கோரோனா கோபத்திற்கு ஆளானது மனிதர்கள் மட்டுமல்ல, மளிகைக் கடைகளும் தான். பெரிய டிபார்மெண்ட் ஸ்டோர்கள் முதல் ஆன்லைன் ப்ராண்டுகள் வரை பலவும் பாதிக்கப்பட்டிருந்தாலும் மளிகை கடைகளில் நெடி கொஞ்சம் தூக்கல் தான். அருகில் இருப்பதாலும், அடிக்கடி பார்ப்பதாலும் மளிகைக் கடைகளின் மகத்துவத்தை நாம் மறந்துவிடுகிறோம். என் வீட்டிற்கருகில் இருக்கும் அண்ணாச்சி கடையில் சோஷியல் டிஸ்டன்சிங் மெயிண்டேயின் செய்து சாமான் வாங்க நின்ற போது மனதில் எழுந்த சில எண்ணங்களை எழுதுகிறேன்!

சமீப காலமாக நாடெங்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் கொரோனாவை காட்டிலும் வேகமாக பரவி வருகிறது. போதாக்குறைக்கு அன்றாட சாமான்களை ஆன்லைனில் விற்கும் ப்ராண்டுகள் புற்றீசல் போல் பெருகி வருகிறது. இவை தவறல்ல. நாடு வளரும் போது, தங்கள் சௌகரியம் மட்டுமே மற்றவை காட்டிலும் மக்களுக்கு முக்கியமாக படும். அதனால் இவ்வகை புதுமைகளின் வளர்ச்சியை தடுக்க முடியாது. தடுக்கவும் கூடாது. மாட்டு வண்டி அசௌகரியம், காரில் செல்வதே கம்ஃபர்ட் என்று மக்கள் முதல் மளிகைகடைக்கார்கள் வரை நினைக்கும்போது மற்ற விஷயங்கள் மட்டும் மாறாமல் பழையபடியே இருக்கவேண்டும் என்று நினைத்தால் ‘இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல’ என்று கோரோனா நம் காதுபட கேட்கும்!

அப்படியென்றால் மாட்டு வண்டி போல் மளிகை கடைகளும் காணாமல் போக தான் வேண்டுமா? அவசியமில்லை. இந்நிலை மாற வாடிக்கையாளர்கள் மாறவேண்டும், மளிகை கடைகளை காப்பாற்ற அரசாங்கம் சட்டம் இயற்றவேண்டும் என்று கூறுவது தப்பாட்டம். அப்படி நடக்கப் போவதில்லை. அப்படி கூறுபவர்கள் டெய்லரிடம் சட்டை தைத்து போட்டுக்கொண்டதை மறந்து ரெடிமேட் சட்டை போடுவதை நிறுத்திவிட்டு இப்படியெல்லாம் கூறினால் தேவலை. அவர்கள் கல்யாண ப்ரோக்கர் தந்த ஃபோட்டோக்களிலிருந்து கட்டிக்கப் போகிறவளை கரெக்ட் செய்த காலத்தை துறந்து ஆன்லைனில் பெண் தேடுவதை நிறுத்தி மளிகை கடைகளுக்கு கொடி பிடிப்பது உசிதம்.

வாழ்க்கையின் சௌகரியங்களுக்கு ஒரு விலை இருக்கிறது. அதை கொடுக்க மக்கள் தயாராய் இருக்கும் போது மக்களை மாறச் சொல்வது மடத்தனம். மளிகை கடைகள் தான் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். மாற்றிகொண்டால் தான் மீண்டும் அவர்கள் கல்லா ஃபுல்லாகும்!

கொரோனா எல்லாருக்கும் உபத்திரவமாக இருந்தாலும் மளிகை கடைகளுக்கு ஒரு உபகாரத்தை செய்திருக்கின்றன. அதை மளிகைகடைக்கார்கள் உணர்வது நல்லது. பல டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் பாதி திறந்து பாதி மூடிக் கிடக்க, ஆன்லைன் கடைகள் முழுவதுமாய் முடங்கிக் கிடக்கும் இச்சமயத்தில் மளிகை கடைகள் தயவில் தான் வீடுகளில் அடுப்பெரிகிறது. அதற்காக ‘பார் எங்கள் அருமையை’ என்று மளிகை கடைகள் மார்தட்டிக்கொள்ளும் நேரமல்ல இது. கொரோனா டாடா கட்டி மலையேறி மறையும் காலம் வரை தான் இந்த நல்ல காலம் நிலைக்கும் என்பதை உணர்வது அவர்களுக்கு நல்லது. இந்த நேரம் மீண்டும் தாங்கள் தலையெடுக்க காலம் தரும் செகண்ட் சான்ஸ் என்பதை அண்ணாச்சிகள் அறிவது அவசியம்.

இதற்கு மளிகை கடைகள் மார்க்கெட்டிங் தெரிந்துகொண்டு அதோடு கொஞ்சம் தொழிற்திறனை அரவனைத்தால் தேவலை. மார்க்கெட்டிங் என்றால் என்ன? யார் வாடிக்கையாளர், அவருக்கு என்ன தேவை, அத்தேவையை மற்றவர்களை விட எப்படி சரியாக பூர்த்தி செய்வது, அப்படி பூர்த்தி செய்வதை அவர்களுக்கு எப்படி சொல்லிக்காட்டிக்கொண்டே இருப்பது. இதை மளிகைகடைகள் செயலாக்கக் கூடிய விதம் பற்றிப் பார்ப்போம்.

மளிகை கடை கஸ்டமர்கள் அதைச் சுற்றி வசிப்பவர்கள் என்பது தெரிந்ததே. ஆனால் அருகிலிருக்கும் மளிகை கடை தாண்டி எதற்கு தள்ளியிக்கும் டிபார்ட்மெட்ண்ட் ஸ்டோர் அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்கிறார்கள். இதை உணர்ந்தாலே விடை தெரியும். அதற்காக டிபார்ட்மெண்ட் ஸ்டோர் போல் தாங்களும் கடையை தூசி தட்டி, ஏசி மாட்டி, கடையை அழகாக்கவேண்டும் என்று கூறவில்லை. அப்படி செய்தாலும் தப்பில்லை. ஆனால் அது மட்டுமல்ல வாடிக்கையாளர்கள் தேவை. தங்களுக்கு தேவையான எல்லா பொருள்களும் கிடைக்கவேண்டும், அதைப் பார்த்து படித்து தேர்வு செய்யும் வசதி வேண்டும், அவசரத்திற்கு கேட்ட நேரத்தில் வீட்டிற்கே டெலிவரி செய்யவேண்டும். இவை தான் அவர்களுக்கு தேவை. இதை தான் தள்ளியிருக்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களும் ஆன்லைன் ப்ராண்டுகளும் மளிகைக் கடைகளை விட பெட்டராய் செய்கின்றன. இதைத் தான் மளிகைக்கடைக்காரர்கள் செய்யத் துவங்கவேண்டும். இவை தங்களுக்கு சாத்தியப்படாது என்று இத்தனை நாள் மளிகை கடைகாரர்கள் விட்டேத்தியாய் விட்டுவிட்டார்கள். இதை அவர்கள் ஈசியாய் சரி செய்யலாம். செய்யவேண்டும். செய்ய முடியும்!

மளிகை கடை சின்னதாய் இருந்தால் என்ன? வாடிக்கையளர் கேட்ட பொருளை, கேட்கும் நேரத்தில், கேட்டவர் வீட்டு வாசலில் டெலிவரி செய்யும் வகையில் தங்களை மாற்றிக்கொண்டால் போயிற்று. டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஆனைலன் போட்டியை விட பெட்டராய் கஸ்டமர் தேவையை பூர்த்தி செய்ய புது வழி பிறந்திருக்கிறது. எளிய முறைகள் வளர்ந்திருக்கிறது.

கஸ்டமர் கேட்கும் எல்லா பொருள்களையும் ஆறடி கடைக்குள் அண்ணாச்சிகள் அடுக்க முடியுமா? வீட்டிலிருந்தே கஸ்ட்மர்கள் ஆர்டர் செய்யும் வகையில் கடையை மாற்ற முடியுமா? வந்த ஆர்டரை வாடிக்கையாளர் வீடு தேடி கரெக்ட்டாய் டெலிவரி செய்ய முடியுமா?

பேஷாய் முடியும். அதற்கான புதிய எளிய தொழிற்நுட்பம் பிறந்திருக்கிறது. இப்படி சொல்வதால் எதோ கம்பசூத்திர மேட்டர் கூறப்போகிறேன் என்று மலைக்காதீர்கள். மளிகை கடைகளுக்கு தேவை சிம்பிள் சிஸ்டமும், அதைவிட சிம்பிளான ஆப்ஸ் (Apps) மட்டுமே. முதலில் தங்கள் கடையில் உள்ள பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய தேவையான ஆப் ஒன்றை நிறுவவேண்டும். அதை தங்கள் கஸ்டமர்களிடம்  கூறி அவர்களை டவுன்லோட் செய்யவைக்கவேண்டும். அதன் மூலம் தங்களுக்குத் தேவையான பொருள்களை படித்து, பார்த்து தேர்வு செய்ய வைக்க முடியும். அவர்கள் ஆர்டரை கடையின் பில்லிங் சாஃப்வேருடன் இணையச் செய்யவேண்டும். வந்த ஆர்டர்களை இனம்பிரித்து ஆர்டர் செய்தவர் வீட்டிற்கு சரியாக டெலிவரி செய்யும்படி டெலிவரி பாய்ஸ் வைத்திருக்கவேண்டும். அவ்வளவே!

என்ன ஈசியா இத்தனை சொல்லிவிட்டாய்? எனக்கு இத்தனை தொழிற்திறன் தெரியாது என்று அண்ணாச்சிகள் பின்வாங்கத் தேவையில்லை. வாட்ஸ் அப்பில் மெசேஜ் பார்த்து அனுப்ப தெரிந்தவர்களுக்கு இந்த ஆப்ஸை உபயோகிப்பது சுலபம்.  அநியாயத்திற்கு எளிமையான ஆப்ஸ். இதை மளிகைகடைகளுக்கென்றே பிரத்யேகமாக தயாரித்து வழங்கியிருக்கிறது ’கோஃப்ரூகல்’ என்கிற தமிழ் கம்பெனி. அந்த ஆப்ஸ்ஸை தங்கள் பில்லிங் சாஃப்ட்வேருடன் இணைத்து பிரயோகிப்பது வெகு எளிது. அது மட்டுமல்ல, இருக்கும் கஸ்ட்மர்களை தக்க வைத்துக்கொள்ளவும் புதிய கஸ்டமர்களை பெற வழி செய்யவும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், ஆன்லைன் ப்ராண்டுகளோடு கூட போட்டி போடும் வழியை காண்பிக்கும் இந்த ஆப்ஸ். ஆன்லைன் ப்ராண்டுகளாவது அடுத்த நாள் தான் டெலிவரி செய்யும். மளிகை கடைகள் அடுத்த கணமே வாடிக்கையாளர் வீடு சென்று சேர்க்க உதவும் இவை!

இதையெல்லாம் விட பெரிய விஷயம் ஒன்று உண்டு. கரோனா காலத்தில் சின்ன மளிகை கடைகளுக்கு உதவும் எண்ணத்தில் அவர்கள் வியாபாரத்தை விருத்தி செய்து வளர்க்கும் விதமாக அடுத்த ஆறு மாதத்திற்கு இந்த ஆப்ஸை கடைகளுக்கு இலவசமாக வழங்குகிறது கோஃப்ரூகல். வாய்ப்பு வாசல் கதவை தட்டும் போது திறக்கவேண்டும் என்பார்கள். இந்த வாய்ப்பு கதவை தட்டாமல் தேடி வந்து மடியில் அமர்கிறது. இதை கொஞ்சி குலாவ வேண்டியது தான் பாக்கி!

கொஞ்சம் மார்க்கெட்டிங், கொஞ்சம் தொழிற்நுட்பம். சேர்த்தால் போதும். பார்த்து வளர்ந்த மளிகை கடைகள் மீண்டும் மலரத் துவங்கும். பிறந்தது முதல் நம்மோடு அன்னியோன்யமாக பழகி வரும் அண்ணாச்சி கடைகள் அமேஸான் ஆகும்!

அறுபதுகளில் வெளிவந்த ’பட்டணத்தில் பூதம்’ என்கிற படத்தில் ஒரு சீன். தமிழ் திரைத்துறையின் தன்னிகரகற்ற நகைச்சுவை நாயகன் நாகேஷ் நடிகை ரமாபிரபாவுடன் பேசிக்கொண்டிருப்பார். அப்பொழுது பேச்சு நாய்களைப் பற்றி திரும்பும்.

ரமாபிரபா கூறுவார்: ‘நான் கூட நாய் வளர்தேன்யா. அதுக்கு சீசர்ன்னு பேர் வைச்சேன். ஆனா ஒரு வாரத்திலேயே செத்துப் போச்சு.’

நாகேஷ் தனக்கே உரிய டைமிங்குடன் படாரென்று பதில் சொல்வார்: ‘பேரு வெச்சியே, சோறு வெச்சியா!’

அதை நாகேஷ் ரமாபிரபாவிற்கு மட்டும் சொல்லவில்லை. ப்ராண்ட் என்றால் ஒரு பொருளுக்கு பெயர் வைப்பது மட்டுமே என்று நினைக்கும் அத்தனை மார்கெட்டர்களுக்கும் சொல்லியிருக்கிறார். நீங்கள் அந்த ரகத்தை சேர்ந்தவர் என்றால் அவசியம் இந்த கட்டுரையை படிக்கவேண்டியவர் ஆகிறீர்கள்.

ப்ராண்ட் என்றால் என்ன? நாம் விற்கும் பொருளா? இருக்கலாம். இல்லாமலும் போகலாம். ஒரு பொருளுக்கு வெறும் பெயர் வைத்தால் மட்டுமே அது ப்ராண்ட் ஆவதில்லை. வெறும் பெயர் வைப்பதல்ல ப்ராண்ட்.

ப்ராண்ட் என்பது அந்த பொருளுக்கு பொசிஷனிங் செய்வது; அதற்கான பயன்களை உறுதியாக அறுதியிடுவது; அதை அதே பொருள் வகையில் உள்ள மற்ற பொருட்களிலுருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுவது; அதில் வெற்றி பெறுவது.

நாகேஷ் சொன்னது போல் ‘வெறும் பேரு வைப்பது அல்ல, சோறு வைப்பது’!

ப்ராண்ட் என்பது ஒரு மார்கெட்டரின் பொருளையோ சேவையையோ இனங்கண்டு கொள்ளச் செய்து அப்பொருளையோ சேவையையோ மற்ற போட்டியாளர்களிடமிருந்து தனித்துப், பிரித்துக் காட்ட உதவும் பெயரோ, குறியீடோ, சின்னமோ, வடிவமைப்போ அல்லது இவற்றின் கலவையோ ஆகும் என்று அமெரிக்க மார்க்கெட்டிங் அசோசியேஷன் என்னும் அமைப்பு கூறுகிறது,

அப்படி பார்க்கும் போது ப்ராண்ட் என்பது வெறும் பொருள் அல்ல என்பது விளங்கும். பொருள் என்பது ஒரு வகையைக் குறிக்கும் சொல். அவ்வளவே. ப்ராண்ட் என்பது நல்ல பொசிஷனிங் அமையப் பெற்று தனித்துவம் வாய்ந்து இருப்பது. பொருளோ, சேவையோ, அனுபவமோ எதுவாய் இருந்தாலும் ப்ராண்ட் செய்யப்படலாம். செய்யப்படவேண்டும். செய்யவில்லை என்றால் அதற்கு செய்வினை செய்தது போல் செத்துக் போகும்!

டியோரண்ட் என்பது பொருள். ’ஏக்ஸ்’ என்பது ப்ராண்ட்.

ஆயுல் காப்பீடு என்பது சேவை. ‘எல்ஐசி’ என்பது ப்ராண்ட்.

20-20 கிரிக்கெட் ஆட்டம் என்பது பொருள். ’ஐபிஎல்’ என்பது ப்ராண்ட்.

கோயில் என்பது இடம். ’மயிலை கபாலீஸ்வரர் கோயில்’ என்பது ப்ராண்ட்.

ஆக, விற்கக்கூடிய எதையுமே ப்ராண்ட் செய்யலாம். செய்யவேண்டும். மாட்டுத் தீவனம் முதல் மைசூர்பாக்கு வரை, டியோடரண்ட் முதல் டிடெர்ஜண்ட், துணிக்கடை முதல் நகைக்கடை வரை விற்கக்கூடிய எதையும் ப்ராண்ட் செய்யலாம். செய்தே ஆக வேண்டும். சிறப்பாய் செய்யவேண்டும். செய்தால் தான் விற்கவே முடியும்.

ப்ராண்ட் என்றால் நன்றாகப் பொசிஷனிங் அமையப் பெற்று தனித்துவம் வாய்ந்து இருப்பது என்று பார்த்தோமே. அந்த பொசிஷனிங் என்றால் என்ன என்று இப்பொழுது பார்ப்போம்.

பொசிஷனிங் என்பது ஒரு பொருளைப் பற்றிய அழுத்தமான, ஆணித்தரமான, அட்டகாசமான ஓரு அர்த்தத்தை நிர்ணயிப்பது. அதை வாடிக்கையாளரை அறிய வைப்பது. அதை அவருக்கு தெளிவாய் புரிய வைப்பது. அவர் மனதில் ஆழமாய் பதிய வைப்பது. அதன் மூலம் அவரை நம் ப்ராண்டை வாங்கவைப்பது.

‘பூஸ்ட்’ என்றால் ’சக்தி’.

‘டெட்டால்’ என்றால் ‘பாதுகாப்பு’.

’கல்யாண் ஜுவல்லர்ஸ்’ என்றால் ‘நம்பிக்கை’.

’ரஜினிகாந்த்’ என்றால் ‘ஸ்டைல்’.

ஒரு பொருளைப் ப்ராண்ட் ஆக்கி அந்த ப்ராண்டை வாடிக்கையாளர் மனதில் பசுமரத்தாணிபோல் பதியச் செய்யத் தேவை பொசிஷனிங். பொசிஷனிங் இல்லையேல் ப்ராண்ட் இல்லை. ப்ராண்ட் இல்லையேல் உங்களுக்கு வெற்றி இல்லை.

பொசிஷனிங் சரியாக செய்துவிட்டீர்கள் என்றால் உங்கள் ப்ராண்ட் தனியாகத் தெரியும். தனித்துவமாய் தெரியும். வாடிக்கையாளர் கேட்டு வந்து வாங்குவார். கடையில் உங்கள் ப்ராண்ட் இல்லை என்றால் அடுத்த கடைக்குத் தேடிச் சென்றாவது வாங்குவார்.

ப்ராண்டாய் விற்காமல் சும்மாவேனும் வெறும் ஒரு பெயர் மட்டும் வைத்து விற்க முயன்றீர்கள் என்றால் பத்தோடு பதினொன்று, அத்தோடு இது ஒன்று என்பது போல் தான் ஆகும். மற்ற பொருட்களோடு சேர்ந்து கும்பளோடு கோவிந்தா போடவேண்டியது தான்.

அதே போல், தனித்துவமாய் பொசிஷனிங் செய்து தரமாய் ப்ராண்டிங் செய்யாமல் ஏதோ ஓரப்பாயில் ஒண்ணுக்கு போனது போல் வெறும் பெயர் வைத்து வெற்றுக்காவது ஏதாவது சொல்லி விற்க முயன்றால் உங்கள் ப்ராண்டிற்கு தோல்வி காரண்டி. அது தான் நாம் முன்னே பார்த்தது போல் ப்ராண்டே இல்லையே, அப்புறம் எங்கிருந்து விற்பது!

ஏதோ ஒரு பொருளைச் செய்தோம், அதற்கு பெயர் வைத்தோம், லேபிள் ஒட்டினோம், விளம்பரம் செய்தோம் என்றில்லாமல் ஒரு பொருளை ப்ராண்டாக்க என்னென்ன தேவையோ அதை முழுமையாய் ஆராய்ந்து, முழு முயற்சியுடன் செய்து, மூழ்கி முத்தெடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்; கட்த்ரோட் போட்டி நிறைந்த இந்த மார்க்கெட் யுகத்தில்.

பெற்றால் மட்டும் போதுமா? இது பழைய தமிழ் பட டைட்டில் மட்டும் இல்லை. ஒவ்வொரு மார்கெட்டரையும் கேட்க வேண்டிய கேள்வி. ஒவ்வொரு மார்கெட்டரும் தங்களை தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.

சுருங்க சொன்னால், ப்ராண்ட் என்னும் குழந்தையை பெற்றடுத்து அதை ஒரு அம்மாவின் ஸ்தானத்தில் இருந்து வளர்க்கும் பொறுப்பு மார்க்கெட்டருடையது.  பாலூற்றி, பாராட்டி, பழம் கொடுத்து, பத்திரமாய் பராமரித்து, பாதுகாப்பது தான் ப்ராண்டிங். அதை திறம்பட செய்பவரே மார்க்கெட்டர்.

’எங்காத்துக்காரரும் கச்சேரிக்கு போறார்’ என்பது போல் அல்ல ப்ராண்டும் ப்ராண்டிங்கும். ஒரு பொருள் வகையில் புகுந்து அதன் உச்சத்திற்கு சென்று அந்த பொருள் வகையையே தனதாக்கிக் கொள்வது தான் ப்ராண்ட். அதற்குரிய அனைத்து செயல்களையும் செம்மையாய் செய்வதற்கு பெயர் தான் ப்ராண்டிங். அனைத்தயும் செவ்வனே செய்து, பக்குவமாய் பராமரித்து,  பேனிப் பாதுகாப்பவரே மார்கெட்டர்!

மார்க்கெட்டரின் அறிவுக்கும், திறமைக்கும் சான்று தான் அவர் பதிப்பித்து, பராமரித்து, பாதுகாத்து வரும் ப்ராண்ட். இன்னும் சொல்லப்போனால் மார்க்கெட்டிங்கின் குறிக்கோளே கலக்கலான, காலகாலத்துக்கும் நிலைத்து நிற்கக்கூடிய ப்ராண்டுகளை உருவக்குவது தான். மார்க்கெட்டரின் வெற்றியை நிர்ணயிப்பதும் ப்ராண்ட் தான்.

ஆயிரெத்தெட்டு ப்ராண்டுகள் நிறைந்த அல்லோலப் படும் அவசர மார்க்கெட்டிங் உலகில் வாழ்கிறோம். எந்த பொருளை விற்க முனைந்தாலும் அது அழகாய் பொசிஷனிங் செய்யப்படவேண்டும். அப்பொழுது தான் அது ப்ராண்டாய் வாடிக்கையாளர் கண்ணிற்கு தெரியும். அதை வாங்கவேண்டும் என்று அவர் மனதிற்கு புரியும்.

ஆவின் பால் முதல் அமலா பால் வரை விதிவிலக்கில்லா ப்ராண்டிங் உண்மை இது!

’இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது’ என்ற பராசக்தி வசனம் போல் தொழில் உலகம் பல விசித்திரமான விஷயங்களை சந்தித்திருக்கிறது. எல்லா தொழில்களையும் அரசாங்கம் தான் நடத்தித் தொலைக்கவேண்டும் என்ற காலம் மாறி வெளிநாட்டு கம்பெனிகள் கூட இங்கு தாராளமாய் கடை திறக்கலாம் என்பது வரை, தொழில் துவங்க ஒன்பதாயிரம் சட்டதிட்டங்கள் இருந்த கெடுபிடி முதல் ‘சிங்கிள் விண்டோ க்ளியரன்ஸ்’ வசதி தருகிறோம் என்று மாநில அரசாங்கங்களின் அழைப்பு வரை நம் நாட்டு தொழிலில் தான் எத்தனை மாற்றங்கள்.

அனைத்தையும் மீறி ஒரு விஷயம் மாறாதிருக்கிறது என்றால் அது நம் நாட்டில் நிலவி வரும் ’குடும்ப தொழில்’ கோட்பாடு தான். அப்பா திறந்த கடையை இன்று அவரோடு  சேர்ந்து மகன் நடத்த மூன்றாம் தலைமுறை பேரன் எம்.பி.எ படித்து ஃபாஸாகி வந்த கையோடு அவனுக்கும் கல்லா அருகில் புது சேர் போடப்பட்டுவிட்டது.

இது ஏதோ தமிழ் கூற் நல்லுலகத்தில் மட்டும் நடந்தேறும் கதையல்ல. நாடெங்கும் இதே குடும்ப கதை தான். இந்தியாவில் உள்ள டாப் இருபது தொழில் குழுமங்களில் பதினைந்து இது போன்ற குடும்ப தொழில்களே என்று புள்ளி விவரம் கூறுகிறது. இந்த நாட்டிலுள்ள தொழில்களில் 80% தொழில்களை குடும்பங்கள் தான் நடத்துகின்றன என்கிறது இன்னொரு ரிப்போர்ட். பலசரக்கு கடை முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை பெரும்பாலான தொழில்களை குடும்பங்களே நிர்வாகம் செய்கின்றன.

இது தவறில்லை. விதை விதைத்தவன் விவசாயம் செய்யலாம் தான். ஆனால், இன்று பல குடும்பங்கள் அடித்துக்கொண்டும், அறுத்துக்கொண்டும் கோர்ட், கொலைவெறி என்று திரிவதால் தான் பிரச்சனை உருவாகிறது. அவர்கள் குடும்பங்களில் மட்டுமல்ல. அவர்கள் நடத்தும் தொழிலிலும்.

அது என்னவோ தெரியல என்ன மாயமோ புரியல, பெரும்பாலும் குடும்ப தொழில்கள் மூன்றாவது தலைமுறை தாண்டுவதில்லை. அபிராமி அபிராமி என்று ஆராதிக்காமல் ’அடிடா அவனை’ என்று அடித்துக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். ’பிர்லா’ குடும்பம் முதல் ‘பஜாஜ்’ குடும்பம் வரை இதே சோக கதை தான். அம்பானி குடும்பம் அனைவரையும் விட பெரியதல்லவா. அதனால் இரண்டாவது தலைமுறையிலேயே சட்டையைப் பிடித்துக்கொண்டு நின்றனர்!

குடும்பம் பிரிந்தால் உறவுகள் பிரியும். அது வீட்டுப் பிரச்சனை. அவ்வளவே. அதே குடும்பம் ஒரு கம்பெனியை நிர்வகிக்கும் போது வீட்டோடு தொழிலையும் பாதிக்கிறது. கம்பெனியில் பணிபுரிபவர் பிரச்சனையாகிறது. சமூகத்தின் பிரச்சனையாகிறது. நாட்டின் பிரச்சனையாகிறது.

அதற்காக எல்லா குடும்பங்களும் கழுத்து மென்னியை பிடித்துக்கொண்டு நிற்கும் ரகமல்ல. ஜெர்மனியைச் சேர்ந்த ’மெர்க்’ என்ற கம்பெனி 1668ல் குடும்பத் தொழிலாய் பிறந்து இன்று வரை ஜர்க் இல்லாமல் ஸ்மூத்தாய் பயனிக்கிறது. இந்தியாவில் கூட 1897ல் ஆரம்பித்த ’காட்ரேஜ்’ அவர்கள் பீரோவைப் போல் இன்றும் ஸ்ட்ராங்காகவே சௌக்கியமாக இருக்கிறது. நம்மூரைச் சேர்ந்த ’முருகப்பா க்ரூப்’ முருகன் அருளால் நூறு வருடங்களாக முன்னனியில் நின்று முன்னேறி வருகிறது.

இந்தியாவில் குடும்ப தொழில்கள் கண்டிப்பாய் தழைக்கும் என்று கூறும் சிலர் தொழில் வளர்ச்சிக்கு குடும்பங்களின் பங்களிப்பு அவசியமானது என்கின்றனர். தெரிந்த தொழிலை அடுத்த தலைமுறைக்கு கற்றுத் தந்து வழி நடத்திச் செல்லவும் பொருளும் பணமும் குறையாமல் தொழில் தழைக்கவும் குடும்பங்களின் பங்களிப்பு முக்கியமானது. அதுவும் பெரிய அளவு ஃபினான்ஷியல் வல்லமை பெறாத இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குடும்ப தொழில்களே பிரதானம் என்கின்றனர்.

இப்படி கூறுவதை எதிர்க்கும் கூட்டமும் உண்டு. மாறி வரும் உலகில், நாளொரு தொழிற்நுட்பமும் பொழுதொரு புதிய ப்ராண்டும் பிறக்கும் இன்றைய காம்பெடிடிவ் கால கட்டத்தில் குடும்பங்கள் கையில் பிசினஸ் என்பது எதன் கையிலோ தரப்பட்ட பூமாலை; பூட்டா கேஸ் என்று கூறுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

இவர்கள் அடித்துக்கொண்டு கிடக்கட்டும். நீங்கள் குடும்ப தொழில் நடத்துகிறீர்களா? சண்டை சச்சரவு இல்லாமல் சாத்வீகமாய் கூட்டு வியாபாரம் செய்து சக்சஸை குடும்பத்தோடு சந்தோஷமாக கொண்டாடவேண்டும் என்று ஆசைப்படுபவரா? இதோ உங்களுக்கான சில டிப்ஸ். குடும்பத்தோடு சேர்ந்து படியுங்கள்!

பேசித் தீருங்கள். தீர்த்துவிட்டு பேசாதீர்கள்!

பேசித் தீர்க்க முடியாத பிரச்சனை ஏதுமில்லை. குடும்ப தொழிலை நிர்வகிப்பவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசினாலே பாதி பிரச்சனைகள் தோன்றாது. சின்ன மனஸ்தாபங்களை கூட முடிவெடுக்காமல் விடுவதில்லை என்று வைராக்கியத்துடன் கூடிப் பேசுங்கள். பேசும் போது உங்கள் அனைவரையும் முறைப்படுத்த பட்டிமன்ற நடுவர் போல் ஒரு ஆலோசகரை அமர்த்திக்கொண்டாலும் தப்பில்லை.

தமிழகமெங்கும் கடை திறந்து விரிந்து வெற்றிப் பெற்றிருக்கும் மதுரையைச் சேர்ந்த ‘தங்கமயில் ஜுவல்லரி’ கட்டுக்கோப்பான ஒரு குடும்பத் தொழிலாகவே இன்றும் திகழ்கிறது. சிறிய கடையாய் துவங்கிய சகோதரர்கள் வளர்ந்து விரிந்தாலும் இன்று வரை தங்கள் குடும்பங்களோடு சேர்ந்து மாதம் ஒரு முறை மனம் விட்டு அனைத்து விஷயங்களையும் பேசுகிறார்கள். பேசுவதென்றால், ஆபீஸ் போகும் வழியில் அரக்க பரக்க காபி உறிஞ்சிக்கொண்டே அவசரத்தில் பேசுவதல்ல. ஆர அமர அனைவரும் முறையாக அமர்ந்து ஆன்மீக மீட்டிங் போல் அமைதியாக பேசுகிறார்கள். பேசுவதோடு நில்லாமல் என்ன பேசப்பட்டது, என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்ற மீட்டிங் மினிட்ஸ் எடுத்து எழுத்து பூர்வமாக அனைவருக்கும் தருகிறார்கள்.

ஒளிவுமறைவு இல்லாத பேச்சு பரிவர்த்தனையே தங்கள் வெற்றி ரகசியம்  என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அதோடு குடும்பத்தின் பிணைப்பு தான் தங்கள் தொழிலின் அஸ்திவாரம் என உணர்ந்து செயல்படுகிறார்கள். அதானாலேயே குடும்பத்தோடு தங்கள் தொழிலையும் தழைக்க வைக்க முடிகிறது இந்த கூட்டு குடும்பத்தால்.

மகள்களையும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்

பல குடும்ப தொழில்களில் மகள்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இது என்ன கன்றாவி? கேட்டால், இன்னொரு வீட்டிற்கு செல்லவேண்டியவள் தானே என்று பதில் வருகிறது. பிறகு ஏன் பெற்றீர்கள்? கைவசம் கல்லிப் பால் கிடைக்கவில்லையா? பெற்ற மகள் தானே. உங்கள் ரத்தம் தானே. உங்கள் திறமை அவளுக்கும் இருக்குமே. சொல்லப் போனால் பல தொழில்களில் மகன்களை விட மகள்கள் இன்னமும் கூட திறமையாக நடத்துவார்கள். அவர்களையும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இந்திரா நூயி என்ற சென்னையை சேர்ந்த பெண்ணால் ’பெப்சிகோ’ நிறுவன சியிஓவாக உலகெங்கும் வெற்றிகரமாக வலம் வர முடியுமென்றால் உங்கள் மகளால் முடியாதா என்ன. ‘காட்ரெஜ்’ கம்பெனியை இன்று வெற்றிகரமாக வழி நடத்திச் செல்வது அக்குடும்பத்தின் மகள்கள் தானே. நம்மூரிலேயே ‘டஃபே’ கம்பெனியை திருமதி மல்லிகா ஸ்ரீனிவாசன் திறம்பட நடத்தி வரவில்லையா?

வீடு வரை உறவு. ஆபீஸ் வரை அல்ல.

குடும்பத் தொழில் நசிய ஒரு முக்கிய காரணம் ப்ரஃபஷனலிஸம் இல்லாத நிர்வாகம். ஆசைக்கு பிறந்த பிள்ளையை ஆபீசில் சேர்க்கவேண்டும் என்ற அவசியமில்லை. காதல் மணைவியை கட்டிய பாவத்திற்கு அவள் உடம்பிறப்பை உங்களோடு பணியில் சேர்க்கவேண்டிய கட்டாயமில்லை. கொடுக்கும் வேலையை செய்து முடிக்கும் திறமை இருக்கிறதா என்று பாருங்கள். ஓனர்ஷிப் வேறு, நிர்வாகம் வேறு. இது இரண்டையும் போட்டு சேர்த்துக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

நிர்வாகங்களுக்கு தேவை ப்ர்ஃபஷனலிஸம். விருப்பு வெறுப்பில்லாமல் கம்பெனி நிர்வாகத்திற்கு யார் பொருத்தமானவரோ அவரை நியமித்து, நிர்வாகத்திற்கு எது தேவையோ அதை செய்வது தான் ப்ரஃபஷனலிஸம்.

பொறுப்பை ஒருவருக்கு கொடுத்த பின் அவர் உங்கள் மகனே ஆனாலும் அவர் வேலையில் குறிக்கிடாதீர்கள். அவருக்கு கீழ் உள்ளவர்களை அழைத்து விசாரிப்பது, அவர்களுக்கு உத்தரவுகள் போடுவது என்பது தப்பாட்டம். கிரிக்கெட் மாட்சில் ஆளாளுக்கு அவரவர் இஷ்டப்படி ஃபீல்டிங் அமைத்தால் எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

குழந்தைகளுக்கு வெளி உலகை காட்டுங்கள்

படிப்பு முடித்த கையோடு பிள்ளைகள் நேராக கடை சாவியை வாங்கவேண்டும் என்று தான் பல தொழிலதிபர்கள் நினைக்கின்றனர். முடிந்தவரை அப்படி செய்யாதீர்கள். பிள்ளைகளை அவர்கள் படிப்பிற்கேற்ப, உங்கள் தொழிலிற்கேற்ப வெளி கம்பெனிகளில் சில காலம் பணி புரிந்து அனுபவம் பெற்று வர செய்யுங்கள்.

புதிய கம்பெனி, புதிய சூழல், புதிய உலகை உங்கள் பிள்ளைகள் சுவாசிக்கட்டும். புதிய படிப்பினைகள் பெறட்டும். புதிய சிந்தனைகள் ஊறட்டும். அதை கற்று வந்து உங்கள் தொழிலில் அதை பயன்படுத்தினால் உங்கள் தொழில் இன்னமும் வேகம் பிடிக்கும். காலகாலம் தழைக்கும்.

ஃபெயில் ஆகாமலிருக்க உயில் எழுதுங்கள்

Succession planning என்று ஒன்று இருப்பதே பல தொழிலதிபர்களுக்கு தெரியமாட்டேன் என்கிறது. நாம் யாரும் சாஸ்வதம் கிடையாது. இது தெரிந்தும் அடுத்து யார், எப்படி பிரிப்பது, தொழிலை எப்படி நடத்துவது என்பதையெல்லாம் தெளிவாக எழுதி வைத்துவிட்டு இரவு படுக்க போவது உசிதம். இல்லையென்றால் அடுத்த தலைமுறை அடித்துக்கொண்டு தான் நிற்கும். அரசியல் கட்சிகள் முதல் அம்பானி குடும்பம் வரை இந்த கன்றாவி காட்சி தருவதை பார்த்தும் பலர் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்!

இருக்கும் போதே அடுத்த தலைமுறைக்கு வழி விட்டு அவர்களை வழிநடத்திச் சென்றால் இந்த பிரச்சனை வராது. அடுத்த தலைமுறையில் யார் எந்த பொறுப்புக்கு சிறந்தவர் என்று கண்டறிந்து அவரை அந்த பொறுப்புக்கு க்ரூம் செய்து வளர்ப்பது குடும்பமும் தொழிலும் சேர்ந்து தழைக்க உதவும்.  

தலைமுறை இடைவெளிக்கு இடம் கொடுங்கள்

உங்களுக்கு தியாகராஜ பாகவதர் பாடல் பிடிக்குமென்றால் ஆபிசில் அனைவருக்கும் போட்டுக் காட்டாதீர்கள். நீங்கள் இன்னமும் டைப்ரைட்டரை கட்டிக்கொண்டு அழுகிறீர்கள் என்பதற்காக கம்பெனிக்கு புதிய ரக கம்ப்யூட்டரையும் புதுமையான சாஃப்ட்வேரையும் வாங்கித் தரமாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்யாதீர்கள். புதிய உலகம், புதிய வாடிக்கையாளர்கள் நிறைந்த உலகம் இது. புதுமையான சிந்தனைகள் தேவை. பழையதை கட்டிக்கொண்டு பஞ்சாங்கமாய் பணி புரியாதீர்கள். அதே போல் பேரன்களும் பெரியவர்களை ‘யோவ் பெரிசு சும்மா கிட’ என்று ஒதுக்காமல் மூத்தவர்களின் அனுபவத்தை கேட்டுப் பெறுங்கள்.

அழகான கூட்டுக் குடும்பங்கள் ந்யூக்கிளியர் குடும்பங்களாக தேய்ந்து வரும் காலம் இது. கூட்டுத் தொழில்களும் காலப்போக்கில் தேய்ந்து அவ்வழியே செல்லவேண்டிய அவசியமில்லை. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. வாழ்க்கையில் மட்டுமல்ல. வியாபாரத்திலும் கூட.

சென்ற போஸ்ட் விட்ட இடத்திலிருந்து துவங்குகிறேன். அதனால் இது மெகா சீரியல் என்று நினைக்காதீர்கள். மகா முக்கிய மார்க்கெட்டிங் மேட்டர். விற்கும் பொருளை போட்டியாளர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தினால் மட்டுமே அது ப்ராண்ட் என்னும் அந்தஸ்த்தைப் பெறுகிறது. மார்க்கெட்டில் விற்கவும் முடிகிறது என்பதை படம் வரைந்து பாகங்கள் குறிப்பிட்டு போன இதழில் பார்த்தோம்.

ஒரு பொருள் பிரிவில் உள்ள அனைத்து பொருள்களும் வித்தியாசமின்றி ஒன்றையே சொல்வதாலும், ஒன்று போலவே இருப்பதாலும் தான் விலை குறைப்பு, தள்ளுபடி, கடைக்காரர் தயவு, விற்பனை குறைவு என்று அவதிப்பட வேண்டியிருக்கிறது. வித்தியாசமில்லாமல் விற்கும் பொருள்கள் கமாடிடி (Commodity) என்ற கன்றாவியாகத் தான் விற்கவேண்டியிருக்கும். அதாவது ப்ராண்ட் பெயரை கேட்காமல் வாங்கும் பொருளை கேட்டு வாங்குவது.

உங்கள் வண்டிக்கு எங்கு பெட்ரோல் போடுகிறீர்கள்?

பெட்ரோல் பங்கில் என்று சொல்லாதீர்கள். எந்த ப்ராண்ட் பெட்ரோல் என்று கேட்டேன்.

பெட்ரோல் பங்கில் போடுகிறேன். எந்த பங்க் என்றா பார்த்துக்கொண்டிருக்க முடியும் என்பீர்கள்.  ஆனால் காலை ந்யூஸ்பேப்பர் படிக்கிறீர்கள் என்று கேட்டால் ஏதோ ஒரு பேப்பர் வாங்கி படிக்கிறேன். எந்த பேப்பர் என்றா பார்த்துக்கொண்டிருக்க முடியும் என்று நீங்கள் கூறுவதில்லை. உங்களுக்கு பிடித்த ஒரு குறிப்பிட்ட ப்ராண்ட் பேப்பரை கேட்டு வாங்குகிறீர்கள். எல்லா பேப்பரிலும அதே செய்தி என்றாலும் பிரத்யேகமாய்  ஒரு பேப்பர் வாங்குகிறீர்கள். புரிகிறதோ இல்லையோ அதையே படிக்கிறீர்கள்.

இதே போல் தான் நீங்கள் வாங்கும் வாங்கும் எல்லா பொருள் பிரிவுகளிலும். உங்கள் தேவை என்னவோ அதை பூர்த்தி செய்யும் ப்ராண்டை கேட்டு வாங்குகிறீர்கள். உங்கள் ப்ராண்ட் கடையில் இல்லையென்றால் அடுத்த கடைக்கு செல்கிறீர்கள்.

பெயர் கேட்டு வாங்கினால் தான் ப்ராண்ட். பெயர் கேட்டு வாங்காத பொருள்கள் கமாடிடிகள். செங்கல், வத்திப்பெட்டி, மினரல் வாட்டர் போன்ற பொருள் பிரிவுகளில் இந்த கன்றாவியை பார்க்கலாம். ‘வத்திப்பெட்டி தாப்பா’ என்று தான் கேட்பீர்கள். கடைக்காரர் எந்த வத்திப்பெட்டி தருகிறார் என்று கூட பார்ப்பதில்லை.

வாடிக்கையாளர் தேவையறிந்து பூர்த்தி செய்வதால் தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டினால் தான் அது ப்ராண்ட். அப்பொழுது தான் அது வாடிக்கையாளரால் கேட்டு வாங்கப்படுகிறது. நீங்கள் கேட்கும் விலையில் வாங்கப்படுகிறது!

விற்கும் எந்தப் பொருளையும் வித்தியாசப்படுத்தி விற்க வேண்டும். விற்க முடியும். வெற்றி பெற்ற ப்ராண்டுகள் இதை தான் திறம்படச் செய்கின்றன. நீங்கள் எந்த பிசினஸ் செய்தாலும் விதிவிலக்கில்லாத விதி இது. ’போஷாக்கு தருகிறேன்’ என்று தன்னை வித்தியாசப்படுத்துகிறது ‘ஹார்லிக்ஸ்’. குறைவான விலை என்று தன்னை வித்தியாசப்படுத்துகிறது ’சரவணா ஸ்டோர்ஸ்’. போட்டி நிகழ்ச்சிகள் மூலம் தன்னை வித்தியாசப்படுத்துகிறது ‘விஜய் டீவி’.

எல்லா பொருள்களையும் வித்தியாசப்படுத்த முடியும், வித்தியாசப்படுத்த வேண்டும் என்கிறார் ‘தியோடர் லெவிட்’. இவர் ‘ஹாவர்ட் பல்கலைக்கழக’த்தில் மார்க்கெட்டிங் பேராசிரியாராக இருந்தவர். ‘ஹாவர்ட் பிசினஸ் ரெவ்யூ’ என்னும் ஜர்னலிலின் ஆசிரியாரகவும் பணி புரிந்தவர். பொருள்களை வித்தியாசப்படுத்தும் எளிய அனுகுமுறையை அளித்துவிட்டு போயிருக்கிறார் இந்த மார்க்கெட்டிங் ஜாம்பவான்.

பொருள் என்பதால் இவர் சொன்னது நாம் வாங்கும் தினப்படி சாமான்களுக்கு மட்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் விற்கும் பொருள் எதுவாயினும் – அது சட்டத்திற்கு உட்பட்டதாக இருப்பின் – இவர் கூறியது பொருந்தும். இன்னும் சொல்லப் போனால் நீங்கள் விற்பது சட்டத்திற்கு புறம்பானதாக இருந்தாலும் பொருந்தும்!

எந்த பொருளிலும் நான்கு டைமென்ஷன்கள் உண்டு என்கிறார் லெவிட். ஒவ்வொரு லெவலாக பிரித்துப் பார்த்து ஆய்வு செய்தால் பொருளை வித்தியாசப்படுத்தும் வழி  புலப்படும் என்பதே இவர் வாதம். பொருளில் உள்ள நான்கு டைமென்ஷன்களையும் அதன் மூலம் வித்தியாசப்படுத்தும் வழிகளையும் பார்ப்போம்.

ஜெனரிக் பொருள் (Generic Product)

எப்பொருளுக்கும் அடிப்படை பயன்கள் உண்டு. இது பொருளின் முதல் டைமென்ஷன். இதை ஜெனரிக் ப்ராடக்ட் என்கிறார் லெவிட். மினரல் வாட்டர் தரும் அடிப்படை பயன் நம் தாகத்தை தணிப்பது. இந்த டைமென்ஷனில் எல்லா மினரல் வாட்டர்களும் ஒன்று போல தெரியும். ஆனால் ஆழமாக தேடினால் வித்தியாசப்படுத்தும் வழி இருக்கும்.

மினரல் வாட்டர் பிரிவில் எல்லா பாட்டில்களும் ஒன்று போல் இருக்கிறது என்றோம் அல்லவா. வடநாட்டு கம்பெனி ஒன்று தேவையான அரசாங்க ஒப்புதல்கள் பெற்று கங்கை நதி நீரை சுத்தீகரித்து பாட்டிலில் அடைத்து ‘கங்கை’ என்று பெயரிட்டு விற்றால் பலர் கேட்டு வாங்குவார்களே. மினரல் வாட்டர் பாட்டில்கள் மத்தியில் வித்தியாசமாய் தெரிவதால் தானே அது. பாவத்தை போக்க வல்லது கங்கை தண்ணீர் என்று நம்புபவர்கள் இப்ப்ராண்டை ஐந்து ரூபாய் அதிகம் கொடுத்து வாங்கவும் ரெடியாயிருப்பார்கள்!

எதிர்பார்க்கும் பொருள் (Expected Product)

வாங்கும் பொருளிலிருந்து வாடிக்கையாளர் சில குறைந்தபட்ச விஷயங்களை எதிர்பார்க்கிறார். சொன்ன நேரத்தில் டெலிவரி, சரியான அளவு, இன்ஸ்டலேஷன், ஈசி பேமெண்ட் டர்ம்ஸ் போன்றவை வாடிக்கையாளரின் குறந்தபட்ச தேவைகள். இந்த டைமென்ஷனில் எல்லா பொருட்களும் ஒன்று போல இருக்கின்றன. இதில் எப்படி வித்தியாசப்படுத்துவது என்று நினைக்கிறார்கள் பலர்.

வாடிக்கையாளர் தேவையறிந்து போட்டியாளர்கள் அளிப்பதை புரிந்து அதற்கேற்ப இந்த டைமென்ஷனில் வித்தியாசப்படுத்தலாம். கட்டுமானத்திற்கு உதவும் ஜல்லியில் வித்தியாசத்தை காட்டி விற்க முடியாது என்றே பலர் நினைக்கிறார்கள். ஆனால் மதுரையை சேர்ந்த ’கான்க்ரீஷியா’ என்னும் கம்பெனி சாதாரண ஜல்லியை ப்ராண்ட் செய்து விற்கிறது. எங்கள் ஜல்லியை மற்றவர் போல் சில்லியாய் விற்காமல் மக்கள் பெயர் சொல்லி கேட்டு வாங்கும்படி கில்லியாய் விற்போம் என்று கங்கனம் கட்டிக்கொண்டு லெவிட் சொன்னது போல் ஆய்வு செய்தது இக்கம்பெனி.

பல ஜல்லி கம்பெனிகள் கேட்ட நேரம், கேட்ட அளவ தருவதில்லை.  வாடிக்கையாளர் சேவைம் இருப்பதில்லை. இதில் வித்தியாசப்படுத்த முடியும் என்பதை உணர்ந்த கான்க்ரீஷியா தங்கள் ஜல்லிக்கு ‘ப்ளூ மெட்’ என்று பெயரிட்டு ‘கேட்ட அளவு, கேட்ட நேரத்தில் டெலிவரி, சிறந்த கஸ்டமர் சப்போர்ட்’ என்று கூறி தங்கள் ஜல்லியை வித்தியாசப்படுத்தி மற்றவைகளை விட 20% அதிக விலையில் ஜோராய் விற்கிறது!

செறிவூட்டப்பட்ட பொருள் (Augmented Product)

அடிப்படை பயன்கள் மூலம், எதிர்பார்க்கும் குறைந்தபட்ச விஷயங்கள் மூலம் வித்தியாசப்படுத்த முடியவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது பொருளின் மூன்றாவது டைமென்ஷன். வாடிக்கையாளர் எதிர்பார்க்காத பயனை, அம்சங்களை பொருளில் சேர்த்து வாங்குபவரை குஷிப்படுத்துவது. இது செறிவூட்டப்பட்ட பொருள். வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் பயனை விட அதிகம் தருவது.

டூத்ப்ரஷை எடுங்கள். பல் தேய்க்க இல்லை, சார், உதாரணத்திற்கு. டூத்ப்ரஷ் விற்கும் பல கம்பெனிகள் தங்கள் பொருளை வித்தியாசப்படுத்தாமல் விற்று வந்தார்கள். டூத்ப்ரஷை எப்படி வித்தியாசப்படுத்த முடியும் என்றார்கள். வந்தது ’பிஅண்ட்ஜி’ கம்பெனி. அறிமுகப்படுத்தியது ‘ஓரல் பி’ என்ற டூத்ப்ரஷ்ஷை.

டூத்ப்ரஷ்ஷை மாற்றும் நேரம் பலருக்கு தெரிவதில்லை. இதையெல்லாம் கணக்கு வைத்துக்கொண்டா மாற்றிக்கொண்டிருக்க முடியும் என்று ஒரே டூத்ப்ரஷ்ஷை ஒன்பது வருஷம் உபயோகித்து வருவார்கள். அது போன்றவர்களுக்கு எளிதாக இருக்கும்படி டூத்ப்ரஷ் நடுவில் நீல கலர் சாயம் பூசி அதை உபயோகித்து வரும்போது கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வருவது போல் செய்து எப்பொழுது பாதிக்கு மேல் சாயம் போகிறதோ அதுவே ப்ரஷை மாற்றுவதற்கான அறிகுறி என்று கூறி அந்த அம்சத்திற்கு ‘இண்டிகேடர்’ என்று பெயரிட்டு விற்றது ஓரல் பி. ப்ரஷ் மாற்றவேண்டிய நேரத்தை சொல்லும் இதையே உபயோகிப்போம் என்று பலர் வாங்க இன்று டூத்ப்ரஷ் என்றால் ஓரல் பி என்று பெயரெடுத்து பரவசமாய் விற்கிறது!

உள்ளார்ந்த பொருள் (Potential Product)

மூன்று டைமென்ஷகளில் முடியவில்லையா? அதையும் தாண்டி புனிதமானது இது. உள்ளார்ந்த பொருள். வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் பயன்களை தாண்டி பொருள் உபயோகத்தை மீறி வாடிக்கையாளர்கள் நினைக்காத, எதிர்பார்க்காத பயன்களை அளிக்கும் டைமென்ஷன். வாங்குபவர்களை ‘அட’ என்ற கூற வைத்து ‘அடேங்கப்பா’ என்று ஆச்சரியமளித்து ‘ஆஹா’ என்று வாங்கி பரவசமடைய வைப்பது.

தலைமுடிக்கு தேய்க்க ஹெர்பல் எண்ணெய் வாங்குபவருக்கு இரண்டு ஐயம் உண்டு. ஹெர்பல் உட்பொருட்கள் இருக்கின்றன என்று கூறும் ப்ராண்டுகள் உண்மையிலேயே அதை சேர்க்கின்றனவா என்ற ஐயம். வாங்கி சில நாட்கள் நன்றாக இருக்கின்றன, ஆனால் நாள்பட எண்ணெயின் சாரம் குறைகிறது என்பது இரண்டாவது ஐயம். இதை நிவர்த்தி செய்யும் விதமாக ‘மீரா’ ஹெர்பல் எண்ணெய் தன் பாட்டிலின் நடுவில் மேலிருந்து அடி வரை சின்ன ஓட்டைகள் நிரம்பிய ட்ரான்ஸ்லூசெண்ட் ட்யூப் ஒன்றை சொருகியிருக்கிறது. அந்த ட்யூபில் கண்ணிற்கு தெரியும்படி மெந்தயம், கத்தாழை, சீயக்காய், போன்ற உட்பொருட்களை நிரப்பி இதோ பாருங்கள் நாங்கள் என்னென்ன சேர்த்திருக்கிறோம் என்பதை என்று கூறாமல் கூறுகிறது. அதோடு ட்யூபின் ஓட்டை வழியே பாட்டிலுள்ள எண்ணெய் சென்று வருவதால் கடைசி சொட்டு வரை சிறந்த உட்பொருட்களின் குணநலன்களோடு வருகிறது என்றும் கூறுகிறது. வேறு யாரும் தராத, வாடிக்கையாளர்கள் ஐயம் நீக்கி அவர்களை மகிழவைக்கிறது.

இனியும் பொருளை கமாடிடியாக விற்காதீர்கள். உங்கள் பொருளை நான்கு டைமென்ஷனாக பிரித்து மேய்ந்து அதை ப்ராண்டுக்கும் வழியை பாருங்கள். க்ராண்டாக விற்பீர்கள். காரண்டி!

சைனா சென்றிருக்கிறீர்களா? அட்லீஸ்ட் சைனாகாரர்கள் சேர்ந்து நிற்கும் க்ரூப் ஃபோட்டாவை பார்த்திருப்பீர்கள். அதில் அத்தனை பேர் முகமும் சகட்டுமேனிக்கு ஒன்று போல் இருப்பதை கவனித்திருப்பீர்கள். அதிலிருந்து ஒருவரை பிரித்து இனங் காண முயல்வது முடியாத காரியம் என்பது புரிந்திருக்கும்.

திருப்பதி சென்றிருக்கிறீர்களா? அங்கு கோயிலில் இருந்து கோஷ்டியாக வெளி வரும் மொட்டை தலைகளை கண்டிருப்பீர்கள். அனைத்து மொட்டை தலையர்களும் ஒன்று போல் இருப்பதை கவனித்திருப்பீர்கள். அத்தனை மொட்டை தலைகளுக்கிடையே  ஒருவரை தேடி கண்டுபிடிப்பது லேசுபட்ட காரியமல்ல என்பது தெரிந்திருக்கும்.

கடைக்கு சென்றிருப்பீர்கள். ஏகப்பட்ட பொருள்கள் அணிவகுத்து நிற்கின்றன. எல்லா பொருள்களும் ஒன்று போல் இருந்து தொலைத்தால் அதிலிருந்து ஒரு பொருளை எப்படி தேர்ந்தெடுத்து வாங்குவீர்கள்? எதன் விலை கம்மியோ அதை எடுப்பீர்கள். இல்லை கடைக்காரர் எந்தப் பொருளை சொல்கிறாரோ அதை வாங்குவீர்கள்.

நிற்க.

சைனாக்கார முகங்கள் வித்தியாசமின்றி இருப்பதால், திருப்பதி மொட்டை தலையர்கள் ஒன்று போல் இருப்பதால் ஏற்படும் குழப்பம் தான் கடையில் பொருள்கள் ஒன்று போல் வித்தியாசமில்லாமல் இருப்பதாலும் ஏற்படுகிறது. இதிலிருந்து நாம் அறிவிப்பது என்னவென்றால்…….

ஒரு பொருள் பிரிவில் உள்ள அனைத்து பொருள்களும் வித்தியாசமின்றி ஒன்றையே சொல்லித் தொலைப்பதாலும், ஒன்று போலவே இருந்து தொலைப்பதாலும் தான் விலை குறைப்பு, டிஸ்கவுண்ட், கடைக்காரர் தயவு தாட்சன்யத்தை வேண்டுவது, விற்பனை குறைவு என்று அவதிப்பட வேண்டியிருக்கிறது. வித்தியாசப்படுத்தாமல் விற்பதால் தான் திருப்பதி போகாமலேயே மொட்டை போட வேண்டிய அவல நிலை.

‘வித்தியாசப்படுத்து அல்லது செத்து ஒழி’ என்று தன் புத்தகத்திற்கு தலைப்பே வைத்து அதில் மார்க்கெட்டர்கள் தாங்கள் விற்கும் பொருள்களை போட்டியாளர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துவதன் அவசியத்தை உறைக்கும் படி உறைத்தார் ‘ஜாக் ட்ரவுட்’ என்ற மார்க்கெட்டிங் அறிஞர். அவர் எழுதிய புத்தகம் தான் விற்றதே ஒழிய அவர் சொன்னதை கேட்காமல் இன்னமும் பல மார்க்கெட்டர்கள் தங்கள் பொருளை வித்தியாசப்படுத்தாமல் விற்க முயன்று விறக முடியாமல் தவிக்கின்றனர்.

இன்னும் சொல்லப் போனால் வித்தியாசமின்றி விற்க முயன்றால் அப்பொருள்கள் ப்ராண்டுகள் என்கிற அந்தஸ்த்தையே பெறுவதில்லை. வித்தியாசமில்லாமல் விற்கப்படும் பொருள்கள் வெறும் கமாடிடி (Commodity). செங்கல் கற்களை அடுக்கி வைத்தால் எப்படி ஒன்றிலிருந்து ஒன்று வித்தியாசப்படாமல் எல்லா செங்கல்களும் ஒன்றாய் தெரியுமோ அது போலவே பொருள் பிரிவில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வித்தியாசமில்லா பொருள்களும்!

மினரல் வாட்டர் பொருள் பிரிவை பாருங்கள். இருக்கும் அத்தனை பாட்டில்களும் ஒன்றிலிருந்து ஒன்று வித்தியாசப்படுத்தப்பட்டிருக்கிறதா?

இல்லை!

பாட்டில் ஷேப்பை, லேபிள் கலரை சொல்லவில்லை. ஒவ்வொரு பொருளுக்கும் ஏதாவது தனித்தன்மை இருக்கிறதா? ஒரு பொருளுக்கும் இன்னொரு பொருளுக்கும் வித்தியாசம் தெரிய அவைகளுக்கு தனித்தன்மை அளிக்கப்பட்டிருக்கிறதா? ‘அக்வா ஃபீனா’ என்றால் என்ன தோன்றுகிறது உங்களுக்கு? ‘கின்லி’ என்றால்? ‘டாடா ப்ளஸ்’ என்றால் ஏதேனும் ஸ்பெஷலாய் மனதில் படுகிறதா?

இல்லையே!

அதனால் தான் கடைக்கு சென்று ‘ஒரு மினரல் வாட்டர் பாட்டில் கொடுங்க’ என்று பொத்தாம் பொதுவாய் தான் கேட்கிறோம். கடைக்காரர் எந்த பாட்டிலை தருகிறாரோ அதை கேள்வி கேட்காமல் பெறுகிறோம். அவ்வளவு ஏன், காசு கொடுத்து வாங்கும் பாட்டில் பெயரை கூட நாம் பார்ப்பதில்லை. வாங்கிய மாத்திரம் பாட்டிலின் கழுத்தை நெறித்து மூடியை இறுக்கித் திறந்து குடிக்கிறோம். அங்கு நெறிக்கப்படுவது பாட்டில் கழுத்து மட்டுமல்ல, வித்தியாசப்படுத்தாமல் கடைக்காரர் தயவில் விற்கப்படும் அந்த பொருளின் வருங்காலமும் கூட!

அதற்காக எல்லா பொருள்களும் வித்தியாசப்படுத்தாமல் விற்கப்படுவதில்லை. வாடிக்கையாளர் தேவையறிந்து சரியாக வித்தியாசப்படுத்தப்பட்டு போட்டியாளர்களிடமிருந்து தனியாகத் தெரிந்து அதன் மூலம் ப்ராண்ட் என்ற அந்தஸ்த்தை பெற்று அட்டகாசமாக விற்று கல்லா கட்டும் கம்பெனிகளும் இருக்கத் தான் செய்கின்றன.

சோப்பு வாங்க செல்கிறீர்கள். அங்கு கடைகாரரிடம் ‘நல்ல நுரை வரா மாதிரி ஒரு சோப்பு தாங்க’ என்றா கேட்கிறீர்கள்? கடை வருவதற்கு முன்பே தீர்மானித்திருக்கும் சோப்பு ப்ராண்டை பெயர் சொல்லி கேட்கிறீர்கள். சூப்பர்மார்க்கெட்டாய் இருந்தால் எத்தனை சோப்பு ப்ராண்டுகள் அணிவகுத்து நின்றாலும் அத்தனையும் நீக்கி விட்டு நினைத்து வந்த சோப்பை தேடி எடுத்து வாங்குகிறீர்கள்.

ஏன்?

அந்த சோப்பு மற்ற சோப்புகளிடமிருந்து வித்தியாசமாய் தெரிவதால். அப்படி வித்தியாசப்படுத்தும் வகையில் அந்த சோப் மார்க்கெட்டிங் செய்யப்பட்டிருப்பதால். அதனால் அதன் விலையை கூட பாராமல் வாங்குகிறீர்கள்.

உங்களை ஒன்று கேட்கிறேன். நீங்கள் பயன்படுத்தும் சோப்பு ப்ராண்ட் என்ன விலை சார்?

‘என் மணைவி தான் வாங்குகிறாள், நான் வாங்குவதில்லை’ என்று கூறுகிறீர்களா? சரி,  படிப்பதை ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு உங்கள் மணைவியை அழைத்து அவர்கள் வாங்கிய சோப்பின் விலையை கேளுங்கள்.

‘அவளை எதற்கு இப்பொழுது, அவள் பிடுங்கள் தாங்காமல் தான் இங்கு வந்து இந்த பத்திரிக்கையை படிக்கிறேன்’ என்கிறீர்களா? சரி விடுங்கள். நேரம் கிடைக்கும் போது மணைவியை கேளுங்கள். விலை தெரியாது, வேண்டுமானால் நீங்களே கடைக்கு போய் வாங்கி தெரிந்துகொள்ளுங்கள் என்பார்!

காசு கொடுத்து வாங்கிய பொருளின் விலையை கூட தெரிந்துகொள்ளாமல் என்ன இது? ஏன் இப்படி?

உங்கள் சோப்பு ப்ராண்ட் மற்ற ப்ராண்டுகளிடமிருந்து வித்தியாசப்பட்டிருப்பதால். சோப்பிலிருந்து எனக்கு இந்த பயன் வேண்டும் என்று உங்கள் மனதில் ஒரு தேவை இருக்கிறது. அதை உணர்ந்த ஒரு கம்பெனி அந்த பயனை அளிக்கும் வகையில் தன் சோப்பை உருவாக்கி, அதற்கேற்ற தன்மைகளை தந்து, அதை குறிக்கும்படி பேக்கிங் செய்து ‘இந்த சோப்பு இந்த பயனை அளிக்கிறது’ என்று விளம்பரம் செய்கிறது. உங்களுக்கு என்ன தேவையோ அதையே ஒரு சோப்பு விளம்பரம் கூறும் போது அந்த விளம்பரம் உங்களை ஈர்க்கிறது. கூறப்படும் செய்தி கண்ணில் படுகிறது. வாங்க வேண்டும் என்று மனம் முடிவு செய்கிறது!

‘லக்ஸ்’ என்றால் ‘க்ளாமர்’. ‘ஹமாம்’ என்றால் ‘பாதுகாப்பான சருமம்’. ‘லைஃப்பாய்’ என்றால் ‘ஆரோக்கியம்’. ‘சந்தூர்’ என்றால் ‘இளமையான சருமம்’. ’லிரில்’ என்றால் ‘புத்துணர்ச்சி’. ’பியர்ஸ்’ என்றால் ‘க்ளியரான சருமம்’. ‘ஜான்சன்’ என்றால் ‘குழந்தைகளுக்கான சோப்’.

ஒன்றிற்க்கு ஒன்று எப்படி வித்தியாசப்படுத்தப்பட்டிருக்கிறது பாருங்கள். ஒவ்வொரு வாடிக்கையாளரும் தனக்கென்ன தேவையோ அதை பூர்த்தி செய்யும் சோப் ப்ராண்ட் பளீரென்று கண்ணில் படுவது ஆச்சரியமில்லையே. அவர்கள் அதை பார்த்த மாத்திரம் வாங்குவதிலும் அதிசமில்லையே. அதனால் அதன் விலையை கூட தெரிந்துகொள்ளாமல் இருப்பது பெரிய காரியமில்லையே!

விற்கும் எந்தப் பொருளையும் வித்தியாசப்படுத்தி விற்கலாம். விற்க வேண்டும். விற்க முடியும். வெற்றி பெற்ற ப்ராண்டுகள் இதை தான் திறம்படச் செய்கின்றன. வெற்றி பெறுகின்றன. வித்திசாப்படுத்தி விற்காத பொருள்கள் கடையில் காணாமல் போய், வாடிக்கையாளர் மனதில் தனியே தெரியாமல், கடைக்காரர்கள் தயவில் பிழைப்பை  நடத்த வேண்டிய நிலையை அடைந்து கடைசியில் அதுவும் முடியாமல் தோல்வியை தழுவுகின்றன.

வித்தியாசப்படுத்தி விற்கமுடியாத பொருள் வகைகளே இல்லை என்று சொல்லலாம். வாடிக்கையாளர் எதற்கு ஒரு பொருளை வாங்குகிறார்? அது தன் குறிப்பிட்ட தேவையை பூர்த்தி செய்யும் என்று நம்புவதால். அத்தேவையை மற்ற பொருள்கள் பூர்த்தி செய்ய முனையும் முன் நீங்கள் பந்திக்கு முந்துங்கள். லாபம் என்ற விருந்து கண்டிப்பாய் பரிமாறப்படும். மற்ற பொருள்கள் பூர்த்தி செய்வதை விட இன்னமும் பெட்டராய் பூர்த்தி செய்ய முயலுங்கள். அப்பொழுதும் வெற்றி பரிமாறப்படும்.

விதி விட்ட வழி என்று இனி வியாபாரம் செய்யாமல் வித்தியாசப்படுத்தி விற்கும் வழி எது என்று தேடுங்கள். சைனாகாரர் போல் ஒன்று போல் தெரியாமல், மொட்டைத் தலையர்கள் போல் வித்தியாசம் இல்லாமல் இருந்தால் மினரல் வாட்டர் பொருள்களுக்கு ஏற்பட்ட கதி தான் விதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நுரைக்க நுரைக்க சோப்பை போல் லாபம் வேண்டுமென்றால் விற்கும் பொருளை வாடிக்கையாளர் தேவைக்கேற்ப வித்தியாசப்படுத்தி விற்க முயலுங்கள்.

எதற்கும் ஜாக் ட்ரவுட் எழுதிய புத்தகத்தின் தலைப்பை மீண்டும் ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்!

மார்க்கெட்டிங்கின் புதிய பரிமானத்தையும் அதன் மூன்று படிகளையும் பழைய போஸ்ட்டுகளில் பார்த்தோம். மார்க்கெட்டர் என்ற முறையில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வேல்யூவை தேர்ந்தெடுக்கிறோம். அந்த வேல்யூவை தயாரிக்கிறோம். அதை அவர்களுக்கு விளக்கி வழங்குறோம். இதுவே அந்த மூன்று படிகள்.

வேல்யூ என்பது நாம் வாடிக்கையாளர்களுக்கு தரும் ஆஃபர். ஒரு பயன். அது அவர் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய பொருளாக அல்லது சேவையாக வடிவமைத்துத் தரவேண்டும். செய்த பொருளை வாடிக்கையாளர்களை எளிதாகக் சென்றடயும் விநியோக முறையை வரையறுக்கவேண்டும். அப்பொருளை என்ன விலை  விலை கொடுத்து வாங்க வாடிக்கையாளர்கள் ரெடியாய் இருப்பார்கள் என்று கண்டறிந்து விலையை நிர்ணயிக்கவேண்டும். அப்பொருளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களை கவர்ந்து வாங்கச் செய்யும் விற்பனை மேம்பாட்டுச் செயல்கள் செய்யவேண்டும்.

ஆஃபரின் நான்கு அம்சங்களான பொருள், விலை, விநியோகம், விற்பனை மேம்பாடு தான் பொருளின் வெற்றியை நிர்ணயிப்பவை. இந்த நான்கு அம்சங்களையும் ஆங்கிலத்தில் ப்ராடக்ட், ப்ரைஸ், ப்ளேஸ், ப்ரமோஷன் என்று சுருக்கமாக ’ஃபோர் பி’ என்று கூறுவார்கள். இந்த கலவைக்கு மார்க்கெட்டிங் மிக்ஸ் என்று பெயர். இதை 1953ல் முதலில் விளக்கியவர் ’அமெரிக்க மார்க்கெட்டிங் அசோசியேஷன்’ தலைவராக இருந்த ’நீல் பார்டன்’. ஃபோர் பியின் அங்கங்களை இப்பொழுது பார்ப்போம்.

ப்ராடக்ட் என்பது பொருள் வடிவமைப்பு, சிறப்பு அம்சங்கள், அதன் தோற்றம், பெயர், மாடல்கள், தரம், பேக்கேஜிங், லேபிள் போன்றவைகளை அடங்கியது.

ப்ரைஸ் என்பது விலைக் கொள்கைகள், லாப விகிதம், டிஸ்கவுண்ட், கடன் வசதி, பணம் கட்டவேண்டிய வழிமுறை, தவணை முறை போன்றவைகளை அடங்கியது.

ப்ளேஸ் என்பது விற்பனை சேனல்கள், சேனல் வடிவம், சேனல் உறுப்பினர்கள், விற்பனையாளர்கள் கமிஷன், விநியோக முறை, போக்குவரத்து, சேமிப்புக் கிடங்கு, பொருள் கையிருப்பின் அளவு போன்றவைகளை அடங்கியது.

ப்ரமோஷன் என்பது விளம்பரம், மீடியா, விற்பனை மேம்பாட்டுச் சலுகைகள், மக்கள் தொடர்பு, நேரடி விற்பனை, விற்பனையாளர் அளவு, விற்பனையாளர் திறன் போன்றவைகளை அடங்கியது.

வாடிக்கையாளரை நம் பொருளை வாங்கத் தூண்டுவதும், தொடர்ந்து வாங்கச் செய்வதும் இந்த நான்கும் தான். ஃபோர் பியின் சரியான கலவை அமைய மெனக்கெடவேண்டும். பல சமயங்களில் இது ஒரு ட்ரையல் அண்ட் எர்ரர் ப்ராசஸ் தான். பொறுமை வேண்டும். சரியாய் தேடிப் பிடிக்கும் திறமை வேண்டும்.

மார்க்கெட்டரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை மார்க்கெட்டிங் மிக்ஸ். பொருள் எப்படி இருக்கவேண்டும் என்பதிலிருந்து அதன் விலை என்னவாக இருக்கலாம் என்பது வரை, அதை எங்கு விற்பது என்பது முதல் எப்படி விற்கலாம் என்பது வரை அனைத்து முடிவுகளும் மார்க்கெட்டர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. சொல்லப் போனால் ஒரு மார்க்கெட்டரின் ஆதிக்கத்திற்குட்பட்ட ஒரே விஷயம் இந்த ஃபோர் பி தான். மார்க்கெட்டரை மீறிய, அவர் ஆதிக்கத்திற்கு உட்படாத விஷயங்கள் ஏராளம் உண்டு. இவைகளை வேறு ஒரு போஸ்ட்டில் பேசுவோம்.

வாடிக்கையாளர்களின் மாற்றங்களுக்கு ஏற்ப கலவையை மாற்ற வேண்டி வரும். அப்பொழுது மார்க்கெட்டர் சமயோஜிதமாக சிந்தித்து மிக்ஸை சப்ஜாடாக மாற்றும் திறமை வேண்டும். ‘சோனி’ டீவி மார்க்கெட்டிற்கு வந்த புதிதில் ஏகப்பட்ட விலையை நிர்ணயித்திருக்க அதன் விற்பனை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதை உணர்ந்த அந்த கம்பெனி வாடிக்கையாளரின் வசதிக்கேற்ப தன் விலையை சற்றே குறைக்க அதன் விற்பனை கொஞ்சத்துக்கு கொஞ்சமாவது ஏறத் துவங்கியது.

மார்க்கெட்டிங் மிக்ஸின் ஒவ்வொரு அங்கமும் மற்ற அங்கங்களை இன்ஃலுயென்ஸ் செய்யும். செய்யவேண்டும். ‘ரோலெக்ஸ்’ வாட்ச் ஒரு ப்ரீமியம் ப்ராண்ட். சிறந்த தொழிற்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் வாட்ச். அதனால் அதன் விலை பல லட்சங்கள். இதை பட்டி தொட்டி தோறும் விற்க முடியுமா? அதனால் தான் இந்த வாட்சை பிரத்யேக கடைகள் வெகு சிலவற்றில் மட்டுமே விற்கப்படுகிறது. இதன் விளம்பரங்களும் ப்ரீமீயம் பத்திரிக்கைகளில் மட்டுமே தரப்படுகிறது.

1990ல் ‘ராபர்ட் லாடர்பார்ன்’ என்பவர் இந்த மார்க்கெட்டிங் மிக்ஸை வாடிக்கையாளர் கோணத்தில் பார்க்க்லாம். அப்படி மார்க்கெட்டர் பார்க்கும் போது அவர் ஆஃபரை இன்னமும் கூட வாடிக்கையாளர் தேவைக்கேற்ப வடிவமைக்க முடியும் என்று விளக்கினார். ஃபோர் பி என்பதை ’ஃபோர் சி’ என்ற முறையில் அவர் விளக்கிய விதத்தைப் பார்ப்போம்.

கன்ஸ்யூமர் (ப்ராடக்ட்)

ஃபோர் பியின் ப்ராடக்ட் என்பதை வாடிக்கையாளர் என்று பொருள் படும் கன்ஸ்யூமர் என்று பாருங்கள் என்கிறார் ராபர்ட். வாடிக்கையாளர் என்பவர் தான் பிரதானம். அவருக்கு என்ன தேவையோ அதைத் தான் அவர் வாங்குவார். அதனால் அவர் யார், அவருக்கு என்ன தேவை, அந்த தேவையை எப்படி பூர்த்தி செய்வது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளவேண்டும்.

காஸ்ட் (ப்ரைஸ்)

வாடிக்கையாளர் பொருளை வாங்க தர ரெடியாய் இருக்கும் விலை என்ன என்பதை கண்டறியவேண்டும். விலை என்பது பணத்தை மட்டும் குறிக்கும் விஷயமல்ல. பொருளை வாங்க வாடிக்கையாளர் பணம் என்னும் விலை கொடுக்கிறார். அதோடு அதை வாங்க நேரத்தை செலவழிக்கிறார். அதை வாங்க ஃபிசிகள் முயற்சி செய்கிறார். இதற்கும் ஒரு விலை உண்டு. இந்த மூன்றின் மொத்தம் தான் அவர் கொடுக்க ரெடியாய் இருக்கும் விலை. ஒரு ‘சொனாடா’ வாட்ச் வாங்க வாடிக்கையாளர் அதிக தூரம் பயனிக்க விரும்ப மாட்டார். ஆனால் ஒரு ரோலெக்ஸ் வாட்ச் வாங்க அடுத்த ஊருக்குப் பயனிக்கக் கூட ரெடியாய் இருப்பார். அதனால் சோனாடா பட்டி தொட்டியெங்கும் தன் வாட்சுகளை வைத்து விற்கவேண்டும். ரோலெக்ஸ்ஸுக்கு இந்த தலையெழுத்து இல்லை.

கம்யூனிகேஷன்

ஒரு ப்ராண்டை வாடிக்கையாளருக்கு விளக்கி, மயக்கி, விற்க தேவை விளம்பரங்கள் அல்ல. அவரோடு ஆத்மார்த்தமாக பேச வேண்டும். தன் தேவையை உணர்ந்து தனக்கு புரியும் படி விளக்குகிறார் இந்த மார்க்கெட்டர் என்று வாடிக்கையாளர் உணர வேண்டும். இதற்குத் தேவை தெளிவான தகவல் தொடர்பு. இதுவே மூன்றாவது ‘சி’.

கன்வீனியன்ஸ்

வேகமான வாழ்க்கையில் வாடிக்கையாளர் ப்ராண்ட் வாங்க சௌகரியம் செய்து கொடுக்கவேண்டியது மார்க்கெட்டரின் கடமை. கால் கடுக்க க்யூவில் நின்று பொருள் வாங்கிய காலம் கடந்துவிட்டது. வண்டியில் சென்று ஷாப்பிங் செய்த காலம் வழக்கொழிந்து போய் வருகிறது. என் சௌகரியத்திற்கு தான் வாங்குவேன், என் இஷ்டப்படி தான் வாங்குவேன் என்று அழிச்சாட்டியம் செய்ய ஆரம்பித்துவிட்டார் வாடிக்கையாளர். வண்டி பிரயானம் வேண்டாம் வெப்சைட் போதும் என்கிறார். கூட்ட நெரிசல் பிடிக்கவில்லை விட்டு டெலிவரி இருக்கிறதா என்று கேட்கிறார். அதற்கேற்ப மார்க்கெட்டரும் அவர் சௌகரியத்திற்கு, ஈசியாக ப்ராண்டை வாங்கும் வசதிகளை செய்து தரவேண்டும்.

மார்க்கெட்டை வகைப்படுத்தும் விதங்களை, வழிகளை சென்ற போஸ்ட்டில் பார்த்தோம். வகைப்படுத்திய பின் எந்த பிரிவை குறி வைத்து புதிய ப்ராண்டை அறிமுகப்படுத்துவது என்று பார்ப்பது அடுத்த படி. STP என்று பேசி வருகிறோமே, அந்த சித்தாந்தத்தின் இரண்டாவது படி. அதாவது குறி வைத்தல் (Targeting).

குறி வைப்பதற்கு முன் ஒரு சின்ன காரியம் செய்யவேண்டியிருக்கிறது. வக்கனையாய் வகைப்படுத்திய பிரிவுகள் எப்பேற்பட்டது, வகைப்படுத்திய பிரிவு சரியானது தானா என்று ஆராயும் வேலை தான் அது. வகைப்படுத்திய பிரிவுகளை கீழ்கண்ட கோணங்களில் சரி பார்ப்பது பயன் தரும்.

முதலில், மார்க்கெட் பிரிவு அளக்கக்கூடியதாக (Measurable) இருக்கவேண்டும். இந்த பிரிவு இத்தனை கோடி பெருமானம் உள்ளது, இப்பிரிவின் மொத்த டிமாண்ட் இத்தனை டன், லிட்டர் என்று அளக்கக்கூடியதாக இருக்கவேண்டும். அப்பொழுது தான் அந்த பிரிவு நுழையத் தகுந்ததா என்று அறிய முடியும்.

இரண்டாவது, செக்மெண்ட் பெரியதாக (Substantial) இருக்கவேண்டும். மிகச் சின்ன செக்மெண்ட்டாக இருந்து தொலைத்தால் அதில் ப்ராண்டை இறக்கி லாபம் பார்ப்பது கஷ்டம். உதாரணத்திற்கு, உயரக் குறைபாடுள்ள ‘அபூர்வ சகோதரர்கள்’ அப்பு போல் உள்ளவர்களின் பிரத்யேக தேவையை பூர்த்தி செய்யும்படியான கார் தயாரிப்பு என்பது ஒரு கார் மார்க்கெட்டில் ஒரு பிரிவாய் கொள்ளலாம். ஆனால் அந்த பிரிவு மிக சிறியதாக இருக்கும். அதில் நுழைந்தால் லாபம் பெரிய அளவில் இல்லாமல் அப்பு போல் தான் இருக்கும்!

மூன்றாவது, பிரிவு லாபகரமானதாக (Profitable) இருக்கவேண்டும். வகைப்படுத்தப்படும் பிரிவு வாடிக்கையாளர்களை அதிகம் கொண்டதாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் அந்தப் பிரிவில் உள்ள வாடிக்கையாளர்கள் தேவையான வாங்கும் சக்தியுடன் இருப்பது முக்கியம். அப்பொழுது தான் அந்த பிரிவில் நுழைந்து சில்லறை சேர்க்கமுடியும்.

நான்காவது, வகைப்படுத்தப்படும் பிரிவுகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானதாக (Differentiated) இருக்கவேண்டும். உப்பு மார்க்கெட்டை திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள் என்று வகைப்படுத்திப் பிரயோஜனமில்லை. ஏனெனில், இருவருக்கும் உப்பு சம்பந்தப்பட்ட தேவைகளில் வித்தியாசம் ஏதும் இல்லாததால்.

செக்மெண்டேஷன் செய்த பின் மார்க்கெட் பிரிவுகள் கம்பெனியின் தொலை நோக்கு பார்வைக்கு உகந்ததாக இருக்கிறதா என்று பார்ப்பதும் நலம். சில சமயங்களில் பெரிய கம்பெனிகள் சிறிய பிரிவுகளை கண்டுகொள்ளாது. சின்ன பிரிவில் எதற்கு நுழைந்து மெனெக்கெட்டுக்கொண்டு, பெரிய பிரிவுகளில் மட்டும் கவனம் செலுத்துவோம் என்று விட்டுவிடும். உதாரணத்திற்கு, ‘பிஅண்ட்ஜி’ பேன் நீக்கும் தன் ‘மெரிகேர்’ ஷாம்புவை ’மேரிகோ’ என்கிற கம்பெனிக்கு விற்றுவிட்டது. சோப், சானிடரி நாப்கின், டிடர்ஜெண்ட், ஜலதோஷ நிவாரணி என்று பெரிய மார்க்கெட் பிரிவுகளில் மட்டும் இருப்போம், பேன் கொள்ளி போன்ற சிறிய பேன் சைஸ் மார்க்கெட்டில் எதற்கு மாரடித்துக்கொண்டு என்ற காரணத்தால்.

சரி, மார்க்கெட்டை செக்மெண்ட் செய்துவிட்டோம். அது சரியா, பொருத்தமானதா என்றும் பார்த்துவிட்டோம். இப்பொழுது எந்த பிரிவை தேர்ந்தெடுப்பது, எதில் புதிய ப்ராண்டை அறிமுகப்படுத்துவது என்று குறி வைக்கவேண்டும். குறி வைத்தல் படியின் முக்கிய அனுகுமுறைகளைப் அலசுவோம்.

அனைத்து பிரிவுகளை குறி வைப்பது

ஒரு மார்க்கெட்டின் ஒவ்வொரு பிரிவையும் விடக்கூடாது, எல்லாவற்றிலும் நம் ப்ராண்டை அறிமுகப்படுத்தி அதுவும் பத்தாது என்று மற்ற மார்க்கெட்டுகளிலும் நுழைய நினைப்பது ஒரு வகை அனுகுமுறை. பெரிய கம்பெனிகளுக்கு மட்டுமே இது ஈசியாக சாத்தியப்படும். ‘இந்துஸ்தான் யூனிலீவர்’ சோப் மார்க்கெட்டை செக்மெண்ட் செய்து ஒவ்வொரு பிரிவையும் குறி வைத்து ப்ராண்டுகளை நுழைத்திருக்கிறது. ஆரோக்கியத்திற்கு ‘லைஃப்பாய்’, ஹெர்பலுக்கு ‘‘ஹமாம்’, கவர்ச்சிக்கு ‘லக்ஸ்’, மிருதுவான சருமத்திற்கு ‘டவ்’, புத்துணர்ச்சிக்கு ‘லிரில்’ என்று சோப் மார்க்கெட்டில் ஒரு பிரிவை விடாமல் எல்லாவற்றிலும் நுரைக்க நுரைக்க நுழைந்திருக்கிறது.

அதுவும் பத்தாதென்று ஷாம்பு, டியோடரண்ட், டிடெர்ஜண்ட், தேங்காய் எண்ணெய், டீ, காபி என்று பிரதான வாடிக்கையாளர் மார்க்கெட்டுகளில் நுழைந்து ஒவ்வொரு மார்க்கெட்டின் பிரதான பிரிவுகளில் தன் ப்ராண்டுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

பொருளை பிரத்யேகமாக்குதல்
 
ஒரு பொருளை தேர்ந்தெடுத்து அந்த பொருள் உபயோகத்திலுள்ள பல பிரிவுகளை குறி வைப்பது ஒரு அனுகுமுறையே. உதாரணத்திற்கு, ‘கைத்தான்’ கம்பெனி ஃபேன் மார்க்கெட்டில் இருக்கிறது. ஃபேன்களில் பல பிரிவுகள் இருக்கின்றன. சீலிங் ஃபேன், டேபிள் ஃபேன், பெடஸ்ட்ரல் ஃபேன் என்று ஏகப்பட்ட பிரிவுகள். கைத்தான் அத்தனை பிரிவுகளிலும் பிரத்யேக ஃபேன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இருப்பது ஒரு பொருள் வகையில். அதிலுள்ள அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் ப்ராண்டுகளை கொண்டு வருவதே இந்த அனுகுமுறை.
 
மார்க்கெட்டை பிரத்யேகமாக்குதல்
 
குறி வைத்தலின் இன்னொரு அனுகுமுறை குறிப்பிட்ட வாடிக்கையாளர் பிரிவை தேர்ந்தெடுத்து அந்த வாடிக்கையாளரின் பன்முக தேவைகளை பூர்த்தி செய்ய நினைப்பது. ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’ கம்பெனி தன் வாடிக்கையாளராய் தேர்ந்தெடுத்தது பச்சிளங் குழந்தைகளை. அவர்களுக்கு தேவையான சோப், பவுடர், எண்ணெய், ஷாம்பு, லோஷன் என்று அனைத்து பிரிவுகளிலும் தன் ப்ராண்டுகளை அறிமுகப்படுத்தியிருப்பது இந்த அனுகுமுறை கொண்டே.
 

ஒரே பிரிவை குறி வைத்தல்

சில கம்பெனிகள் ஒரு பிரிவை மட்டும் தேர்ந்தெடுத்து அதில் மட்டும் போட்டியிடுவது குறி வைத்தலின் இன்னொரு அனுகுமுறை. அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல் என்பது போன்ற அனுகுமுறை இது. ‘புல்லட்’ இப்படி மார்க்கெட்டை வகைப்படுத்திய பின் எந்த பிரிவை குறி வைப்பது என்று முடிவு செய்ய ஒரு ரேஞ்சே இருக்கிறது. ஒரு பக்கம் அனைத்து பிரிவுகளையும் குறி வைக்கலாம், யூனிலீவர் போல. இன்னொரு பக்கம் ஒரே பிரிவை மட்டுமே குறி வைக்கலாம், புல்லட் போல. வைத்தால் குடுமி, சரைத்தால் மொட்டை என்று முடிவு செய்யும் பொறுப்பு உங்களுடயது!

கடைக்கு வரும் அனைவரும் நம் வாடிக்கையாளர்களாக இருந்தால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் அப்படி இருப்பதில்லை. இருக்கவும் முடியாது. ஏனெனில், எல்லா வாடிக்கையாளர்களின் தேவைகள் ஒரே மாதிரி இருப்பதில்லை. இருக்க முடியாது.

அதனால் தான் வாடிக்கையாளர்களை அவர்கள் தேவைகள் கொண்டு முதலில் வகைப்படுத்த வேண்டும். இதற்கு செக்மெண்டேஷன் (Segmentation) என்று பெயர். இதை மேலோட்டமாக சென்ற போஸ்ட்டில் பார்த்தோம்.

தினமும் உபயோகிக்கும் சோப்பை எடுத்துக்கொள்வோம். அனைவரும் உபயோகிக்கும் ஒரு சாதாரண பொருள். ஆஃப்டர் ஆல் குளியல் சமாச்சாரம். ஆனால் அனைவரும் ஒரே ப்ராண்ட் சோப்பை உபயோகிக்கிறோமா? இல்லையே.

இந்தியாவில் மட்டும் 720 ப்ராண்டு சோப்புகள் இருக்கிறதென்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இத்தனை சோப்பு ப்ராண்டுகள் எதற்கு? நாம் அனைவரும் ஒன்று போல் பக்கெட்டிலிருந்து மொண்டு குளித்தாலும் சரி, ஷவரில் ஜலக்கிரீடை செய்தாலும் சரி, பம்ப் செட்டில் தலையோடு உடம்புபை நுழைத்து பாதாதிகேசத்திற்கும் நீர் பாசனம் செய்தாலும் சரி, ஆற்றில் ஜல சமாதி போல் அமர்ந்துகொண்டு ஊறினாலும் சரி, சோப்பில் நம் தேவைகள் மாறுபடுகின்றன. அதனால் தான் இத்தனை சோப்புகள் தேவைப்படுகின்றன.

ஒரு சாராருக்கு புத்துணர்ச்சி தான் பூரணமாய் தேவை. சிலருக்கு சருமம் முருதுவாய் மின்னவேண்டும் என்ற தேவை. வேறு சிலருக்கு ஆரோக்கியமான சருமம் வேண்டும் என்ற தேவை. இன்னொரு கூட்டத்திற்கு கெமிக்கல் இல்லாத ஹெர்பல் சோப் தேவை. வேறொரு வர்க்த்திற்கு க்ளேமராய் தெரியவேண்டும் என்ற தேவை.

குளிப்பது என்னவோ ஒன்று போல் தான்; தண்ணீர் தான்; பக்கெட் தான்; பாத்ரூம் தான்; பம்ப் செட் தான். ஆனால் குளியல் என்று வரும்போது நமக்கு 720 தேவைகள். அதனால் நுரைத்தன 720 சோப்புகள்!

ஆக, சோப்பு கம்பெனிகள் ‘எல்லாருமே என் வாடிக்கையாளர்கள்’ என்று எப்படி கருத முடியும்? அப்படி கருதி எப்படி ஒரு சோப்பை தயாரிக்க முடியும்? ‘இதோ எங்கள் புதிய சோப். இது புத்துணர்ச்சி தந்து, சருமத்தை மிருதுவாய் மிளிரச் செய்வதோடு, ஆரோக்கியமாக திகழச் செய்து, கெமிக்கலே இல்லாத ஹெர்பல் சோப்பாய் உங்கள் சருமத்தை க்ளேமராய் ஆக்கும்’ என்று ஒரு சோப்பை தயாரித்து விற்க முனைந்தால் என்ன ஆகும்? ஊரே ஒன்று கூடி ஓட ஓட விரட்டி, நுரைக்க நுரைக்க அடித்து குளிப்பாட்டி காயப் போட்டுவிடுவார்கள்!

ஆக, பொருள் வகைகள் பல பிரிவுகள் கொண்டதாக இருக்கும். இதற்கு செக்மெண்ட் என்று பெயர். மார்க்கெட்டை இப்படி செக்மெண்ட்களாய் வகைப்படுத்துவதைத் தான் ஆங்கிலத்தில் செக்மெண்டேஷன் என்று அழைக்கிறார்கள்.

மார்க்கெட் செக்மெண்ட் ஒரே விதமான தேவைகள், குணாதிசயங்கள் கொண்ட ஒத்த வாடிக்கையாளர்கள் குழுமம். மார்க்கெட்டர்கள் இப்பிரிவுகளை உருவாக்குவதில்லை. அவற்றை இனங்கண்டுகொள்ள முடியும். மார்க்கெட்டர் தான் போட்டியிட நினைக்கும் மார்க்கெட்டைத் தேர்ந்தெடுத்து அதிலுள்ள செக்மெண்ட்களில் எந்த செக்மெண்ட்டை சேர்ந்த வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்ய முடியும் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப ஒரு ப்ராண்டை வடிவமைத்து விற்பனை செய்ய வேண்டும். ஒரு மார்க்கெட்டை வகைப்படுத்தும் வழிகளை இப்பொழுது பார்ப்போம்.

பூகோள முறைப்படி வகைப்படுத்தல் (Geographic Segmentation): இந்த வகைப்படுத்தல் முறைப்படி மார்க்கெட்டை நாடுகள், மாநிலங்கள், நகர்புற மற்றும் கிராமப்புற முறைப்படி வகைப்படுத்தலாம். ஸ்வெட்டர் போன்ற பொருள் பிரிவுகள் பெரும்பாலும் வடக்கு மாநிலங்களில் மட்டும் விற்பது போல. விலை குறைந்த சலவை சோப்பு ப்ராண்டுகள் கிராமப்புறங்களில் மட்டுமே விற்பது போல.

மக்கள் தொகையியல் செக்மெண்டேஷன் (Demographic Segmentation): இந்த முறையின்படி மார்க்கெட்டை வயது, குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை, ஆண்-பெண், வயது போன்ற ஜனத்தொகை சம்பந்தப்பட்ட காரணிகளைக் கொண்டு வகைப்படுத்தலாம். ‘சுட்டி’ விகடன் குழந்தைகளை மட்டுமே கவர் செய்ய நினைப்பது இதனால் தான். ‘அவள் விகடன்’ பெண்களையும் ‘ஜூனியர் விகடன்’ ஆண்களையும் வசீகரிக்க நினைப்பதும் இதனாலேயே.

மனஉளவியல் வகைப்படுத்தல் (Psychographic Segmentation): வாடிக்கையாளர்களின் மனோதத்துவ குணாதிசயங்களைக் கொண்டும் வகைப்படுத்தலாம். ’னைக்கி’யை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த ஷூவை ஆண்களும் அணிகிறார்கள், பெண்களும் அணிகிறார்கள். பணக்காரர்களும் அணிகிறார்கள், மத்திய தர மக்களும் அணிகிறார்கள். வயதானவர்களும் அணிகிறார்கள், இளைஞர்களும் அணிகிறார்கள். நகரில் உள்ளவர்களும் அணிகிறார்கள், சிறிய ஊர்களில் உள்ளவர்களும் அணிகிறார்கள். பிறகு எதைக் கொண்டு னைக்கி தன் வாடிக்கையாளர்களை வகைப்படுத்துகிறது?

வாடிக்கையாளர்களின் மனஉளவியல் குணம் மூலம். ‘ஃபிட்’டாய் இருக்கவேண்டும், ‘என்னால் சாதிக்க முடியும்’ என்ற வைராக்கியம் உள்ளவர்களை தனியாய் வகைப்படுத்தியிருக்கிறது நைக்கி. இந்த உளவியல் குணம் உள்ளவர்களைத் தான் தன் வாடிக்கையாளர்களாய் பார்க்கிறது நைக்கி.

நடத்தை செக்மெண்டேஷன் (Behavioural Segmentation): வாடிக்கையாளர்கள் பொருள் வாங்கும், உபயோகிக்கும் முறை கொண்டும் வகைப்படுத்தமுடியும். தமிழ் பேப்பர் படிப்பவர்களை காலை படிப்பவர்கள், மாலையில் படிப்பவர்கள் என்று பிரிக்க முடியும். பீர் குடிக்க நினைப்பவர்களை அதிகம் குடிப்பவர்கள், கொஞ்சம் குடித்தாலும் அதிக போதை வேண்டும் என்று நினைப்பவர்கள் என்று வகைப்படுத்தலாம். அதிகம் குடிப்பவர்களுக்காகவே ‘லேகர்’ பீர். அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல் என்று நினைக்கும் பீர் பிரியர்களுக்கு ‘ஸ்ட்ராங்’ பீர்!

இப்படி வகைப்படுத்திய பின் எந்த பிரிவை தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்யவேண்டும். இதற்கு பெயர் குறி வைத்தல். இதை அடுத்த போஸ்ட்டில் குறி வைப்போமா!

மார்கெடிங் என்பது பொருள்களைப் பற்றியதல்ல என்று சொன்னால் ஆச்சரியமாய் இருக்கிறதா? நீங்கள் விற்பது பொருளாய் இருக்கலாம். ஆனால் வாடிக்கையாளர் வாங்குவது பொருள் அல்ல. அவர் வாங்குவது ஒரு வேல்யூ. பொருள் தரும் பயனை. உதாரணத்திற்கு, வாடிக்கையாளர் பல்ப் வாங்கவில்லை, வெளிச்சத்தை வாங்குகிறார்.

தெளிவாய் குழிப்பி விட்டேனா?

வாடிக்கையாளருக்கு தேவை வெளிச்சம். இன்று அதை அளிப்பது பல்ப் என்பதால் அதை வாங்குகிறார். வெளிச்சம் தரும் ஃபேன் கண்டுபிடிக்கப்பட்டால் எதற்கு பல்பை வாங்கிக்கொண்டு. பேசாமல் அந்த ஃபேனை வாங்கினால் போகிறது. அதனால் தான் அவர்கள் வாங்குவது பல்ப் அல்ல, வெளிச்சத்தை. நாம் வாடிக்கையாளருக்கு விற்பது பொருளை அல்ல; அவர் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு பயனை.

பொருளை விற்கிறோம் என்று நினைப்பவர்களுக்கு மார்க்கெட்டிங் இரண்டு படிகளை கொண்ட சமாச்சாரம் போல் தோன்றும்: பொருளை செய்வது. செய்த பொருளை விற்பது. இப்படி நினைப்பது தப்பாட்டம். தோல்வியை கேட்டு வாங்கும் தொலைபேசி அழைப்பு. பல பொருட்கள் விற்க முடியாமல் மார்க்கெட்டில் விக்கி, போட்டியில் சிக்கி, கடையில் மக்கி மண்ணாகிப் போகும் மூல காரணம்.

சில காலம் முன் ’டிவிஎஸ்’ கம்பெனி ’ஜைவ்’ என்ற ப்ராண்டை அறிமுகப்படுத்தியது. கியர் இல்லா பைக்குகள் என்றார்கள். அமோக டெக்னாலஜி, அமர்க்கள சவாரி, அட்டகாசமான வண்டி என்று அலறினார்கள். மக்களுக்கு அந்தச் சத்தம் கேட்டதா? பைக் பிடித்ததா?

க்ளட்சையும் கியரையும் சேர்த்து பிரயோகிக்கும் ஆனந்தத்தை தராத இதை வாங்குவதற்கு பதில் மொபெட் தேவலை என்று மக்கள் நினைத்தார்களோ என்னவோ, ஜைவ் பக்கம் யாரும் டைவ் அடிக்கவில்லை. வந்த சுவடு தெரியாமல் நொந்த ப்ராண்டானது ஜைவ்.

பொருளைச் செய், அதன் பின் விற்க முற்படு என்று மார்க்கெட்டிங்கை இரண்டு படிகளாகப் பார்த்ததால் பெற்ற அடி, விளைந்த சோகம், விதிக்கப்பட்ட சாபம் இது. இப்படி மார்க்கெட்டர் நினைப்பதால் தான் பொருள் வாடிக்கையாளருக்கு பயன்படுமா, அவர்களுக்கு தேவையா என்று சிந்திக்க மறக்கிறார்கள். தோல்வியடைகிறார்கள்.

மார்க்கெட்டிங் என்பது வாடிக்கையாளருக்கு தரும் ‘வேல்யூ என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் போது மார்க்கெட்டிங் மூன்று படிகள் கொண்டது என்பது விளங்கும்.

முதல் படி: வேல்யூவை தேர்ந்தெடுப்பது

வாடிக்கையாளருக்கு என்ன வேல்யூ தரவேண்டும் என்பதை முதலில் முடிவு செய்யவேண்டும். எந்த பயன் வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்யும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதை செய்ய நமக்கு தேவை வகைப்படுத்தல், குறி வைத்தல், இடம் பிடித்தல். அதாவது Segmentation, Targeting, Positioning (STP).

மார்கெட் என்பது பல வகை வாடிக்கையாளர்களால் ஆன ஒரு சங்கமம். அவர்கள் தேவைகள், குணாதிசயங்கள், விநோதங்கள் போன்றவற்றைக் கொண்டு பொருள் பிரிவை பல பிரிவுகளாக பிரிக்கலாம். பிரிக்க வேண்டும். இதன் பெயர் வகைப்படுத்தல். பின், போட்டியிட நினைக்கும் மார்க்கெட்டை தேர்ந்தெடுத்து அதிலுள்ள பிரிவுகளில் எந்தப் பிரிவை சேர்ந்த வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்ய முடியும் என்பதைக் கண்டறிய வேண்டும். இது தான் குறி வைத்தல். மூன்றாவதாக, தேர்ந்தெடுத்த பிரிவின் வாடிக்கையாளர்களின் பிரத்யேக தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ப்ராண்டை உருவாக்கி அதை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். இது தான் இடம் பிடித்தல்.

STP என்ற இந்த மூன்றின் கலவை தான் மார்கெடிங்கின் முதல் படி. அதாவது வேல்யூவை தேர்ந்தெடுப்பது. இதை எப்படி திறம்பட செய்வது என்பதை வரும்  இதங்களில் விரிவாகப் பார்ப்போம்.

இரண்டாவது படி: வேல்யூவை வடிவமைப்பது

என்ன வேல்யூ என்று முடிவு செய்த பின் அடுத்து தேர்ந்தெடுத்த வேல்யூவை பொருளாய் வடிவமைக்க வேண்டும். எந்த வாடிக்கையாளர்களை குறி வைத்தோமோ அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வேல்யூவை வடிவமைக்க வேண்டும். அதாவது அவர்களுக்கேற்ற பொருளை செய்யவேண்டும்.

ஆர்அண்ட்டி, பொருள் வடிவமைப்பு துறை, தயாரிப்பு நிர்வாகம், ஆபரேஷன்ஸ் டீம் அனைவரிடமும் ப்ராண்ட் ஐடியாவை விளக்கி ‘அவர்களை ஒரு சேர சிந்திக்க வைத்து ப்ராண்டை தயாரிக்க வேண்டும்.

மூன்றாவது படி: வேல்யூவை வழங்குவது

மார்க்கெட்டர் என்ற முறையில் நாம் வாடிக்கையாளருக்கு ஒரு வேல்யூ தருகிறோம். அடுத்து அவர் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய பொருளை தயாரிக்கிறோம். அதன் பின், அப்பொருள் வாடிக்கையாளருக்கு எளிதாகச் சென்றடையத் தேவையான விநியோக முறைகளை வரையறுக்க வேண்டும். அப்பொருள் என்ன விலை பெறும், என்ன விலை கொடுத்து வாங்க வாடிக்கையாளர் முன்வருவர் என்பதைக் கண்டறிந்து அப்பொருளுக்கு உண்டான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். இறுதியாக, அப்பொருளை வாடிக்கையாளருக்கு அறிமுகம் செய்து அவரைக் கவர்ந்து வாங்கச் செய்யத் தேவையான அனைத்து விற்பனை மேம்பாட்டுச் செயல்களைச் செய்ய வேண்டும்.

இந்த மூன்று படிகளைக் கொண்டது தான் மார்க்கெட்டிங்கின் புதிய பரிமானம். போட்டி மிகுந்த இன்றைய வியாபார சந்தையில் வெற்றி பெறுவதின் ரகசியம் இதுவே. அப்படி வெற்றிப் பெற்ற ஒரு ப்ராண்டை பார்போம்.

’ஸ்கூட்டி’. ஜைவ்வை அறிமுகப்படுத்தி தோல்வி கண்ட அதே ‘டீவிஎஸ்’ கம்பெனி தயாரிப்பு தான் இதுவும். மார்க்கெட்டில் சக்கைப் போடு போடுகிறது. ரோடெங்கும் சகட்டு மேனிக்கு ஓடுகிறது. பெண்களின் பேரதரவு பெற்று பெரு வாழ்வு வாழ்கிறது!

டீவிஎஸ் முதல் படியாக தாங்கள் தரப்போகும் வேல்யூவை தேர்ந்தெடுத்தது. எத்தனையோ வாடிக்கையாளர் பிரிவுகள் இருக்க, கல்லூரி செல்லும் பெண்களை தன் செக்மெண்டாய் தேர்வு செய்தது. மொபெட் என்பது ஆண்கள் ஓட்டும் வண்டியாய், சாமான் தூக்கவும், சரக்கேற்றவும் பயன்படும் வண்டியாய் போனதால் கல்லூரி பெண்களுக்கு நவீன வடிவில், சுகமாய் பிரயானிக்க ஏதுவான ஸ்கூட்டரெட் என்ற பொருள் வடிவை தேர்ந்தெடுத்தது.

ஸ்கூட்டரெட் என்பது மொபெட்டிற்கு ஒரு படி மேலே. ஆனால் ஸ்கூட்டருக்கு ஒரு படி கீழே. செய்யப் போகும் வண்டி பெண்களைக் கவரும் வண்ணம் அமைய ’எதற்கு மற்றவர்களை நம்பிக் கொண்டு, எங்கு செல்லவேண்டுமோ அங்கு நீங்களே செல்லலாம், உங்களை ஃப்ரீயாக்க வந்த உங்கள் தோழி இவள்’ என்ற தொனியில் பொசிஷனிங் செய்தது. க்யூட்டாக ஸ்கூட்டி என்று அதற்கு பெயரும் இட்டது.

அடுத்து, அந்த கனவு வண்டியை பெண்கள் கவரும் வண்ணம் தயாரித்தது. கல்லூரி பெண் என்பதால் அவர்களுக்கு பிடிக்கும் வண்ணம் பல வண்ணங்களில் தயாரித்தது. அதாவது தேர்ந்தெடுத்த வேல்யூவிற்கு ஏற்றபடி வடிவமைத்தது.

பின், அந்த வேல்யூவை வாடிக்கையாளருக்கு சரியான விலை கொண்டு, ஊரெங்கும் ஷோரூம் திறந்து, அவர்கள் மனதை கவரும் வண்ணத்தில் விளம்பரம் செய்து கொண்டு சேர்த்தது. பெண்களும் ஸ்கூட்டி தான் தங்கள் வாழ்வின் ப்யூட்டி என்று சீட்டி அடித்து வாங்க ப்ராண்டின் விற்பனை பட்டி தொட்டி எங்கும் பிய்த்துக்கொண்டு பறந்தது வெற்றிக் கொடி நட்டது.

வெற்றி பெற ப்ராண்டுகள் புரிந்துகொள்ள வேண்டியது மார்க்கெட்டிங்கின் இந்த புதிய பரிமானம். புரிந்துகொள்ளாமல் தொழில் செய்தால் ஜைவ் போல் பெறலாம் நெற்றியில் பெரு நாமம்!

மார்க்கெட்டிங் பற்றி முதல் போஸ்ட்டில் மேலோட்டமாக மேய்ந்தோம். இதில் ப்ராண்டிங் பற்றி பேசுவோம்.

விற்கும் பொருள், சேவை தான் ப்ராண்ட் என்றே பலர் நினைக்கிறார்கள். விற்பதால் மட்டுமே எந்த பொருளோ, சேவையோ ப்ராண்டாகாது. பெயர் வைத்து விற்பதாலும் அவை ப்ராண்ட் ஆகிவிடாது. வெறும் பெயர் வைப்பதல்ல ப்ராண்ட். ’சீயான் விக்ரம்’ சொல்வது போல் ப்ராண்ட் என்பது ’அதுக்கும் மேல’!

ப்ராண்ட் என்பது ஒரு பொருளையோ சேவையையோ தனியாய் இனங்கண்டு கொள்ளச் செய்து அப்பொருளை, சேவையை போட்டியாளர்களிடமிருந்து தனித்துப், பிரித்துக் காட்ட உதவும் பெயரோ, குறியீடோ, சின்னமோ, வடிவமைப்போ அல்லது இவற்றின் கலவை.

மூச்சு முட்ட முழுசாய் இப்படி முறையிட்டிருப்பது நானல்ல; அமெரிக்க மார்க்கெட்டிங் அசோசியேஷன் (AMA) என்னும் அமைப்பு,

ப்ராண்ட் என்பது வெறும் பொருள் அல்ல. பொருள் என்பது ஒரு பொருள் பிரிவை குறிப்பது. அவ்வளவே. ப்ராண்ட் என்பது நல்ல பொசிஷனிங் அமையப் பெற்று தனித்துவம் வாய்ந்து இருப்பது. விற்கும் பொருளிற்கு தெளிவான பயன் அளித்து அதை மற்ற பொருட்களிலிருந்து வித்தியாசப்படுத்தி தனித்துவமாய் செய்யும் போது தான் ப்ராண்ட் என்ற அந்தஸ்த்தைப் பெறுகிறது.

சோப் என்பது பொருள். ’லக்ஸ்’ என்பது ப்ராண்ட்.

சமையல் எண்ணெய் என்பது பொருள். ‘சஃப்போலா’ என்பது ப்ராண்ட்.

பாங்க் என்பது சேவை. ‘எல்ஐசி’ என்பது ப்ராண்ட்.

மல்டிப்ளெக்ஸ் என்பது அனுபவம். ‘சத்யம்’ என்பது ப்ராண்ட்.

பொருள் வகைகள் பல உண்டு. ஒவ்வொரு பொருள் வகையில் பல பொருட்கள் உண்டு. மற்ற பொருட்களிலிருந்து வித்தியாசப்பட்டு தெரியும் போது தான் எந்த பொருளும் ப்ராண்ட் ஆகிறது. சோப் என்ற பொருள் வகையில் ஏகப்பட்ட கிராக்கிகள் உண்டு. ஆனால் சினிமா ஸ்டார் போல் கவர்ச்சியான அழகு வேண்டும் என்று நினைக்கும் வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குவது லக்ஸ். குளிக்கும் சோப்பில் ஆரோக்கியம் வேண்டும் என்று தேடும் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுப்பது ‘லைஃப்பாய்’. ஹெர்பல் தான் எனக்கு ஏற்றது என்று எதிர்பார்ப்பவர்கள் ஏற்பது ‘ஹமாம்’. தனியாய், தனித்துவமாய் தெரிவதால் தான் இவை ப்ராண்டுகள் ஆகின்றன. வெற்றியும் பெறுகின்றன.

பொருள், சேவை, அனுபவம் எதுவாய் இருந்தாலும் ப்ராண்ட் செய்யப்படலாம். செய்யப்படவேண்டும். செய்யவில்லை என்றால் அது செய்வினை செய்யப்பட்டது போல் செத்துக் போகும். தியேட்டர் என்பது மக்களுக்கு அனுபவம் என்ற பயனைத் தருவது. சென்னையில் எத்தனையோ தியேட்டர், மல்டிப்ளெக்ஸ் இருந்தாலும் ’சத்யம் மல்டிப்ளெக்ஸை’ மக்கள் தேடிப் போய் பார்ப்பது சத்யம் வித்தியாசமாய் தெரிவதால். தனித்துவமாய் மிளிர்வதால்.

மக்கள் பொருளை வாங்குகிறார்கள்; ப்ராண்டை தேர்ந்தெடுக்கிறார்கள். அனைவரும் டூத்பேஸ்ட் வாங்குகிறோம். ஆனால் வெவ்வேறு ப்ராண்டுகளை தேந்தெடுக்கிறோம். அங்கு தானே வித்தியாசப்படுகிறோம். அந்த வித்தியாசம் தான் ப்ராண்ட். அப்படி வித்தியாசப்படுத்திக் காட்டுவது தான் ப்ராண்டிங்.

மாட்டுத் தீவனம் முதல் மைசூர்பாக்கு வரை, டியோடரண்ட் முதல் டிடெர்ஜண்ட், துணிக்கடை முதல் நகைக்கடை வரை விற்கும் எதையும் ப்ராண்ட் செய்யலாம். செய்யவேண்டும். செய்தால் தான் விற்கவே முடியும். அதற்குரிய அனைத்து செயல்களையும் செம்மையாய் செய்வதற்கு பெயர் தான் ப்ராண்டிங். அனைத்தயும் செவ்வனே செய்து, பக்குவமாய் பராமரித்து, பேனிப் பாதுகாப்பவரே மார்க்கெட்டர்.

வெறும் பெயர் வைப்பதல்ல ப்ராண்டிங் என்பதை உதாரணம் கொண்டு பார்ப்போம். தீப்பெட்டி பொருள் வகையிலுள்ள ப்ராண்டுகள் சிலதை கூறுங்கள், பார்ப்போம்?

என்ன, பெரியதாய் ஒன்றும் தோன்றவில்லையா? யோசித்தது போதும் விடுங்கள். ஷாம்பு பொருள் பிரிவிலுள்ள ப்ராண்டுகள் சிலதை கூறுங்கள் என்று நான் கேட்டிருந்தால் குறைந்தது பத்து ப்ராண்டுகளின் பெயர்களையாவது கூறியிருப்பீர்கள். கோலா, ஆயுள் காப்பீடு, பாங்க், கார் என்று எந்த பொருள் பிரிவை கேட்டிருந்தாலும் உங்களால் பல ப்ராண்டுகளின் பெயர்களை கூறியிருக்க முடியும்.

ஏன், வத்திப் பெட்டி பொருள் வகையை நினைத்தால் மட்டும் மனமும், மூளையும் நமுத்துப் போய் படீரென்று பற்ற மாட்டேன் என்கிறது?

வத்திப் பெட்டியில் ’மயில்’, ‘கடல்’, ‘புறா’, ‘ஸ்டார்’ என்று ஏகப்பட்ட பெயர்கள் உண்டு. பெயர் வைத்ததால் மட்டுமே இவை ப்ராண்டுகள் ஆவதில்லை. மற்ற வத்திப் பெட்டிகள் போலவே ஒவ்வொரு வத்திப்பெட்டியும் இருந்து தனித்துவமாய் தெரியாமல் கூட்டத்தோடு கோவிந்தா போட்டால் தனியாய் எப்படி தெரியும்? ப்ராண்ட் என்ற அந்தஸ்த்து பெற்று எப்படி எரியும்? திருப்பதி கோயில் வாசலில் நின்று பார்த்தால் எல்லா மொட்டைகளும் ஒன்று போல் தானே இருக்கும்? அதில் குறிப்பிட்ட ஒருவரை கண்டுபிடிப்பது என்பது சிரமமான காரியம் அல்லவா!

வத்திப்பெட்டியில் எப்படி தனியாய் தெரிவது? வித்தியாசப்பட்டு நிற்பது என்று தானே நினைக்கிறீர்கள்?

முடியும். முடிந்திருக்கிறது. வாடிக்கையாளருக்கு மற்ற தீப்பெட்டி அளிக்காத பயனை அளிக்கும் போது ஒரு வத்திப் பெட்டியால் மட்டும் தனியாய் நிற்க முடிந்திருக்கிறது. ப்ராண்டாய் பரிமளிக்க முடிந்திருக்கிறது. அந்த ப்ராண்ட் பெயர் ‘ஹோம் லைட்ஸ்’.

பெரிய சைஸ் தீப்பெட்டி. அதனால் மற்ற தீப்பெட்டிகளை விட எளிதாக பிடித்து,  பெண்கள் அடுப்பை ஏற்ற முடிகிறது. அடுப்பை என்ன, அடுக்குமாடி கட்டிடத்தையே ஏற்றலாம். அத்தனை பெரிய வத்திப் பெட்டி. குச்சிகள் பெரியதாக தடிமனாக இருக்கும். அதனால் ஐந்து முகங்களை கொண்ட குத்து விளக்கைக் கூட கை விரலை சுட்டுக்கொள்ளாமல் சுகமாய், சௌகரியமாய் ஏற்றலாம். வத்திப் பெட்டியின் மீது ரேடியம் ஒட்டப்பட்டிருக்கும். அதனால் கரண்ட் போனால் கூட இருட்டில் அந்த தீப்பெட்டி பளிச்சென்று கண்ணுக்குத் பிரகாசமாய் தெரியும்.

வாடிக்கையாளர்களுக்கு தேவையான இத்தனை வசதிகளோடு ‘விம்கோ’ என்ற நிறுவனத்தால் ஹோம் லைட்ஸ் என்று பெயர் கொண்டு அறிமுகப்படுத்தபட்டது இந்த ப்ராண்ட். இன்று மார்கெட்டில் ஜகத்ஜோதியாய் கொழுந்து விட்டு எரிகிறது. ஒரு சாதாரன தீப்பெட்டியை ப்ராண்ட் செய்ய முடியுமா என்று யோசித்தீர்களே, அதே தீப்பெட்டியை ப்ராண்டாக்க முடியும், இதோ இப்படித் தான் ஆக்கியிருக்கிறோம் என்று அழகாய் காட்டியிருக்கிறது விம்கோ. ப்ராண்டிற்கு தனியாய் ஒரு ஐடெண்ட்டி தந்து. மற்ற வத்திப் பெட்டிகளிலிருந்து வித்தியாசப்படுத்தி. வாடிக்கையாளர்களுக்கு வசதிகள் வழங்கி.

சாதாரண பொருளாய், வெறூம் ஒரு பெயராய் இருந்த ஒரு ஆர்டினரி தீப்பெட்டியை ப்ராண்டாக்கி வெற்றிப் பெற்றதன் அடையாளம் தான் ஹோம் லைட்ஸின் அதிக விலை. மற்ற தீப்பெட்டிகள் ஒரு ரூபாய்க்கு விற்க ஹோம் லைட்ஸின் விலை ஐந்து ரூபாய். அதாவது ஐந்து மடங்கிற்கு அதிகமான லாபம். ‘தீப்பெட்டி கொடுப்பா’ என்று பொதுவாய் கடைக்காரரிடம் கேட்டவர்கள் இன்று ‘ஹோம் லைட்ஸ் கொடுப்பா’ என்று கேட்டு வாங்கிச் செல்கின்றனர்.

இது தான் ப்ராண்ட். இதற்குத் தான் ப்ராண்டிங். இதுவே வெற்றிக்கு வழி.