்றில் பால் வார்க்கும் இந்த புண்ணியவான் எங்கிருந்தாலும் நன்றாய் இருக்கட்டும்!

மறப்பது பெரிய விஷயமுமல்ல, பாவமுமல்ல. தினப்படி வாழ்வில் பல விஷயங்களை மறக்கிறோம். இதற்குக் காரணம் நம் கவனமும் ஃபோகஸும் உலகை புரிந்துகொள்ள மட்டுமே முனைகிறது. அதை ஞாபகம் வைத்துக்கொள்ள அல்ல. செயல் முக்கியம். நினைவுகள் முக்கியமல்ல. தற்சமயத்தை மட்டுமே நினைக்கிறோம். அதனால் தான் எதையோ எடுக்க ரூமுக்குள் சென்று எதை எடுக்க வந்தோம் என்பதை மறக்கிறோம். அறைக்குள் செல்வது என்ற செய்கையை சாதிக்க மனதில் நினைத்தோமே ஒழிய அதை ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைப்பதில்லை!

மறதியெல்லாம் வாழ்க்கைக்கு ஓகே. வியாபாரம் செய்யும் எனக்கு எதாவது சொல்லித் தொலையேன் என்று நீங்கள் கூறுவது கேட்கிறது. அதற்குத் தான் வருகிறேன்.

தொழில் பற்றிய கவலை இனி உங்களுக்கு வேண்டாம். உங்கள் வாடிக்கையாளர்கள் மீண்டு வருவார்கள். உங்களிடம் மீண்டும் வருவார்கள். ஆருடம் கூறவில்லை. அறிந்ததை கூறுகிறேன். ‘கொரோனா’ என்று மெக்சிகோ நாட்டு பியர். பிரசித்திப்பெற்றது. பல வருடங்களாய் உலகமெங்கும் சக்கை போடு போடும் ப்ராண்ட். அதை ஒரு வாய் குடித்தால் சொர்க்கம் தெரியுமாம். குடித்தவர் கூற கேட்டிருக்கிறேன். ஆண்டுக்கு பல மில்லியன் டாலர் வருவாய் ஈட்டி தரும் இந்த கொரோனா பியருக்கு வந்தது சனி அதன் பெயர் ரூபத்திலேயே. கரோனா பயத்தில் இனி எவன் கரோனா பியர் குடிப்பான் என்று தானே நினைக்கிறீர்கள். அதற்கு மாஸ்க் போட்டு, சானிடைசர் தேய்த்து உலகம் மொத்தமாய் சோஷியல் டிஸ்டன்சிங் செய்திருக்கும் என்று தான் நானும் நினைத்தேன்.

இல்லை. முன்பை விட இப்பொழுது தான் கொரோனா பியர் விற்பனை பிய்த்துக்கொண்டு பறக்கிறதாம். பாட்டில் பாட்டிலாய் நுரைத்துக் கொண்டு சிரிக்கிறதாம். எந்த தொண்டை குழியை கரோனா தாக்கும் என்று விஞ்ஞானிகள் பயமுறுத்தினார்களோ அந்த தொண்டைக்கு உலகெங்கும் அபிஷேக ஆராதனையே நடக்கிறதாம். ’ஒய் கொரோனா ஃபியர், வென் கொரோனா பியர் இஸ் ஹியர்’ என்று கூறாத குறை தான் போங்கள். சைனா கரோனா மெக்சிகோ கொரோனாவிடம் தோற்றுவிட்டது. ஸோ, கவலை வேண்டாம். இந்த கொரோனாவும் கடந்து போகும். உங்கள் தொழிலும் நிமிர்ந்து நிற்கும். நம்பிக்கை பெறுங்கள். இந்த சந்தோஷத்தை கடை திறந்தவுடன் கொரோனா குடித்து கொண்டாடுவோம். சியர்ஸ்!

லாக்டவுன் முடிந்து கடைகள் சைஸ் வாரியாக திறக்க துவங்கியிருக்கிறது. பழையபடி சகஜ நிலை எப்பொழுது திரும்பும் என்பது தெரியாது. பல தொழில்கள் இனி சகஜ நிலைக்கு திரும்புமா என்பதே சந்தேம் தான். வாழ்க்கையை அடக்கி வியாபாரத்தை முடக்கிய கரோனா பிசினஸ் சிலபஸ்ஸை மொத்தமாய் மாற்றியிருக்கிறது. புதிய விதிகளை புரிந்துகொண்டு தொழிலில் மாற்றங்கள் செய்பவர்கள் மட்டுமே செகண்ட் இன்னிங்க்ஸ் ஆட களத்தில் அனுமதிக்கப்படுவார்கள். அதெல்லாம் எதற்கு, பழையபடி ஷட்டரை திறந்து கல்லாவில் அமர்ந்து கரன்சியை எண்ணி ரப்பர் பாண்ட் வைத்து கட்டினால் போதும் என்று நினைப்பவர்களை பார்த்து கரோனாவே பரிதாபப்படும். விற்கும் பொருளை, செய்யும் தொழிலை, புரியும் மார்க்கெட்டிங்கை மாற்றியமைக்க வேண்டியது இனி காலத்தின் கட்டாயம்.

விற்கும் பொருள்களில் மாற்றங்கள்

கொரோனா சாஸ்வதம் அல்ல. மருத்து கண்டுபிடித்துவிடுவார்கள். அதற்காக உங்கள் பொருள்களை மீண்டும் சாஸ்வதமாய் விற்க துவங்கலாம் என்று நினைக்காதீர்கள். கொரோனா மக்களை கொஞ்ச நஞ்சம் பயமுறுத்தவில்லை. உயிரை கையில் பிடித்துகொண்டு வாங்கும் பொருள்களில் கிருமி இருக்கிறதா என்று பூதக்கண்னாடி கொண்டு பயத்தோடு பார்க்கும் அளவிற்கு பூச்சாண்டி காட்டியிருக்கிறது. வாங்கும் பொருள்கள் பாதுகாப்பானதா என்று வாடிக்கையாளர்கள் பார்க்கிறார்கள். அதனால் உங்கள் பொருள்களை கொரோனா ப்ரூஃப் ஆக்கும் வழியைத் தேடுங்கள்.

நான் விற்கும் பொருளுக்கு இதெல்லாம் சாத்தியப்படாது என்று வியாக்கியானம் பேசாதீர்கள். ’பீட்டர் இங்கிலாண்ட்’ தான் விற்கும் சட்டை துணியை துளசி மற்றும் வேப்ப இலையின் குணங்கள் கொண்டு தயாரிக்கமுடியுமா என்று பார்க்கிறது. ’டோனியர்’ தான் விற்கும் கோட் சூட்டை ஆண்டி-வைரலாக்க வழி தேடுகிறது. ‘பாட்டா’ ஆண்டி பாக்டீரியா ஷூ செய்யலாமா என்று யோசிக்கிறது. யார் கண்டது, இந்நேரம் உங்கள் போட்டியாளர்கள் தங்கள் பொருள்களை இது போல் பாதுகாப்பானதாக்கும் வழி தேடிக்கொண்டிருக்கலாம். பழையபடியே பொருளை விற்கலாம் என்றிருந்தால் உங்கள் பொருள் பழைய பேப்பர் கடையில் போடப்படும், உஷார்!

செய்யும் தொழிலில் திருத்தங்கள்

பல காலம் பார்க்காமல் இருந்து பார்க்கும் போது மனிதர்கள் முதல் மரங்கள் வரை மாறியிருப்பதைப் பார்க்கிறோம். செய்யும் தொழில் மட்டும் இதற்கு விதிவிலக்கா. தானாக மாறாவிட்டாலும் நீங்களாக மாற்றவேண்டும். மாற்ற வேண்டியிருக்கும். வந்திருப்பது கரப்பான்பூச்சி அல்ல, கரோனா. வீட்டில் முடங்கிக் கிட, தள்ளி நில், கை அலம்பு என்று ஜபர்தஸ்தாய் ஆர்டர் செய்து மக்களை மாஸ்குடன் மூளையில் மண்டியிட்டு மருந்து வரும் வழி பார்த்து மன்றாட வைத்திருக்கும் அரக்கன்!

தொழிலை பழையபடி செய்துகொண்டிருக்க முடியாது. செய்தால் தொழிலதிபர் மட்டுமல்ல அவர் செய்யும் தொழிலுக்கே மாஸ்க் அணிவிக்கப்படும். தொழிலில் என்னென்ன மாற்றம் தேவை என்பதை சல்லடை போட்டு தேடுங்கள். சேலம் நகரிலுள்ள ‘நாலெட்ஜ் பிசினஸ் ஸ்கூல்’ தங்கள் எம்பிஏ மாணவர்களுக்கு ஆன்லைன் வீடியோ வகுப்புக்கள் நடத்தும் வகையில் தங்கள் பாடம் எடுக்கும் முறைகளை மாற்றியமைத்திருக்கிறது. ஹோம் வர்க் செய்யாத மாணவர்களை ஹோமிலிருந்தே ஒர்க் செய்ய வைத்திருக்கிறது! செய்யும் தொழிலை கரோனா காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றுங்கள். வேவைப்பட்டால் பிசினஸ் மாடலை கொரோனா தாக்கத்திற்கு தகுந்த வகையில் தேற்றுங்கள். உங்கள் தொழிலின் ஆயுள் கூடும்.

புரியும் மார்க்கெட்டிங்கில் புதுமைகள்

மார்க்கெட்டிங் என்றால் விளம்பரம் என்று பலர் நினைக்கிறார்கள். அக்கிரமத்திற்கு தப்பாட்டம் இது என்று கரடியாய் கத்தினாலும் பலர் காதில் விழுவதில்லை. காதை பொத்திக்கொண்டிருந்தால் எப்படி விழும். இனியும் இப்படி இருந்தால் தொழிலை எந்த சானிடைசர் போட்டு கழுவினாலும் காப்பாற்ற முடியாது. மார்க்கெட்டிங் என்பது வாடிக்கையாளரை அறிந்து அவர் தேவையை புரிந்து அதை மற்றவர்களை காட்டிலும் பெட்டராக தீர்த்து அதை கொல்லிக்காட்டிக்கொண்டே இருக்கும் செயல்பாடுகளின் கலவை. இது கரோனா காலம், பாதி கடைகள் திறக்கவில்லை, மீதி கடைகளில் கூட்டமில்லை, இதில் எங்கிருந்து பொருளை விற்பது என்று சால்ஜாப்பு கூறினால் சப்ஜாடாய் தொழிலை மூடவேண்டியது தான். உங்கள் பொருளின் அவசியத்தை வாடிக்கையாளர் உணர என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள். நெருக்கடி காலத்தில் உங்கள் பொருளுக்கு மக்கள் முன்னுரிமை தர என்ன செய்வது என்று யோசியுங்கள்.

கரோனா வந்த பிறகு தான் பல ஆண்களுக்கு தங்கள் வீட்டில் சமையல் அறை எங்கிருக்கிறது, எப்படி இருக்கிறது என்றே தெரிந்திருக்கிறது. இன்று பலர் தாங்களே சமையல் செய்வது முதல் மணைவிக்கு உதவுவது வரை கிச்சனில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள். இதை தங்களுக்கு சாதகமாக்கும் வண்ணம் நாமக்கல் நகரைச் சேர்ந்த ‘அர்பன் ஹோம்ஸ்’ என்ற ஃபர்னிச்சர் கடை வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ஈமெயில் மூலம் வாடிக்கையாளர்களிடம் ‘இப்பொழுது புரிகிறதா உங்கள் மணைவி சாதாரண கிச்சனை கட்டிக்கொண்டு எப்படி கஷ்டப்படுகிறார் என்று. அவளுக்கு நீங்கள் தாஜ் மஹால் கட்டித்தரவேண்டாம், அட்லீஸ்ட் ஒரு அழகான மாடுலர் கிச்சன் ஆர்டர் செய்து தரலாமே. எங்களை அழையுங்கள். உங்கள் வீடு தேடி வந்து செய்து தருகிறோம்’ என்று விளம்பரப்படுத்துகிறது. என்ன அழகான ஐடியா பாருங்கள். சமையல் ரூமில் வேர்க்க விறுவிருக்க மணைவிக்கு உதவிவிட்டு வந்து அமரும் கணவன் வாட்ஸ் அப்பில் இந்த மெசேஜை படித்தால் அர்பன் ஹோம்ஸ் கடையை உடனே அழைப்பாரா மாட்டாரா. இவ்வகை மார்க்கெட்டிங் தான் இனி உங்கள் தொழிலுக்கு ஆக்சிஜன் தரும் வெண்டிலேட்டர் என்பதை உணருங்கள்!

உலகம் அழியப் போவதில்லை. ஆனால் நிறைய மாறப்போகிறது. தொழிலில் முழுமையான மாற்றம் செய்யும் முறைகளை முழு நேரம் சிந்தித்து முனையுங்கள். தொழில் தழைக்க அல்ல, பிழைக்கவே இது அவசியம். புரிந்தவர்கள் தொழிலுக்கு தடுப்பூசி தரப்படும். மாற மறுக்கும் தொழில்கள் சோஷியல் டிஸ்டன்சிங் செய்யப்படும்!

போர் அடிக்கிறது. ஒரு இருபது வருடங்கள் பின்னோக்கி சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று இருக்கிறேன். சும்மா இருந்தால் வாங்களேன்.

ரைட், 1994க்கு வந்திருக்கிறோம். ரோட்டில் கூட்டம், கார்கள், இரைச்சல், ட்ராஃபிக் இல்லை. எஸ்யூவீ கார்கள், லேப்டாப், இன்டர்னெட், செல்ஃபோன், காஃபி ஷாப், மல்டிப்ளெக்ஸ், டிடீஹெச், டியோடர்ண்ட், ஹைடெஃப்பனிஷன் டீவி, எதுவும் இல்லை. இத்தனை ஏன், ‘தி இந்து’ கூட தமிழில் இல்லை!

இவை இல்லாத வாழ்க்கை ’ஜோரா இல்லை போரா’ என்கிற விவாதத்தை பட்டிமன்ற டாபிக்காய் பாப்பையாவிடம் விட்டுவிடுவோம். நான் சொல்ல வந்தது வேறு. அன்றில்லாத புதிய பொருள் வகைகள், தொழில்கள், ப்ராண்டுகள் பிறந்திருக்கின்றன. வெற்றி பெற்றிருக்கின்றன. தொழில் வளர்ச்சி பெற, வெற்றி அடைய புதிய ஐடியாக்கள், பொருள் வகைகள் அதில் புதிய ப்ராண்டுகள் தேவை என்கிறார்கள் ‘சேன் கிம் மற்றும் ரென்னி மொவ்பர்ன்’ என்னும் நிர்வாகவியல் பேராசிரியர்கள். இவர்கள் இருவரும் கடந்த 100 வருட டேட்டாவை கொண்டு 30 பொருள் வகைககளையும் புதியதாய் பிறந்த 150 தொழில்களையும் ஆராய்ந்தனர். தங்கள் ஆராய்ச்சி முடிவுகளையும் படிப்பினைகளையும் ‘ப்ளூ ஓஷன் ஸ்ட்ரேடஜி’ (Blue Ocean Strategy) என்கிற புத்தகமாக வெளியிட்டனர்.

பிசினஸ் உலகத்தையும் அதிலுள்ள பொருள் வகைகளையும் ’சிவப்பு கடல்’, ‘நீலக் கடல்’ என்று இரண்டாகப் பிரிக்கலாம் என்கிறார்கள். சிவப்பு கடல் என்பது வெகுகாலமாக இருக்கும் பொருள் வகைகள். இதில் தான் காலகாலமாக ப்ராண்டுகள் ஒன்றை ஒன்று அடித்து, கடித்து வளர முயற்சிக்கின்றன. அந்த சண்டை பத்தாது என்று அதில் புதிய ப்ராண்டுகளும் சேர்ந்து போட்டி உக்கரமடைந்து வெட்டுக்குத்து, வீச்சரிவாள் வரை போய் ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் இந்த பொருள் வகைகளை சிவப்புக் கடல் என்றழைக்கலாம் என்கிறார்கள்.

நீலக் கடல் என்பது இதுவரை இல்லாத பொருள் வகைகள். இனிமேல் பிறக்க வேண்டிய ஐடியாக்கள். இங்கு போட்டியில்லை. சண்டையில்லை. ரத்த ஆறு ஓடுவதில்லை. அழகான, அமைதியான நீலக் கடல்கள் இவை. இது போன்ற புதிய பொருள் வகையை உருவாக்கி அதில் ப்ராண்டை அறிமுகப்படுத்தும் கம்பெனிகள் வெற்றி பெறுகின்றன. போட்டியில்லாத இந்த நீலக் கடல் அந்த ப்ராண்டிற்கே சொந்தமாகிவிடுகிறது என்கிறார்கள்.

சோப், டியட்யோடரண்ட், சமையல் எண்ணெய், ஜவுளிக்கடைகள், பல்புகள், கார்கள், பைக்குகள், மினரல் வாட்டர் என்று பல பொருள் வகைகள் சிவப்புக் கடல்களே. இந்த பொருள் வகைகளில் நுழைவது சிரமம். மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுவது அதை விட சிரமம். அதோடு ஏகப்பட்ட விற்பனை செலவுகள், விளம்பர செலவுகள். பத்தாதற்கு போட்டியாளர்களின் ‘இலவசம்’, ‘ஆடித் தள்ளுபடி’, ‘ஆஃப்பர்’ போன்ற கழுத்தறுப்பு வேறு. நித்ய கண்டம், பூரண ஆயுசுக்கு உத்திரவாதமில்லாத சிவப்பு கடலில் சிக்கி, செருப்படி பட்டு, சந்தி சிரித்து, சீரழியாமல் இருப்பதற்க்குள் போதும் போதும் என்றாகிவிடும். இதில் எங்கிருந்து வளர்வது? எப்படி முன்னேறுவது?

புதிய தொழில் துவங்க எதற்கு சிவப்பு கடலுக்குள் நுழையவேண்டும்? கேட்டு வாங்கி எதற்கு தூக்கு மாட்டிக்கொள்ள வேண்டும்? சிவப்பு கடல்களில் குதித்து, குளித்து, கரையேற முடியுமா? இந்த பொருள் வகையிலுள்ள மற்ற ப்ராண்டுகள் கடித்துக் குதறி, கும்மி அடித்து, குமுறி விடாதா?

சரி, நீலக் கடலை எங்கு தேடுவது? அது ஒன்றும் ஐந்து கண்டங்களைத் தாண்டி, ஆறாவது மலைக்கு அப்பால், ஏழாவது குகைக்குள் இருக்கும் மேட்டர் இல்லை. அது உங்கள் அருகிலேயே இருக்கிறது. நீங்கள் போட்டி போடும் பொருள் வகையிலேயே ஒளிந்திருக்கிறது. அதை கண்டுகொள்ளும் திறமை உங்களுக்கு இருந்தால் போதும்.

ஷாம்பு மார்க்கெட் ஒரு சிவப்பு கடல். அதில் ஏகத்துக்கு போட்டி. ஆனால் அதனுள் போட்டியில்லாத ‘பொடுகு ஷாம்பு’ என்னும் நீலக் கடல் இருப்பதை கவனித்து அதில் ‘ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ்’ என்னும் ப்ராண்டை அறிமுகப்படுத்தி  அதில் நம்பர் ஒன்னாய் திகழும் ‘பிஅண்டுஜி’ செய்த சாமர்த்தியம் உங்களுக்கு வேண்டும்.

சோப்பு மார்க்கெட் ஒரு சிவப்புக் கடல். அதில் ப்ராண்டுகள் போட்டியில் சிக்கித் தவிக்க அதில் போட்டியில்லாத ’ஹெர்பல் சோப்’ என்னும் நீலக் கடலை கவனித்து அதில் ‘ஹமாம்’மை அறிமுகப்படுத்தி அமர்களப்படுத்தி வரும் ‘இந்துஸ்தான் யூனிலீவரின்’ சாதுர்யம் உங்களுக்கு வேண்டும்.

சில கம்பெனிகள் மட்டுமே இது போல் மாற்றி யோசித்து நீலக் கடல்கள இனங்கண்டு புதிய பொருள் வகைகளை உருவாக்கி அதில் ப்ராண்டுகளை அறிமுகப்படுத்தி வெற்றி பெறுகின்றன என்கிறார்கள் சேன்னும் ரென்னியும். அப்படி மாற்றி யோசித்து வடிவமைக்கும் உத்தியை ‘ப்ளூ ஓஷன் ஸ்ட்ரேடஜி’ என்கிறார்கள். விற்பனையை அதிகரித்து லாபத்தை கூட்ட சிறந்த வழி போட்டி நிறைந்த சிவப்புக் கடலை விடுத்து போட்டி இல்லாத நீலக் கடலை கண்டுபிடிப்பது தான் என்கிறார்கள்.

சிவப்புக் கடலில் பத்தோடு பதினொன்றாக பரிதவிக்கவேண்டும். நீலக் கடலில் போட்டியில்லாமல் பட்டா போடமுடியும். சிவப்புக் கடலில் போட்டியாளர்களோடு சதா போரிடவேண்டும். நீலக் கடலில் போட்டியாளரே இல்லாததால் போரிடாமலே வெல்ல முடியும். சிவப்புக் கடலில்  டிமாண்டைக் கூட்ட மெனக்கெட வேண்டும். நீலக் கடலில் புதிய டிமாண்டை உருவாக்கினால் போதும்.

அதற்காக நீலக் கடலின் வெற்றி நிரந்தரம் என்று நினைக்காதீர்கள். நீலக் கடலின் அழகில் மயங்கி பலர் நுழைய முயல்வார்கள். முதலில் நுழைந்த ப்ராண்டுகள் தங்களை மேம்படுத்திக் கொண்டே இருந்து நீலக் கடலை முழுவதுமாய் ஆக்கிரமித்து அடுத்தவனை அண்டவிடாமல் செய்வது அதிமுக்கியம்.

புதிய தொழிற்நுட்பம் இருந்தால் நீலக் கடல்களை உருவாக்குவது எளிதாகும். போட்டி பிடியில் சிக்கி இருந்த செல்ஃபோன் என்னும் சிவப்புக் கடலை ஒரங்கட்டி டச் ஸ்க்ரீன் என்னும் புதிய தொழிற்நுட்பத்தால் வெற்றி பெற்றது ‘ஐஃபோன்’.

புதிய தொழிற்நுட்பம் இல்லாமலும் நீலக் கடலை கண்டுபிடிக்க முடியும். டூத்பேஸ்ட் மார்க்கெட்டில் பல ப்ராண்டுகள் பல் இளித்துக்கொண்டிருக்க அதில் ஜெல் என்னும் பொருள் வகையை உருவாக்கி அந்த நீலக் கடலில் ’க்ளோஸ் அப்’ வெற்றி பெற்றது.

பல சமயங்களில் நீலக் கடல்கள் சிவப்புக் கடல் அருகிலோ, அதற்குள்ளேயே கூட அமைந்துவிடும். சிவப்பழகு க்ரீம் மார்க்கெட் பல ப்ராண்டுகள் போட்டிப் போடும் சிவப்புக் கடல். எல்லா ப்ராண்டுகளும் பெண்களை மட்டுமே குறிவைக்கிறதே என்று மாற்றி யோசித்து ’ஃபேர் அண்டு ஹேண்ட்சம்’ என்று ஆண்களுக்கான சிவப்பழகு க்ரிமை அறிமுகப்படுத்தி சிவப்புக் கடல் உள்ளேயே ஒரு நீலக் கடலை உருவாக்கி வெற்றி பெற்றது ‘இமாமி’.

இரண்டு சிவப்புக் கடல்களை கலந்து நீலக் கடலை உருவாக்கவும் முடியும். சிலர் தலைக்கு சீயக்காய் உபயோகிப்பதையும் சிலர் ஷாம்பு உபயோகிப்பதையும் பார்த்தது ‘கவின்கேர்’. சீயக்காய் மார்கெட்டிலும் ஷாம்பு மார்க்கெட்டிலும் ஏகப்பட்ட ப்ராண்டுகள். இந்த சிவப்பு கடல்களுக்குள் எதற்கு நுழைவது என்று ’சீயக்காயின் குணநலன்களையும் ஷாம்புவின் சௌகரியத்தையும் கலந்து ’சீயக்காய் ஷாம்பு’ என்னும் புதிய பொருள் வகையை உருவாக்கி அந்த நீலக் கடலில் ’மீரா’ என்கிற ப்ராண்டை அறிமுகப்படுத்தி பெரும் வெற்றிப் பெற்றது.

சிவப்புக் கடலில் சிக்கி சங்கடப்படுவதை விட நீலக் கடலை எப்படி உருவாக்குவது, அதில் புதிய ப்ராண்டுகளை எப்படி அறிமுகப்படுத்துவது என்று சிந்தியுங்கள். நீலக் கடலை உருவாக்கி வெற்றி பெற்றிருக்கும் ‘டிஷ் டீவி’, ’ஸ்கூட்டி’, ‘எகனாமிக் டைம்ஸ்’, ‘சன் டீவி’ போன்ற ப்ராண்டுகளை பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்.

ஹலோ, இன்னமும் 1994லேயே இருந்தால் எப்படி? 2020க்கு வாருங்கள். கேன் அளவு தண்ணீரை விட்டு சேன் சொன்ன நீலக் கடலைத் தேடுங்கள். மென்னி முறிக்கும் மார்க்கெட்டை விட்டு ரென்னி சொன்ன நீலக் கடலை உருவாக்குங்கள். ஆளே இல்லாத கடை தான். அதனால் என்ன, இங்கு டீ ஆத்துங்கள்!

இந்தக் நீலக் கடலில் ஆள் கிடையாது. அரவம் கிடையாது. போட்டி கிடையாது. போர் கிடையாது. அதனால் வளர்ச்சி கிடைக்கும். வெற்றி கிடைக்கும். இங்கு தொடுவானம் கூட தொடும் தூரம் தான். கடல் ஆழம் கூட கால் கட்டை விரல் வரை தான். நீலக் கடல் உங்கள் நீச்சல் குளமாகும். அப்புறம் என்ன, அதில் ஜலக்கிரீடை தான். ஜாலி தான்!